இன்று காலைக்குள் மோன்தா புயல் தீவிர புயலாக வலுப்பெறும் வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது மோன்தா புயலானது தீவிரப்புயலாக வலுப்பெற்றுள்ளது.
Summary
மோன்தா புயல் தீவிரமாக வலுப்பெற்று, காக்கிநாடா அருகே கரையை கடக்கவுள்ளது. 100 கிமீ வேகத்தில் காற்று வீசும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் ஆந்திராவில் கனமழைக்கான வாய்ப்பு இருக்கிறது. புயல் காக்கிநாடா நோக்கி நகருவதால் சென்னையில் மழை தாக்கம் குறையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள மோன்தா புயல் தீவிர புயலாக வலுப்பெற்றது. காக்கிநாடாவுக்கு தெற்கே தென்கிழக்கே 270 கிமீ தொலைவில் மோன்தா மையம் கொண்டுள்ளது. இன்று மாலை அல்லது இரவு நேரத்தில் காக்கிநாடாவுக்கு அருகே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. கரையைக் கடக்கும்போது 100 கிமீ வேகத்தில் காற்று வீசும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக புதிய தலைமுறையிடம் பேசிய சுயாதீன வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன், “தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலவி வந்த மோன்தா புயல் இன்று காலை 5.30 மணி நிலவரப்படி திவிர புயலாக வலுப்பெற்றுள்ளது.
இந்த தீவிரப் புயல் தொடர்ந்து வடக்கு வடமேற்கு திசையில் காக்கிநாடாவை நோக்கி நகர்ந்து வருகிறது. கரையைக் கடக்கும் காக்கிநாடாவில் இருந்து கிழக்கே தென்கிழக்கே 270 கிமீ தொலைவில் புயல் மையம் கொண்டிருக்கிறது. புயலானது 15 முதல் 20 கிமீ வேகத்தில் புயலானது நகர்ந்து வருகிறது. இன்று மாலை அல்லது இரவு நேரத்தில் காக்கிநாடா அல்லது அமலாபுரம் பகுதிகளை மையமாகக் கொண்டு இந்த தீவிர புயல் கரையைக் கடக்க இருக்கிறது.
இதன் காரணமாக ஆந்திர பகுதிகளில் காலை முதலே மழையின் தாக்கம் அதிகமிருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது. வரக்கூடிய 24 மணி நேரத்திற்குள் ஆந்திராவின் கடலோர பகுதிகளில் கன முதல் மிக கனமழையும், விஜயவாடா, ஓம்கூர், மசூலிப்பட்டினம், காக்கிநாடா போன்ற பகுதிகளில் அதீத கனமழையையும் எதிர்பார்க்க முடியும்.

புயல்
சென்னையைப் பொறுத்தவரை நேற்று காலை முதலே தொடர் கனமழை பதிவாகிக்கொண்டு இருக்கிறது. குறிப்பாக வடசென்னை பகுதிகளில் பரவலாக கனமழையும் பதிவாகியிருக்கிறது. அதிகபட்சமாக எண்ணூர் பகுதிகளில் 12 செமீ அளவிற்கு மிககனமழை பதிவாகியிருக்கிறது. இத்தகைய சூழலில் புயல் வடக்கு பகுதியில் காக்கிநாடாவை நோக்கி நகருவதன் காரணமாக சென்னையில் மழையின் தாக்கம் இன்று பிற்பகலுக்குப் பிறகு படிப்படியாகக் குறையும். பிற்பகல் வரையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் லேசான மழை தொடருவதற்கான சூழல் உள்ளது” எனத் தெரிவித்தார்.
மோன்தா புயல் ஆந்திராவில் கரையை கடக்கும் சூழலில், திருவள்ளூர் மாவட்டத்திற்கு இன்று ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. மோன்தா புயல் காக்கிநாடா அருகே கரையை கடக்கும் நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் மிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதேசமயம், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களிலும், தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களிலும், கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது.
