2026 டி20 உலகக்கோப்பையை வெல்வதற்கு இந்திய தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு வருவதாக கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.
Summary
2026 டி20 உலகக்கோப்பையை வெல்ல இந்திய அணி தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறது. கேப்டன் சூர்யகுமார் யாதவ், அணியின் ஃபீல்டிங் குறைகளை சரிசெய்வதில் கவனம் செலுத்தி வருவதாக கூறியுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர் போட்டிகளுக்கு முன், இந்திய அணி தனது பிழைகளை சரிசெய்ய முயற்சிக்கிறது.
2026 டி20 உலகக்கோப்பை தொடரானது எதிர்வரும் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் இந்தியா மற்றும் இலங்கையில் நடக்கவிருக்கிறது.

சூர்யகுமார் யாதவ்
20 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் 2024 டி20 உலகக்கோப்பை வென்ற நடப்பு சாம்பியனாக இந்தியா பங்கேற்க உள்ளது. சூர்யகுமார் யாதவ் தலைமையில் வெற்றியை மலைபோல குவித்துவரும் இந்திய அணி, டி20 வடிவத்தில் நம்பர் 1 அணியாக இருந்தபோதும் தங்களுடைய குறைகளை சரிசெய்வதில் கவனம் செலுத்திவருகிறது.

இந்தியா எக்ஸ் தளம்
இந்நிலையில் நாளை ஆஸ்திரேலியா உடன் நடக்கவிருக்கும் முதல் டி20 போட்டிக்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் அணியில் இருக்கும் பிரச்னைகளை சரிசெய்வது குறித்து பேசியுள்ளார்.
ஃபீல்டிங்கில் இந்திய அணி செயல்பட்டுவருகிறது..
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர் நாளை தொடங்குகிறது. கான்பெரா மைதானத்தில் நடக்கவிருக்கும் முதல் டி20 போட்டி இந்திய நேரப்படி நாளை மதியம் 1.45 மணிக்கு தொடங்குகிறது.
அதற்கு முன்பாக செய்தியாளர்களை சந்தித்த இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ், டி20 உலகக்கோப்பைக்கு முன்பாக இந்திய அணியில் இருக்கும் ஃபீல்டிங் குறைகளை சரிசெய்துவருவதாக கூறினார். நடப்பாண்டில் மட்டும் இதுவரை 12 கேட்ச்களை கோட்டைவிட்டிருக்கும் இந்திய டி20 அணி, கேட்ச்களை பிடிக்கும் சதவீதத்தில் 82.7% உடன் 5வது அணியாக பட்டியலில் நீடிக்கிறது.

சூர்யகுமார் யாதவ்
இந்தசூழலில் அணியில் இருக்கும் பிரச்னை குறித்து பேசிய சூர்யகுமார், ”என்னைப் பொறுத்தவரை, கேட்சுகள் தவறவிடப்படும். நீங்கள் ஒரு ஃபீல்டராக இருந்தால் கேட்ச்சை பிடிப்பீர்கள், அதேபோல தவறவிடவும் செய்வீர்கள்.. பேட்ஸ்மேன், பவுலர் அனைவருக்கும் சிறப்பான மற்றும் மோசமான நாள் இரண்டும் இருக்கும். நன்றாக பந்துவீசியபோதும் உங்களுக்கு விக்கெட் வீழ்த்தும் வாய்ப்பு கிடைக்காமல் போகும், இவை அனைத்தும் விளையாட்டின் ஒரு பகுதி.
ஆனால் அதற்காக நீங்கள் கேட்ச்சை விட்டால் சரியென்று அர்த்தமில்லை, கேட்ச்சை தவறவிட்ட பிறகு நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பது தான் முக்கியமானது. இன்று அனைத்து வீரர்களும் பீல்டிங் செய்ய வந்தார்கள். அதாவது அணி உண்மையிலேயே ஃபீல்டிங்கில் சிறப்பு வாய்ந்த ஒன்றை நோக்கிச் செயல்படுகிறது. நீங்கள் உலகின் சிறந்த பீல்டிங் பிரிவாக இருக்க வேண்டுமென்றால் நாம் கடினமாக உழைக்க வேண்டும். எத்தனை அணிகள் நல்ல கேட்சுகளைப் பிடிக்கின்றன, நல்ல பீல்டிங் செய்கின்றன, பீல்டிங் மூலம் போட்டிகளை வெல்கின்றன என்பதை நாம் பார்க்கிறோம். எனவே பேட்டிங் சுமாராக இருந்தால், பந்துவீச்சு இங்கே மற்றும் அங்கே என்று இருக்கும் சமயத்தில், உங்களால் ஃபீல்டிங்கில் சிறப்பாக செயல்படமுடிந்தால் போட்டியை வெல்ல முடியும். எனவே நாங்கள் அதற்காக கடினமாக உழைக்கிறோம்” என்று சூர்யகுமார் யாதவ் பேசியுள்ளார்.
ஸ்ரேயாஸ் ஐயர் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், ஸ்ரேயாஸ் நன்றாக குணமடைந்து வருகிறார், எங்களுடன் தொலைபேசியில் பேசினார். அதன்மூலம் அவர் முற்றிலும் நலமாக இருக்கிறார் என்று அர்த்தம். நடந்தது துரதிர்ஷ்டவசமானது, ஆனால் மருத்துவர்கள் அவரை நன்றாக கவனித்துக்கொள்கிறார்கள். அடுத்த சில நாட்களுக்கு அவர் கண்காணிக்கப்படுவார், ஆனால் கவலைப்பட ஒன்றுமில்லை” என பேசியுள்ளார்.
