தமிழ்நாட்டில் சிறப்பு வாக்காளர் திருத்தப் பட்டியல் குறித்து தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. இந்நிலையில், திமுக இந்த நடவடிக்கையை வாக்காளர்களின் உரிமையை பறிக்கும் நடவடிக்கை என விமர்சித்திருக்கும் நிலையில், அதிமுக S.I.R ஐ வரவேற்றிருக்கிறது.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தமிழக உள்ளிட்ட 12 மாநிலங்களுக்கு சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளுக்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்துள்ளது. அதன்படி, நவம்பர் 4 ஆம் தேதி முதல் டிசம்பர் 4 ஆம் தேதி வரை வரை வாக்காளர்கள் இல்லங்களுக்குச் சென்று வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் நடவடிக்கை நடைபெறும். டிசம்பர் 9 முதல் ஜனவரி 8, 2026 வரை ஆட்சேபனைகள் மற்றும் உரிமைகோரல்களை தெரிவிக்கலாம்.
பின்னர், ஜனவரி 31ஆம் தேதி வரை வாக்காளர்களின் குறைகளை கேட்கும் நடவடிக்கைகள் மற்றும் அவர்களுடைய விண்ணப்பங்களை சரி பார்க்கும் நடவடிக்கைகள் நடைபெறும். இறுதியாக பிப்ரவரி 7-ம் தேதி அன்று சரிபார்க்கப்பட்ட வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் எனவும் தேர்தல் ஆணையம் தரப்பிலிருந்து தெரிவிக்கபட்டிருக்கிறது.

தேர்தல் ஆணையம், வாக்காளர் பட்டியல்
ஏற்கனவே, பிகாரில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம் நடைபெற்றுள்ள நிலையில், அங்கு 30 லட்சத்திற்கு மேற்பட்ட வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இதற்கு, காங்கிரஸ் உள்ளிட்ட இண்டியா கூட்டணி கட்சிகள் வாக்களர்களின் உரிமைகளை பறிக்கும் நோக்கில் பாஜக-வும் தேர்தல் ஆணையமும் செயல்பட்டு வருவதாக குற்றஞ்சாட்டி வந்தன. இந்நிலையில் தான் தமிழ்நாட்டிலும் வாக்காளர் சிறப்பு திருத்தப் பணிகளை தொடங்கவிருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், தமிழ்நாடு அரசியல் தலைவர்கள் சிலர் வரவேற்பையும் சிலர் கண்டனத்தையும் தெரிவித்துள்ளனர். அது குறித்துப் பார்க்கலாம்
S.I.R குறித்து அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம் !
தமிழ்நாட்டில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார். அதில், “ தேர்தலுக்கு மிக நெருக்கத்தில், அதுவும் பருவமழைக் காலமான நவம்பர், டிசம்பர் மாதங்களில் S.I.R மேற்கொள்வது நடைமுறைச் சவால்கள் நிறைந்தது. அவசரகதியில் செய்யப்படும் S.I.R நடவடிக்கை மக்களின் வாக்குரிமையைப் பறித்து, பா.ஜ.க.வுக்குச் சாதகமாகத் தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படும் சதியாக அமைந்துள்ளது.
ஏற்கெனவே, பீகாரில் பெண்கள், சிறுபான்மையினர், பட்டியல் – பழங்குடியின மக்கள் உள்ளிட்டோர் அதிக அளவில் வாக்காளர் பட்டியிலில் இருந்து நீக்கப்பட்டதுடன், இந்த நடவடிக்கைகளில் வெளிப்படைத்தன்மை இல்லாததும் சேர்ந்து, கடும் ஐயத்தை அனைவரது மனதிலும் எழுப்பியிருக்கிறது.
தமிழ்நாட்டில் அடுத்த வாரம் முதல் SIR மேற்கொள்ளப்படும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில், கூட்டணிக் கட்சிகளுடன் கலந்து பேசியிருக்கிறோம். அதனடிப்படையில் வரும் நவம்பர் 2 அன்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளையும் அழைத்து, அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கக் கூட்டம் நடத்தப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
அதிமுக வரவேற்பு !
வாக்காளர் சிறப்புத் திருத்தம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அதிமுக அமைப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் “வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை அ.தி.மு.க முழு மனதுடன் வரவேற்கிறது. மேலும், சிறப்பு தீவிர திருத்தத்தை தேர்தல் ஆணையம் வெளிப்படையாகவும் முறையாகவும் செய்ய வேண்டும்.
தற்போதைய வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடிகள் அனைத்தையும் சரி செய்ய வேண்டும். வாக்காளர் திருத்தப் பணிகளை மாநில அரசின் கீழுள்ள அலுவலர்கள்தான் செய்யப்போகிறார்கள் என்பதால், அவர்கள் நடுநிலையோடு செயல்படுவதை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும். தங்களுக்கான தலைவர்களை தேர்ந்தெடுக்கும் உரிமை உண்மையான வாக்காளர்களுக்குதான் தரப்பட வேண்டும்”
