தூய்மைப் பணியாளர்களுக்கு 3 வேளையும் கட்டணமில்லா உணவு வழங்குவது தொடர்பான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
Summary
தூய்மைப் பணியாளர்களுக்கு தமிழக அரசு கொடுத்த ஆறு அறிவிப்புகளில் ஒன்றான, தூய்மைப் பணியாளர்களுக்கு 3 வேளையும் கட்டணமில்லா உணவு வழங்குவது தொடர்பான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
சென்னை மாநாகராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள் கடந்த ஆகஸ்ட் மாதம், பணி நிரந்தரம் கோரியும், தூய்மை பணியாளர்களை தனியாருக்கு கொடுப்பதை எதிர்த்தும், சென்னை மாநாகராட்சி அலுவலகம் முன்பு தூய்மைப்பணியாளர்கள் 13 நாட்களுக்கு இரவு பகலாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, ஆகஸ்ட் 13 அன்று நள்ளிரவு போராட்டம் நடத்திய தூய்மைப்பணியாளர்களை காவல்துறையின் மூலம் வலுக்கட்டாயமாக கைது செய்தது தமிழக அரசு. தமிழக அரசின் இந்த கைதுக்கு தமிழகம் முழுவதும் எதிர்ப்பு கிளம்பியிருந்தது.
இதையடுத்து, நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் தூய்மைப்பணியாளர்களுக்கு காப்பீட்டுத் திட்டம், உணவு வழங்கும் திட்டம் உட்பட ஆறு அறிவிப்புகளை வெளியிட்டிருந்தது தமிழக அரசு. அதன் தொடர்ச்சியாக, இன்று தூய்மைப் பணியாளர்களுக்கு 3 வேளையும் கட்டணமில்லா உணவு வழங்குவது தொடர்பான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
அந்த அரசாணையில், “தூய்மைப்பணியாளர்கள் தங்களது பணியை அதிகாலையில் மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலையில், காலை உணவு சமைப்பதற்கும், அதை பணிபுரியும் இடத்துக்கு கொண்டு வந்து அருந்துவதற்கும் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர். இப்பிரச்சினைகளுக்கு தீர்வாக நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளால் இலவசமாக உணவு வழங்கப்படும் “ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இத்திட்டம் முதற்கட்டமாக சென்னை மாநகராட்சியில் செயல்படுத்தப்பட்டு, படிப்படியாக மற்ற நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு விரிவுபடுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இதன் மூலம் 29,455 தொழிலாளர்கள் பயன்பெறுவார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.
