தமிழ்நாட்டில் விவசாயிகள் மத்தியில் சிறுநீரக பாதிப்பு அதிகரித்து வருவதாக தி லான்செட் மருத்துவ இதழ் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Summary
தமிழ்நாட்டில் விவசாயிகள் மத்தியில் சிறுநீரக பாதிப்பு அதிகரித்து வருவதாக தி லான்செட் மருத்துவ இதழ் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெயிலில் நேரடியாக வேலை செய்வதால் சிறுநீரக பாதிப்பு ஏற்படலாம் என கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் விவசாயிகள் மத்தியில் சிறுநீரக பாதிப்பு அதிகரித்து வருவதாக கிடைக்கப் பெறும் ஆய்வுகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரிட்டனில் இருந்து வெளியாகும் தி லான்செட் (The Lancet) மருத்துவ இதழ், வெளியிட்டுள்ள ஆய்வுக் கட்டுரைதான் இந்த அதிர்ச்சியை விதைத்துள்ளது. தமிழ்நாட்டில் 5.13 விழுக்காடு விவசாயிகளின் சிறுநீரக செயல் திறன் பாதிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 50 விழுக்காட்டுக்கும் அதிகமானோருக்கு இணை நோய்கள் எதுவும் இல்லை. நேரடியாக வெயிலில் வேலை செய்வதால் சிறுநீரக பாதிப்பு நேரிட்டிருக்கலாம். இதுதான், தி லான்செட் மருத்துவ இதழ் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையின் சாராம்சம்.

2023இல், ஆகஸ்ட் – செப்டம்பர் மாதங்களில் சென்னை மருத்துவக் கல்லூரியின் சிறுநீரகவியல் துறையினர், விவசாயிகளிடையே கள ஆய்வு நடத்தினர். மாநில உறுப்பு மாற்று ஆணையத்தின் செயலர் என். கோபாலகிருஷ்ணன் தலைமையிலான அந்தக் குழுவினர், 125 கிராமங்களில், 3,350 விவசாயத் தொழிலாளர்களை ஆய்வுக்கு உட்படுத்தினர். அந்த ஆய்வில் 17 விழுக்காட்டுக்கும் அதிகமானோருக்கு சிறுநீரக பாதிப்பு கண்டறியப்பட்டது.
மீண்டும் 3 மாதங்களுக்குப் பிறகு, மறுபரிசோதனை நடத்தியபோது, அந்த விகிதம் 5.31 விழுக்காடாகக் குறைந்தது. அவர்களுக்கு, சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், இதய பாதிப்பு, மரபணு பாதிப்பு என எந்தவிதமான இணை நோய்களும் இல்லை. விவசாயிகள் நேரடியாக வெயிலில் பணியாற்றுவதால் சிறுநீரக செயல்திறன் பாதித்திருக்கலாம் என்று அந்த மருத்துவர் குழு தெரிவித்திருந்தது. இந்த ஆய்வறிக்கையின் அடிப்படையில் தான், தி லான்செட் மருத்து இதழ், ஆய்வுக்கட்டுரையை வெளியிட்டுள்ளது.

சிறுநீரகம்
தினமும், திறந்தவெளியில், அதிக வெப்பமான சூழலில் பல மணி நேரம் வேலை செய்யும் விவசாயிகள், பூச்சி மருந்து தெளிப்பவர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள், செங்கல் சூளை தொழிலாளர்கள், இரும்புப் பட்டறை தொழிலாளர்கள், உப்பள தொழிலாளர்கள், விற்பனை பிரதிநிதிகள் உள்ளிட்டோருக்கு, உடலின் நீர்ச்சத்து விரைவில் குறைந்து விடும். இதனால் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு, விரைவில் செயல் இழப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
ஆரம்பத்தில் எவ்வித அறிகுறிகளையும் உணர முடியாது. எனவே, தினமும் வெயிலில் அதிகமாக வேலை செய்வோர், உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்வதே தற்காப்புக்கான ஒரே வழி என்பது மருத்துவர்களின் அறிவுரை. மேலும், சிறிய உடல்நல பாதிப்பு என்றாலும், யூரியா, ரத்த அணுக்கள் பரிசோதனை, கிரியேட்டினின், ஜி.எஃப். ஆர் உள்ளிட்ட சிறுநீர், ரத்தப் பரிசோதனைகளை செய்து கொள்ள வேண்டும் என்றும் கூறுகிறார்கள் மருத்துவர்கள்.
