பிகார் சட்டமன்றத் தேர்தலில், அரசியல் வாரிசுகள் பெரும் பங்கு வகிக்கின்றனர். முக்கிய கட்சிகள் குடும்ப உறுப்பினர்களுக்கு சீட் வழங்கி, தேர்தலில் களமிறக்குகின்றன.
Summary
பிகார் சட்டமன்ற தேர்தலில் வாரிசு அரசியல் முக்கிய பிரச்னையாக மாறியுள்ளது. முக்கிய கட்சிகள் குடும்ப அரசியலுக்கு முக்கியத்துவம் கொடுத்து, பல இடங்களில் அரசியல் வாரிசுகளை களமிறக்கி உள்ளன. இதனால், தேர்தல் பரப்பில் கட்சி பேதமின்றி வாரிசுகள் ஆதிக்கம் செலுத்துகின்றனர்.
சீ.பிரேம் குமார்
இந்தியாவே எதிர்நோக்கிக் காத்திருக்கும் 243 தொகுதிகளைக் கொண்ட பிகார் சட்டமன்ற தேர்தல் இன்னும் சில நாட்களில் நடக்க இருக்கிறது. இதனால் அரசியல் கட்சிகளின் வியூகங்களாலும், பரப்புரைகளாலும் பிகாரே ஸ்தம்பித்து காணப்படுகிறது. சாதி அரசியல் முக்கியப் பிரச்னையாக இருக்கும் பிகாரில், வாரிசு அரசியலும் அடுத்த பிரச்னையாகப் பார்க்கப்படுகிறது.
குறிப்பாக, பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் முக்கிய கட்சிகளில் ஐந்தில் ஒரு பகுதியினர் குடும்ப அரசியலில் இருந்து வந்தவர்கள் என்பது கட்சிகளின் வேட்பாளர் பட்டியலை பார்ப்பதன் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது. மேலும், 2020 ஆம் ஆண்டு நடந்த பிகார் தேர்தலில் மட்டும் 70 எம்.எல்.ஏ-க்கள் அரசியல் பாரம்பரியம் கொண்ட குடும்பங்களிலிருந்து வந்தவர்கள் என்று கூறுகிறது ஒரு புள்ளிவிவரம். இவற்றின் மூலமே பிகாரில் வாரிசு அரசியலின் தீவிரத்தைப் புரிந்து கொள்ள முடியும். அதேபோல இந்த தேர்தலிலும் போட்டியிடும் அரசியல் வாரிசுகளின் பட்டியல் நீளமானது

பிகார் அரசியல்
எப்போதும் போல, “வாரிசு அரசியல் ஜனநாயகத்திற்கு எதிரானது”, ”பிகாரை வாரிசு அரசியல் காரர்களில் கைகளில் கொடுத்துவிடாதீர்கள்” என்ற முழக்கங்கள் பிகார் அரசியல் களத்திலும் எழுந்து வருகின்றன. மேலும், இந்த விமர்சனங்களை முன்வைக்கும் கட்சிகளே குடும்ப உறுப்பினர்களுக்கு சீட் கொடுத்து தேர்தலில் போட்டியிட வைக்கிறது. இது அரசியல் விமர்ச்சகர்கள் மற்றும் மக்களிடையே அதிர்ச்சியை கொடுக்காத முரணாகவே பார்க்கப்படுகிறது. இவ்வாறு, பிகார் தேர்தல் களத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மற்றும் மகாகத்பந்தன் கூட்டணி என்ற இரு பிரதான கூட்டணிகளும் பல இடங்களில் அரசியல் வாரிசுகளை களமிறக்கியுள்ளன.
ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி தனது வேட்பாளர் பட்டியலில் மூன்றில் ஒரு பகுதியை அரசியல் வாரிசுகளுக்கு கொடுத்துள்ளது. முக்கியமாக முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி யாதவ் ரகோபூர் தொகுதியில் போட்டியிடுகிறார். மேலும், இவர் மகாகத்பந்தன் கூட்டணியின் முதல்வர் வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறார். தொடர்ந்து, ஆர்ஜேடி போட்டியிடவுள்ள 143 தொகுதிகளில், ஆர்ஜேடியில் இருந்து 4 முறை எம்.பி யாக இருந்த மறைந்த முகமது ஷஹாபுதீனின் மகன் ஒசாமாக்கு ரகுநாத்பூரில் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. முன்னாள் எம்பி சிவானந்த் திவாரியின் மகன் ராகுல் திவாரி (ஷாபூர்) மற்றும் முன்னாள் ஆர்ஜேடி மாநிலத் தலைவர் ஜக்தானந்த் சிங்கின் மகன் அஜீத் சிங் (ராம்கர்) உள்ளிட்ட 42 அரசியல் வம்சாவளிகளுக்கு ராஷ்டிரிய ஜனதா தளத்தில் வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், தற்போதைய இரண்டு எம்.பி.க்களின் மகன்கள், அதாவது பங்கா எம்பி கிரிதாரி யாதவின் மகன் சாணக்ய பிரகாஷ் ரஞ்சன் (பெல்ஹார்) மற்றும் ஜெகனாபாத் எம்பி சுரேந்திர யாதவின் மகன் விஸ்வநாத் (பெலகஞ்ச்) – ஆகியோர் களமிறக்கப்பட்டுள்ளனர்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருக்கும் ஹிந்துஸ்தான் அவாம் மோர்ச்சா கட்சி, தான் போட்டியிடும் தொகுதிகளில் கிட்டத்தட்ட 50% சதவீத இடங்களை தனது குடுங்களுக்கே கொடுத்துள்ளது. அதாவது, அக்கட்சி பிகார் சட்டமன்றத் தேர்தலில் ஆறு இடங்களில் போட்டியிடுகிறது. அதில், மூன்று இடங்களில் அக்கட்சியின் தலைவரும் ஒன்றிய அமைச்சருமான ஜிதன்ராம் மஞ்சி, தனது மருமகள் தீபா குமாரி, மாமியார் ஜோதி தேவி, மருமகன் பிரபுல் மஞ்சி ஆகியோரை களமிறக்கியுள்ளார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருக்கும் ஹிந்துஸ்தான் அவாம் மோர்ச்சா கட்சி, தான் போட்டியிடும் தொகுதிகளில் கிட்டத்தட்ட 50% சதவீத இடங்களை தனது குடுங்களுக்கே கொடுத்துள்ளது. அதாவது, அக்கட்சி பிகார் சட்டமன்றத் தேர்தலில் ஆறு இடங்களில் போட்டியிடுகிறது. அதில், மூன்று இடங்களில் அக்கட்சியின் தலைவரும் ஒன்றிய அமைச்சருமான ஜிதன்ராம் மஞ்சி, தனது மருமகள் தீபா குமாரி, மாமியார் ஜோதி தேவி, மருமகன் பிரபுல் மஞ்சி ஆகியோரை களமிறக்கியுள்ளார்.
பாரதிய ஜனதா கட்சியிலும் இதே நிலைமை தான், தாராபூரைச் சேர்ந்த துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரி (சகுனி சவுத்ரியின் மகன்), ஜான்ஜர்பூரைச் சேர்ந்த அமைச்சர் நிதிஷ் மிஸ்ரா (முன்னாள் முதல்வர் ஜெகநாத் மிஸ்ராவின் மகன்), ஜமுய்யைச் சேர்ந்த ஷ்ரேயாசி சிந்து (முன்னாள் அமைச்சர் திக்விஜய் சிங்கின் மகள்), திரிவிக்ரம் சிங் (முன்னாள் எம்பி கோபால் நாராயண் சிங்கின் மகன்), பன்கிபோரைச் சேர்ந்த நிதின் நபின், முன்னாள் எம்எல்ஏ நவீன் கிஷோர் பிரசாத் சின்ஹாவின் மகன்) போன்ற அரசியல் வாரிசுகளைக் பாஜகவும் களமிறக்குகிறது.

சிராக் பஸ்வான்
சிராக் பஸ்வானின் லோக் ஜன சக்தி (ராம் விலாஸ்) கட்சியின் வேட்பாளர் பட்டியலில் வைஷாலி தொகுதி எம்.பி யின் மகள் கோமல் சிங் உள்ளார். மற்றொரு தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சியான உபேந்திர குஷ்வாஹாவின் ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா (RLM), கூட்டணியில் இருந்து ஆறு இடங்களைப் பெற்றுள்ளது. இதையடுத்து, சசாரம் தொகுதியில் அவரது மனைவி ஸ்னேஹல்தாவையும், தினாரா தொகுதியில் அமைச்சர் சந்தோஷ் சிங்கின் சகோதரர் அலோக் குமார் சிங்கையும் நிறுத்தியுள்ளது.
மேலும், முதல்வர் நிதிஷ்குமாரின் கட்சியான ஐக்கிய ஜனதா தளத்தில் எம்.பி. லவ்லி ஆனந்தின் மகன் சேதன் ஆனந்த் மற்றும் எம்.பி. வீணா தேவி மகள் கோமல் சிங் ஆகியோர் போட்டியிடுகின்றனர். மேலும், எம்.பி. பிரபுந்த் சிங்கின் மகன் ரந்தீர் சிங் , முன்னாள் அமைச்சர் மஞ்சு வர்மாவின் மகன் அபிஷேக் மற்றும் முன்னாள் எம்.பி. அருண் குமாரின் மகன் ரிதுராஜ் குமார் போன்ற குறைந்தது எட்டு முன்னாள் எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்களின் வாரிசுகளுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அதேபோல் காங்கிரஸிலும் 5 அரசியல் வாரிசுகள் களமிறக்கப்பட்டுள்ளனர்.

பீகார்
இவ்வாறு, பிகார் அரசியல் களத்தில் அரசியல் வாரிசுகளின் ஆதிக்கம் கிளைகள் போல் படர்ந்து காணப்படுக்கிறது. சில இடங்களில் மூன்று தலைமுறை வரை அரசியல் வாரிசுகள் தடம் பதித்துள்ளனர்.
