உத்தர பிரதேசத்தில் 10 வயது சிறுவன் பாம்பு கடித்து உயிரிழந்தபோதும் அவரை உயிரோடு கொண்டுவருவோம் எனக்கூறி 3 நாட்கள் சடலத்தை வைத்து மாந்திரீகம் மற்றும் சடங்குகளைச் செய்த குடும்பத்தின் செயல் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Summary
உத்தர பிரதேசத்தில் 10 வயது சிறுவன் பாம்பு கடித்து உயிரிழந்தபோதும் அவரை உயிரோடு கொண்டுவருவோம் எனக்கூறி 3 நாட்கள் சடலத்தை வைத்து மாந்திரீகம் மற்றும் சடங்குகளைச் செய்த குடும்பத்தின் செயல் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . என்ன நடந்தது..? விரிவாகப் பார்க்கலாம்.
உத்தரப் பிரதேச மாநிலம் கைராஸ் மாவட்டம், கோட்வாலி ஹசாயன் பகுதியில் உள்ள இடர்னி கிராமத்தைச் சேர்ந்தவர் 10 வயதான கபில் என்னும் சிறுவன். தனது வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்தபோது சிறுவனை பாம்பு ஒன்று கடித்துள்ளது. இதனைக் கண்ட அவரது குடும்பத்தினர் உடனடியாக சிறுவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

பாம்பு
ஆனால் சிறுவனைப் பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். ஆனால் அதனை ஏற்றுக்கொள்ள முடியாத குடும்பத்தினர், அவரை எப்படியாவது மீண்டும் உயிரோடு கொண்டுவர வேண்டும் என எண்ணி அவரின் சடலத்தோடு மீண்டும் வீடு திரும்பியுள்ளனர்.
பின்னர், உள்ளூர் ‘மாந்த்ரீகவாதிகளை’ வரவழைத்து, அவர்கள் முன்னிலையில் கபிலின் சடலத்தின் மீது மூன்று நாட்களாக இடைவிடாமல் ‘ஜாட்-ஃபூங்க்’ என்று கூறப்படும் மாந்த்ரீகம் மற்றும் சடங்குகளை செய்து வந்துள்ளனர். சிறுவனை மீண்டும் உயிர்ப்பிக்க முடியும் என்ற நம்பிக்கையில், சடலத்தின் மீது மரக்கிளைகளால் அடித்து, சடங்குகளைச் செய்ததாகத் கூறப்படுகிறது.

மூன்று நாட்களுக்குப் பிறகும் சிறுவனின் உடலில் எந்த அசைவும் இல்லாததைக் கண்ட பின்னரே, குடும்பத்தினர் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை, சிறுவனின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்விற்காக அனுப்பி வைத்தனர்.
பின்னர் இந்த சம்பவம் குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர். மூட நம்பிக்கையால் சிறுவனின் சடலத்தை வைத்து குடும்பத்தினர் நடத்திய இந்த வினோத சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது
