
நீண்ட நேரம் நிற்பது, நடப்பதால் கால்களில் வலியா..? நிபுணர் சொல்லும் இந்த விஷயத்தை செஞ்சு பாருங்க..!

நீண்ட நேரம் நிற்பது,நடப்பதால் கால்களில் வலியா? நிபுணர் சொல்லும் டிப்ஸ்…
சர்வதேச மருத்துவ நர்சிங் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வொன்றின் படி, சூடான நீரில் கால்களை வைப்பது இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, தசை நெருக்கத்தை தளர்த்தி, வலியைக் குறைக்க உதவுகிறது.
நீண்ட நேரம் நிற்பது அல்லது நடப்பதால் கால்களில் ஏற்படும் கடுமையான வலியை போக்க, ஓர் எளிய வீட்டு வைத்தியம் உதவும், இதனை பின்பற்றுவதன் மூலம் 15 முதல் 20 நிமிடங்களிலேயே ஆறுதல் அடையலாம். நிபுணர்கள் பரிந்துரைக்கும் அந்த செயல்முறையை பற்றி இந்த பதிவில் விரிவாக பார்ப்போம்.
நாள்தோறும் நீண்ட நேரம் நிற்பது, நடப்பது அல்லது பரபரப்பான வாழ்க்கையால் களைப்பாகி கால்களில் ஏற்படும் சோர்வுக்கு நிவாரணம் தேட பலரும் பல வழிகளை முயற்சிக்கிறார்கள். ஆனால், அதற்கான எளிய தீர்வு நம் வீட்டிலேயே இருப்பது பலருக்கும் தெரிவதில்லை. அதாவது, சூடான நீரில் கால்கள் மூழ்கும் படி வைப்பது ஒரு எளிய, இயற்கையான மற்றும் அறிவியல் ஆதாரத்துடன் கூடிய தீர்வாகும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
வலி நிவாரணத்துக்கும், தசை தளர்வுக்கும் சிறந்த தீர்வு
சர்வதேச மருத்துவ நர்சிங் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வொன்றின் படி, சூடான நீரில் கால்களை வைப்பது இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, தசை நெருக்கத்தை தளர்த்தி, வலியைக் குறைக்க உதவுகிறது. வெதுவெதுப்பான நீர் இரத்த நாளங்களை விரிவாக்குவதால், ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்கள் தசைகளுக்கு விரைவாக சென்று, சோர்வையும் விறைப்பையும் குறைக்கும்.
நீரிழிவால் உண்டாகும் நரம்பியல் பிரச்சனை, அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய வலி மற்றும் பொதுவான தசை சோர்வுகளுக்குக் கூட இந்தப் பழக்கம் குறிப்பிடத்தக்க நிவாரணத்தை அளிப்பதாக இந்த ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன.
இது எப்படி செயல்படுகிறது?
36-38°C வெதுவெதுப்பான நீரில் கால்களை 15 முதல் 20 நிமிடங்கள் வைத்திருப்பதால், அதிலுள்ள வெப்பம் இரத்த ஓட்டத்தை ஊக்குவித்து, தசைகளை தளர்த்தி, நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்துகிறது. இதனால் வலி சமிக்ஞைகள் குறைந்து, உடல் மற்றும் மனம் இரண்டிலும் ஒரு அமைதியான உணர்வு ஏற்படும்.
சிறந்த தூக்கத்திற்கும் உதவும்
சூடான நீரில் கால்களை வைப்பது, உடலின் வெப்பநிலையைச் சமநிலைப்படுத்தி, நரம்பு மண்டலத்தை தளர்த்துகிறது. இதனால் உடல், தூக்கத்திற்கு இயல்பாகவே தயாராகிறது. சயின்ஸ் டைரக்ட் வெளியிட்ட ஆய்வின் படி, மிதமான சூட்டைக் கொண்ட தண்ணீரில் கால்களை வைப்பது தூக்கத்தின் தரத்தை மேம்படுத்துகிறது, குறிப்பாக அதிக மன அழுத்தம் அல்லது வலி காரணமாக தூங்க முடியாதவர்களுக்கு இது நிவாரணம் அளிக்கிறது.
கூடுதல் நன்மைகள்
வெப்பம் மற்றும் நீரின் தன்மை மனஅழுத்தத்தைக் குறைத்து, ஆழ்ந்த அமைதியையும், தளர்வையும் வழங்குகிறது. இது பாத ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது. மேலும் இது, கரடுமுரடான சருமத்தை மென்மையாக்கி, இறந்த செல்களை அகற்றி, கால்களை நெகிழ்வாக வைத்திருக்க உதவுகிறது. சுத்தம் மற்றும் புத்துணர்ச்சி தரும் இந்த நடைமுறை, கால்களில் ஏற்படும் வாசனையையும், தொற்றுகளையும் தடுக்க உதவுகிறது. அதேசமயம், இந்த செய்முறை மனநிலையை உயர்த்தி, உற்சாகத்தையும், மனநலத்தையும் மேம்படுத்துகிறது.
வீட்டிலேயே எளிய முறையில் செய்வது எப்படி?
முதலில், ஒரு தளர்வான பாத்திரத்தில் வெதுவெதுப்பான தண்ணீரை நிரப்புங்கள். நீரின் வெப்பநிலை சுமார் 36-38°C (97-100°F) இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். விரும்பினால், சிறிதளவு எப்சம் உப்பைச் சேர்க்கலாம், இது வீக்கம் மற்றும் தசை வலியை குறைக்க உதவும். அதன் பின்னர், உங்களது கால்களை 15-20 நிமிடங்கள் தண்ணீரில் வைக்கவும். முடிந்தவுடன், மெதுவாக கால்களை துடைத்து, தோல் வறட்சி அல்லது குதிகால் விரிசலைத் தடுப்பதற்காக மாய்ஸ்சரைசரை பயன்படுத்தலாம்.
எச்சரிக்கை: யாரெல்லாம் இதை தவிர்க்க வேண்டும்
நீரிழிவு நோயாளிகள்: கால்களில் உணர்வு குறைவாக இருப்பவர்களுக்கு தீக்காயம் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, நீரிழிவு நோயாளிகள் முதலில் மருத்துவரின் ஆலோசனையைப் பெற வேண்டும்.
புண்கள் அல்லது காயங்கள் உள்ளவர்கள்: திறந்த புண்கள், காயங்கள் அல்லது தொற்று இருப்பின் சூடான நீரை தவிர்க்க வேண்டும்.
தோல் நோய் அல்லது இரத்த ஓட்ட பிரச்சனைகள்: இத்தகைய பிரச்சினைகள் உள்ளவர்கள், இந்த சிகிச்சையை முயற்சிக்கும் முன் மருத்துவ ஆலோசனையை பெறுவது அவசியம்.
இயற்கையான நிவாரணம், ஆரோக்கியமான கால்கள்
வெதுவெதுப்பான நீரில் கால்களை வைப்பதென்பது ஒரு சாதாரண பழக்கமாக தோன்றினாலும், இது உங்களது உடலுக்கும், மனதுக்கும் எதிர்பாராத அளவில் நிம்மதி அளிக்கும் முழுமையான சிகிச்சை நடைமுறை ஆகும். இது வலியை குறைப்பது மட்டுமல்லாமல், தூக்கத்தையும், மனநிலையையும் மேம்படுத்துகிறது. சிறிய அளவில் தொடங்கினால் கூட, தினசரி இந்த பழக்கம் நீடித்த ஆறுதலையும், ஆரோக்கியமான வாழ்க்கையையும் வழங்கும்.
மறுப்பு: இந்தக் கட்டுரை தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. இது மருத்துவ ஆலோசனை அல்லது சிகிச்சைக்கு மாற்றாகாது. எந்தவொரு உடல் நலப் பிரச்சினைக்கும் முன் தகுதிவாய்ந்த மருத்துவ நிபுணரின் ஆலோசனையைப் பெறவும்.