நான் சராசரி மனிதரை விட அதிகம் நான் உழைக்கிறேன். ஆனால் நடிகர்களை அப்படி செய்ய வைக்காதீர்கள். வெறும் நடிகர்கள் என கிடையாது, இயக்குநர், லைட்மேன், இசை என அனைவரின் வேலை நேரத்தையும் ஒழுங்குபடுத்துங்கள்.
ராஷ்மிகா மந்தனா நடிப்பில் ராகுல் ரவீந்திரா இயக்கியுள்ள தெலுங்குப் படம் `தி கேர்ள் ஃப்ரெண்ட்’. இப்படம் நவம்பர் 7ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இப்படத்திற்கான புரமோஷன் பேட்டி ஒன்றில் வேலை நேரம் குறித்து ராஷ்மிகா பேசி உள்ளது கவனிக்கப்படுகிறது.
இந்தப் பேட்டியில் ராஷ்மிகாவிடம் “வேலை மற்றும் வாழ்க்கையை எப்படி சமமாக கையாளுகிறீர்கள்?” எனக் கேட்கப்பட்ட போது, “அதிக நேரம் வேலை செய்வதை பெருமைக்குரிய விஷயமாக சொல்வது நல்லதல்ல என நினைக்கிறேன். நான் அதிகமாக வேலை செய்கிறேன். ஆனால் இதை நான் மற்றவர்களுக்கு பரிந்துரைக்க மாட்டேன். இதை செய்யாதீர்கள். அது நிலையானது அல்ல. உங்களுக்கு ஏற்ற விஷயங்களை, சரியான விஷயங்களை செய்யுங்கள். 10 மணிநேரம் கூட வேலை செய்யுங்கள், அது உங்களை எதிர்காலத்தில் பாதுகாக்கும். ஆனால் சமீப காலமாக வேலை நேரம் பற்றிய பேச்சுக்கள் எழுந்திருக்கிறது. கண்டிப்பாக நாம் ஏற்றுக் கொண்ட ஒரு வேலையை முடிக்க வேண்டியது நம் பொறுப்பு தான்.
ஆனால் நான் சராசரி மனிதரை விட அதிகம் நான் உழைக்கிறேன். ஏனென்றால் சில சமயம் என்னுடைய குழுவுக்கு அந்த லொகேஷன் மீண்டும் கிடைக்காது, இன்று இத்தனை காட்சிகளை முடிக்க வேண்டும் என்ற சிக்கல் வரும். அதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. பல நாட்கள் அப்படித்தான் இயங்க வேண்டி இருக்கும். ஆனால் நடிகர்களை அப்படி செய்ய வைக்காதீர்கள். வெறும் நடிகர்கள் என கிடையாது, இயக்குநர், லைட்மேன், இசை என அனைவரின் வேலை நேரத்தையும் ஒழுங்குபடுத்துங்கள்.
9 – 6 அலுவலக நேரம் என்பது போல எங்களுக்கும் ஒரு நேரத்தை முடிவு செய்து அதற்குள் பணிகளை முடியுங்கள். எங்களுக்கும் குடும்பத்துடன் நேரம் செலவிட வேண்டும், எனக்கும் முறையாக தூங்க வேண்டும், உடற்பயிற்சி மற்றும் ஆரோக்யத்தில் கவனம் செலுத்த வேண்டும். என்னுடைய எதிர்காலம் குறித்து யோசிக்க வேண்டும். ஆனால் இதை எல்லாம் இப்போது என்னால் செயல்படுத்த முடியவில்லை, நானே எனக்கு நிறைய சுமைகளை ஏற்றிக் கொண்டிருக்கிறேன்.” என்றார்.
சில தினங்களுக்கு முன் இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தயாரிப்பாளர் ஸ்ரீனிவாஸ் குமார் என்ற SKN பேசிய போது “எவ்வளவு நேரம் வேலை செய்ய வேண்டும்? என்பதில் விவாதங்கள் நடக்கும் இந்த காலத்தில், எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் வேலை செய்வேன் எனும் ஒரே ஒரு Pan India நடிகை ராஷ்மிகா தான். அவர் வேலையை நேரத்தை வைத்து அளவிட மாட்டார், அன்பை வைத்து அளவிடுவார். அன்புக்கு நேரம் காலம் இருக்காது.” எனப் பேசி இருந்தார். இந்த பேச்சின் மூலம் பாலிவுட் நடிகை தீபிகா வேலை நேரம் குறித்து பேசியதை சீண்டலாக பேசி இருக்கிறார் SKN என சொல்லப்பட்டது. இப்போது அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாகவும், வேலை நேரம் குறித்த தீபிகாவின் கருத்தோடு ஒத்துப் போகும் கருத்தையே ராஷ்மிகாவும் தெரிவித்திருக்கிறார்.
