
சிறிய அளவிலான காயங்கள் முதல் மோசமான கண் எரிச்சல்கள் வரை தீபாவளி கொண்டாட்டங்களில் எதிர்பார்க்கக் கூடியவை. பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் விட்டுவிட்டால் கண்ணிமைக்கும் நொடியில் இந்த அசம்பாவிதங்கள் ஏற்படலாம்.

தீபாவளி என்றாலே பட்டாசு, இனிப்புகள், புத்தாடைகள் மற்றும் கொண்டாட்டம் நிறைந்ததாக இருக்கும். ஆனால் ஒவ்வொரு வருடமும் இந்த பட்டாசு காரணமாக ஏற்படும் தீக்காயம் என்பது மாறாத ஒன்றாக தொடர்கிறது. சிறிய அளவிலான காயங்கள் முதல் மோசமான கண் எரிச்சல்கள் வரை தீபாவளி கொண்டாட்டங்களில் எதிர்பார்க்கக் கூடியவை. பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் விட்டுவிட்டால் கண்ணிமைக்கும் நொடியில் இந்த அசம்பாவிதங்கள் ஏற்படலாம். ஒருவேளை அப்படி ஏற்பட்டு விட்டால் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்வதும் மிகவும் அவசியம்.
பட்டாசு காரணமாக ஏற்பட்ட சிறிய அளவிலான தீக்காயங்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் அங்கீகரித்த சில தீர்வுகள்:
பாதிக்கப்பட்ட இடத்தை குளுமைப்படுத்தவும்:
காயம் ஏற்பட்ட உடனேயே அந்த பகுதியை ஓடும் தண்ணீரில் 10 முதல் 15 நிமிடங்களுக்கு காண்பித்து குளிர வைக்க வேண்டும். ஆனால் ஐஸ் வாட்டரை இதற்கு பயன்படுத்தக் கூடாது. இவ்வாறு செய்வது எரியும் செயல்முறையை நிறுத்தி, வீக்கத்தை குறைக்கும்.
டூத் பேஸ்ட் அல்லது எண்ணெய் போன்ற வீட்டு சிகிச்சைகளை தவிர்க்கவும்:
தீக்காயம் மீது டூத் பேஸ்ட், எண்ணெய் அல்லது நெய் பயன்படுத்தக் கூடாது. இதனால் வெப்பம் அந்த இடத்தில் அடைப்பட்டு, தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகும். எனவே எப்பொழுதும் தீக்காயங்களுக்காக பரிந்துரை செய்யப்பட்ட ஆன்டி-பாக்டீரியல் அல்லது ஆன்டிசெப்டிக் கிரீம் பயன்படுத்த வேண்டும்.
காயத்தை மூடவும்:
காயத்தோடு ஒட்டாத அளவு ஒரு சுத்தமான காட்டன் துணியை பாதிக்கப்பட்ட பகுதி மீது வைத்து கட்டவும். இறுக்கமாக அல்லாமல் தளர்வாக கட்டிக் கொள்ளுங்கள்.

பாதிக்கப்பட்ட பகுதியை சுத்தமாக வைக்கவும்:
மைல்டான ஆன்டிசெப்டிக் கிளென்சர் மற்றும் மாய்சரைசர் பயன்படுத்தி பாதிக்கப்பட்ட பகுதியை சுத்தமாக வையுங்கள். மேலும் மருத்துவர்கள் பரிந்துரை செய்த கற்றாழை ஜெல் அல்லது ஆயின்மெண்டுகளை பயன்படுத்துவதன் மூலமாக காயங்களை விரைவாக ஆற்றலாம்.
தொற்றுகள் ஏற்படுகிறதா என்பதை கவனித்தல்:
காயத்தில் சீழ் வடிதல், சிவத்தல் அல்லது வீக்கம் போன்றவை தொற்றுக்கான அறிகுறிகள். இதனை நீங்கள் கவனிக்கும் பட்சத்தில் உடனடியாக தோல் நிபுணர் அல்லது அவசரகால மருத்துவ பிரிவுக்கு செல்ல வேண்டும்.
தீபாவளியின் போது பின்பற்ற வேண்டிய சில பாதுகாப்பு நடவடிக்கைகள்:
*பட்டாசுகளில் இருந்து வெளிவரும் புகையின் காரணமாக கண்களுக்கு எரிச்சல் மற்றும் அலர்ஜி ஏற்படலாம் எனவே எரிச்சல் ஏற்படும் போது சுத்தமான தண்ணீரில் கண்களை கழுவவும்.
*ஒருபோதும் நெய் அல்லது தேன் போன்ற வீட்டு சிகிச்சைகளை பயன்படுத்த வேண்டாம்.
*தொடர்ந்து அசவுகரியம் இருந்தால் மருத்துவர்கள் பரிந்துரையின் பெயரில் சொட்டு மருந்துகளை பயன்படுத்தலாம்.
பட்டாசு வெடிக்கும் போது பாதுகாப்பு வழங்கக் கூடிய வகையில் கண்ணாடிகள் அணிவது மற்றும் சிந்தடிக் ஆடைகள் அணிவதை தவிர்ப்பது போன்றவை உதவும்.
*ஒருவேளை உங்களுடைய துணியில் தீ பிடித்து விடும் பட்சத்தில் உடனடியாக கையில் இருக்கும் பட்டாசை கீழே போட்டுவிட்டு தரையில் படுத்து உருள வேண்டும்.
*கைகளை பயன்படுத்தி நெருப்பை அணைக்க முயற்சி செய்யக் கூடாது. தரையில் படுத்து உருளுவதன் மூலமாக ஆக்ஸிஜன் ஓட்டம் தடைபட்டு, நெருப்பு விரைவாக அணையும்.

எப்போது மருத்துவரை அணுக வேண்டும்?
பின்வரும் சூழ்நிலைகளில் நீங்கள் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்:-
-காயம் 3 இன்ச் அளவைவிட பெரிதாக இருந்தால்
-முகம், கண்கள் அல்லது பிறப்பு உறுப்பு பகுதிகள் பாதிக்கப்பட்டிருந்தால்
-தொடர்ச்சியாக வலி அல்லது தொற்றுக்கான அறிகுறிகள்.
-பாதிக்கப்பட்டிருப்பவர் குழந்தையாகவோ அல்லது வயதானவர்கள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.