
மத்திய அரசு, பிரதமரின் இ-டிரைவ் திட்டத்தில் 72,300 மின்சார வாகன சார்ஜிங் நிலையங்களுக்கு 2,000 கோடி செலவில் 100 சதவீதம் வரை மானியம் வழங்கும் திட்டம் அறிவித்துள்ளது.

அரசு அலுவலகங்கள், குடியிருப்புப் பகுதிகள், மருத்துவமனைகள், கல்வி நிலையங்களில் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையங்கள் அமைக்க 100 சதவீத மானியம் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
பிரதமரின் இ-டிரைவ் திட்டத்தின்கீழ், மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் செய்யும் நிலையங்கள் அமைப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய கனரக தொழில்கள் அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
அதில் அரசின் சார்பில் வழங்கப்படும் மானிய வகைகள் குறித்து விளக்கமளித்துள்ளது.
அதிகமான கூட்ட நெரிசல் உள்ள ரயில் நிலையம், விமான நிலையம், மெட்ரோ ரயில் நிலையம், எரிபொருள் நிரப்பும் நிலையங்கள், சுங்கச் சாவடிகள் போன்ற இடங்களில் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையங்கள் அமைக்க 80 சதவீதம் மானியம் அளிக்கப்படும் என்றும், அதற்கான பொருட்கள் வாங்கிட 70 சதவீதம் மானியம் வழங்கப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஷாப்பிங் மால்கள், மார்க்கெட்டுகள், விரைவுச் சாலைகள், சாலையோரங்களில் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையங்கள் அமைக்கவும் 80 சதவீதம் மானியம் வழங்கப்படும் என்றும் அந்த வழிகாட்டு நெறிமுறையில் குறிப்பிடப்பட்டுள்ளது.