“தொடர் மழையால், விவசாயிகளின் கடின உழைப்பால் விளைவிக்கப்பட்ட நெல்மணிகள் முதல்முறை வீணான போதே துரிதமாகச் செயல்பட்டு எஞ்சிய நெல் மணிகளை தமிழக அரசு பாதுகாத்திருக்க வேண்டாமா?” – விஜய்
Summary
தவெக தலைவர் விஜய், தி.மு.க. அரசின் அலட்சியத்தால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார். மழையால் நெல்மணிகள் வீணாகியதற்காக தி.மு.க. ஆட்சியாளர்களை மக்கள் விரைவில் வீட்டுக்கு அனுப்புவார்கள் என தெரிவித்துள்ளார்.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்குப் பிறகு, தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பிலோ அல்லது அக்கட்சியின் தலைவர் விஜய் தரப்பில் இருந்தோ எந்த ஒரு அறிவிப்புகளோ அறிக்கைகளோ வெளியாகாமல் இருந்தது. ஒட்டுமொத்த கட்சியுமே அமைதியாக இருந்தது. இது பல்வேறு தரப்பினரிடமிருந்தும் கடுமையான விமர்சனங்களைப் பெற்றுக்கொடுத்தது.
இந்நிலையில்தான், நேற்று கரூரில் உயிரிழந்தவர்களின் உறவினர்களை மாமல்லபுரம் அருகேயுள்ள தனியார் நட்சத்திர விடுதியில் சந்தித்த விஜய் அவர்களுக்கு ஆறுதல் கூறினார். கூட்ட நெரிசல் சம்பவத்திற்காகவும், கரூரில் நேரில் வந்து ஆறுதல் தெரிவிக்க முடியாததற்காகவும் அவர்களிடம் விஜய் மன்னிப்பு கோரியதாக தகவல்கள் வந்தது.
இந்நிலையில், தவெக தலைவர் விஜய் தரப்பில் இருந்து அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. தொடர் மழையால் நெல்மணிகள் வீணாகி வருவதைக் குறிப்பிட்டு விஜய் அறிக்கையை வெளியிட்டிருக்கிறார். கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு விஜயிடம் இருந்து அறிக்கை ஒன்று வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தொடர் மழையால், விவசாயிகளின் கடின உழைப்பால் விளைவிக்கப்பட்ட நெல்மணிகள் முதல்முறை வீணான போதே துரிதமாகச் செயல்பட்டு எஞ்சிய நெல் மணிகளை தமிழக அரசு பாதுகாத்திருக்க வேண்டாமா?
வெற்று விளம்பரத்திற்காக நானும் டெல்டாக்காரன்தான் எனப் பெருமைபேசிவரும் திரு. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசிற்கு ஏழை விவசாயிகள் சார்பாக நாம் முன் வைக்கும் ஒரு சில வினாக்கள்.

நெல் மூட்டைகள்., கோப்புப்படம்
டெல்டா விவசாயிகள் கஷ்டப்பட்டு உழைத்து விளைவித்த நெல்மணிகளை உரிய நேரத்தில், உரிய விலைகொடுத்துக் கொள்முதல் செய்யாமல் அவர்களின் வாழ்வாதாரத்தை வீணாக்கியதன் கரணம் என்ன?
பருவமழை என்பது ஒவ்வோர் ஆண்டும் பெய்யக் கூடியது. இந்தப் பருவமழையை நம்பியே விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். அப்படியிருக்க, அந்தப் பருவமழையினால் விவசாயப் பயிர்கள் மற்றும் விளைநிலங்கள் சேதமடையாமல் இருக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன?
அதிக மழைப் பொழிவு இருந்தாலும் விவசாய நிலத்தில் பயிர்கள் மூழ்காதபடி போதுமான தண்ணீரைத் தவிர்த்து, அதிகப்படியான தண்ணீர் விவசாய நிலங்களில் இருந்து தானாகவே வெளியேறி, சேமித்து வைக்கப்பட வேண்டிய நீர்நிலைகளைச் சென்றடைய, போதுமான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளனவா?
விளைவிக்கப்பட்ட நெல் உள்ளிட்ட தானியங்கள் மழையில் நனைந்து வீணாகாமல், நல்லமுறையில் பாதுகாப்பாக சேமித்து வைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன?

ஒவ்வோர் ஆண்டும் நெல்மணிகள் மழையில் நனைந்து வீணாகின்றனவே, அதைப் பார்த்தாவது, அடுத்த ஆண்டாவது நெல்மணிகள் மழையில் நனையாமல் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எண்ணம் வரவில்லையா? இல்லையெனில் நெல் உள்ளிட்ட தானியங்கள் வீணாகட்டும், விவசாயிகளின் வாழ்வு பாதிக்கப்படட்டும், அதனால் நமக்கென்ன? என்று தெரிந்தே ஒவ்வோர் ஆண்டும் கடந்து போகிறதா இந்த அரசு?
கடந்த சில நாட்களாக பெய்த மழையால், நெல்மணிகள் நனைந்து வீணாகியதற்கும், அதை விளைவித்த விவசாயிகளின் வேதனைகளுக்கும் திரு. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு என்ன பதில் சொல்லப் போகிறது?
விவசாயிகள் கஷ்டப்பட்டு உழைத்து விளைவித்த நெல்மணிகள் இந்த வெற்று விளம்பர திமுக அரசின் அலட்சியத்தால் மழையில் நனைந்து வீணாகி, மூட்டையிலேயே முளைத்துள்ளன. அதைப் போல், தமிழ் நாட்டு மக்கள் மனங்களில் முளைத்து வளர்ந்து செழித்து நிற்கும் அரசு மீதான எதிர்ப்பு இன்னும் வலுவாகி, வெகுஜன மக்கள் விரோத தி.மு.க. ஆட்சியாளர்களை வீட்டுக்கு அனுப்பப் போவது உறுதி!” என்று குறிப்பிட்டுள்ளார்.
