
Diwali special train: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஊருக்கு செல்லும் பயணிகள் வசதிக்காக தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

தீபாவளி பண்டிகை அக்டோபர் 20ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் மக்கள் சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்டு வருகின்றனர். இந்நிலையில் பயணிகள் கூட்ட நெரிசலைச் சமாளிக்க தெற்கு ரெயில்வே சார்பில் பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு ரயில்களை அறிவித்து வருகிறது. அதன்படி, தூத்துக்குடி – பெங்களூரு இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

பெங்களூரு – தூத்துக்குடி சிறப்பு ரெயில் (எண்: 06297) அக்டோபர் 17 மற்றும் 21ஆம் தேதிகளில் பெங்களூருவில் இருந்து இரவு 9 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 11 மணிக்கு தூத்துக்குடி வந்துசேரும். இந்த ரெயில், பெங்களூரு கண்டோன்மெண்ட், ஓசூர், தாம்பரம், சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், கொடைரோடு, சோழவந்தான், மதுரை, திருப்பரங்குன்றம், திருமங்கலம், விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, தூத்துக்குடி மேலூர் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும்.

அதேபோல், தூத்துக்குடி – பெங்களூரு கண்டோன்மெண்ட் சிறப்பு ரெயில் (எண் 06298) அக்டோபர் 18 மற்றும் 22ஆம் தேதிகளில் தூத்துக்குடியில் இருந்து மதியம் 2 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 4.15 மணிக்கு பெங்களூரு கண்டோன்மெண்ட் நிலையத்தை சென்றடையும். இந்த ரெயில் தூத்துக்குடி மேலூர், கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், திருமங்கலம், மதுரை, திண்டுக்கல், கரூர், சேலம், ஓசூர் ஆகிய இடங்களில் நின்று செல்லும்.

பெங்களூரு – தூத்துக்குடி சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு தொடங்கப்பட்டு, ஏ.சி இரண்டாம் மற்றும் மூன்றாம் வகுப்பு பெட்டிகளுக்கான காத்திருப்பு பட்டியல் வந்துவிட்டது. தூத்துக்குடி – பெங்களூரு ரெயிலுக்கான முன்பதிவு இன்னும் தொடங்கப்படாத நிலையில், விரைவில் தொடங்கும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தீபாவளி கால கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் பயணிகள் தங்கள் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு கடைசி நேர இடையூறுகளைத் தவிர்க்க வேண்டும் என தெற்கு ரயில்வே குறிப்பிட்டுள்ளது.