
Bihar Election 2025 | பிகாரில் முதற்கட்ட தேர்தல் வேட்புமனுத் தாக்கல் இன்று முடிவடையும் நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு 55 முதல் 58 இடங்களை ஒதுக்க ராஷ்ட்ரிய ஜனதா தளம் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

பிகாரில் முதற்கட்டத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்றுடன் நிறைவடைகிறது.
பிகாரில் முதற்கட்ட தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்றுடன் நிறைவடைய உள்ள நிலையில், காங்கிரஸ், ஆர்ஜேடி அடங்கிய மகா கத்பந்தன் கூட்டணியின் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
243 தொகுதிகளை கொண்ட பிகாரில் நவம்பர் 6 மற்றும் 11 ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில், தேசிய ஜனநாயக கூட்டணி தொகுதி பங்கீடுகளை இறுதி செய்து, வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட நிலையில், காங்கிரஸ், ஆர்ஜேடி அடங்கிய மகாகத்பந்தன் கூட்டணியில் தொகுதி பங்கீட்டில் இழுபறி நிலவி வந்தது.
இந்நிலையில், டெல்லியில் ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியின் மூத்த தலைவர் தேஜஸ்வி யாதவ் காங்கிரஸ் மேலிட தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்தியதையடுத்து, மகாகத்பந்தன் கூட்டணியில் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
முதற்கட்டமாக 48 பேர் அடங்கிய வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டது. அதன்படி, பிகார் மாநில காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் ராம், குதும்பா தொகுதியில் போட்டியிடுகிறார்.
இதே போன்று, தீபங்கர் பட்டாச்சாரியா தலைமையிலான மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 20 இடங்களும், முகேஷ் சஹானியின் விஐபி கட்சிக்கு 15 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.