குறுகிய காலத்தில் எடுத்து முடிக்கும்படியாக சுந்தர் சி இயக்கத்தில் ரஜினி நடிக்க இருக்கிறாராம். இந்தப் படம் அடுத்த ஆண்டு தீபாவளி ரிலீஸ் என சொல்லப்படுகிறது.
Summary
ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இணைந்து நடிக்கும் படம் இந்திய சினிமாவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்சன் இயக்கத்தில் உருவாகும் இப்படம், ரஜினியின் கடைசி படமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. சுந்தர் சி இயக்கத்தில் ரஜினி நடிக்கும் மற்றொரு படம் தீபாவளி 2026ல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இணைந்து நடிக்கும் படம் இந்திய சினிமாவில் பலரும் எதிர்பார்க்கும் ஒன்று. இது குறித்து ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன், வெவ்வேறு நிகழ்வுகளில் இணைந்து படம் செய்வதை உறுதி செய்திருக்கிறார்கள். முதலில் இப்படத்தை லோகேஷ் இயக்குவார் என தகவல்கள் வந்தன. ஆனால் இப்படத்தின் கதை மற்றும் இயக்குநர் இன்னும் முடிவாகவில்லை என ரஜினி தெரிவித்தார். சில தினங்களாக இப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்குவார் என தகவல்கள் வருகின்றன.

Nelson Dhileepkumar Jailer 2
`ஜெயிலர் 2’வுக்குப் பிறகு ரஜினி நடிக்கும் படம், ரஜினி கமல் இணைந்து நடிக்கும் படம் என சொல்லப்பட்டது. இதனை லோகேஷ் இயக்கவில்லை எனவும், இந்தப் படத்திற்காக நெல்சன் சொன்ன ஒன்லைன் ரஜினிக்கு பிடித்துப் போனதாகவும் சொல்லப்படுகிறது. தற்போது ஜெயிலர் 2 படப்பிடிப்பு பிப்ரவரி வரை நடக்க உள்ளது, ரிலீஸ் ஜூன் மாதம் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு பிறகு ஒரு ஆண்டு ரஜினி – கமல் படத்தின் கதையை எழுத எடுத்துக் கொள்ள இருக்கிறாராம் நெல்சன்.
அந்த இடைப்பட்ட காலத்தில் குறுகிய காலத்தில் எடுத்து முடிக்கும்படியாக சுந்தர் சி இயக்கத்தில் ரஜினி நடிக்க இருக்கிறாராம். இந்தப் படம் அடுத்த ஆண்டு தீபாவளி ரிலீஸ் என சொல்லப்படுகிறது. அதே சமயத்தில் கமல்ஹாசன் அன்பறிவ் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். இவ்விருவரும் படம் முடித்து வரவும், நெல்சன் கதையை தயார் செய்து ப்ரீ புரொடக்ஷன் முடித்து வரவும் சரியாக இருக்கும். இதன் படப்பிடிப்பு 2027ல் துவங்குமாம். ரஜினி – சுந்தர் சி படம், கமல் – அன்பறிவ் படம், ரஜினி – கமல் – நெல்சன் படம் எல்லாவற்றையும் கமலின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது.

கமல் – ரஜினி
இப்போது இதில் பரபரப்பாக பேசப்படும் முக்கியமான விஷயம் என்ன என்றால் ரஜினி – சுந்தர் சி படம் மற்றும் ரஜினி – கமல் – நெல்சன் படமே ரஜினிகாந்த் திரைப்பயணத்தில் கடைசி இரு படங்கள் என சொல்லப்படுகிறது. தக் லைஃப் படம் மூலம் தன் நண்பர் கமலுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை சரி செய்ய இந்த படங்களை அவரது தயாரிப்பில் நடித்துக் கொடுப்பதாகவும் சொல்லப்படுகிறது.
இந்தப் படத்தோடு சினிமாவிலிருந்து ரஜினி ஓய்வு பெற உள்ளாராம். இந்த தகவல் இன்னும் உறுதி செய்யப்படாத ஒன்றே. இதற்கு முன்பு பல முறை ரஜினிகாந்தின் கடைசி படம் என சில படங்கள் இப்படி வதந்தியாக சொல்லப்பட்டதும் உண்டு. ஆனால் இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் ரஜினி, கமலுக்கு மட்டுமல்ல இந்திய சினிமாவிலேயே முக்கியமான படமாக இது அமையும்.
