அதிமுக ஒன்றிணைவது குறித்து கட்சி தலைமைக்கு பத்து நாட்கள் கெடு விதிக்கவில்லை எனவும், ஊடகங்கள் தான் அதனை தவறாக போட்டுவிட்டனர் எனவும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
Summary
அதிமுகவை ஒருங்கிணைக்கும் முயற்சியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஈடுபட வேண்டும் எனவும், அதற்கு 10 நாட்கள் கெடு விதிப்பதாகவும் செங்கோட்டையன் கடந்த செப்டம்பர் 5-ம் தேதி செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்திருந்தார்.

எடப்பாடி பழனிசாமி – செங்கோட்டையன்
செங்கோட்டையனின் இந்த கருத்தை முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் உட்பட அதிமுகவில் பிரிந்து சென்றவர்கள் வரவேற்ற நிலையில், இந்த கருத்தை தெரிவித்த அடுத்த நாளே எடப்பாடி பழனிசாமி முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை அதிமுகவின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கி உத்தரவிட்டார்.
இதனையத்து, டெல்லி சென்ற செங்கோட்டையன் அமித் ஷாவை சந்தித்து அதிமுக ஒருங்கிணைப்பு குறித்து பேசினார். தொடர்ந்து அவர் ஓ.பன்னீர்செல்வத்தையும் சந்தித்து பேசியதாக செய்திகள் வெளியானது.
இந்த சூழலில் அரசியல் களத்தில் அடுத்து என்ன நடக்கும் என்ற சூடு இருந்துவரும் நிலையில், தற்போது செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன் அதிமுக தலைமைக்கு 10 நாட்கள் கெடு விதிக்கவில்லை என பேசியுள்ளார்..
10 நாட்கள் கெடு விதித்தது குறித்த செய்தியாளர் கேள்விக்கு பதிலளித்த செங்கோட்டையன், நான் பத்து நாள் கெடு விதிக்கவில்லை, பத்து நாட்களில் பேச்சுவார்த்தை துவங்க வேண்டும், ஒரு மாதத்திலோ அல்லது ஒன்றரை மாதத்திலோ முடிவெடுக்க வேண்டும் எனவே தெரிவித்தேன். ஆனால் ஊடகத்தில் தான் தவறாக போட்டுவிட்டனர் என பதிலளித்தார். மேலும் அதிமுக ஒன்றிணைப்பு குறித்த கேள்விக்கு விரைவில் நல்லது நடக்கும் என்று கூறினார்.
