பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரான முகமது ரிஸ்வான், டி20 அணியில் இருந்து தன்னை நீக்கியது குறித்து விளக்கம் கோரி, பிசிபியின் மத்திய ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்துவிட்டார்.
Summary
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரான முகமது ரிஸ்வான், டி20 அணியில் இருந்து தன்னை நீக்கியது குறித்து விளக்கம் கோரி, பிசிபியின் மத்திய ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்துவிட்டார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் விளையாடி வருபவர் முகமது ரிஸ்வான். சமீபத்தில் அவர், சமீபத்தில் ஒருநாள் போட்டி கேப்டன் பதவியிலிருந்தும் நீக்கப்பட்டார். மேலும், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 அணியிலிருந்தும் கழற்றிவிடப்பட்டார். இந்த நிலையில், டி20 அணியில் இருந்து தன்னை நீக்கியது குறித்து விளக்கம் கோரி, முகமது ரிஸ்வான் பிசிபியின் மத்திய ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்துவிட்டார். இது பாகிஸ்தான் கிரிக்கெட் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Mohammad Rizwan
மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டி20 போட்டியில் தென்னாப்பிரிக்காவிடம் பாகிஸ்தான் அணி அவமானகரமான தோல்வியை சந்தித்ததை அடுத்து, இந்த செய்தி வந்துள்ளது. சமா டிவியின் அறிக்கையின்படி, முகமது ரிஸ்வான் பிசிபி மத்திய ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்துவிட்டார். ஏனெனில், பாகிஸ்தான் டி20 அமைப்பிலிருந்து தொடர்ந்து விலக்கப்பட்டதற்கான காரணத்தை தெளிவுபடுத்துமாறு முகமது ரிஸ்வான் பிசிபியிடம் கேட்டுள்ளார்.
உண்மையில், ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு முன்பு அவர் பிசிபியிடம் பல கோரிக்கைகளை முன்வைத்ததாக பல ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இருப்பினும், அந்தக் கோரிக்கைகளின் விவரங்கள் வெளியிடப்படவில்லை. அறிக்கைகளின்படி, முகமது ரிஸ்வான் மட்டுமே, இன்னும் மத்திய ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத ஒரே வீரராக உள்ளார். முன்னதாக, நட்சத்திர வீரர் பாபர் அசாமும் இதேபோன்ற ஒரு சூழலை எதிர்கொண்டாலும், அவர் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடருக்காக மீண்டும் பாகிஸ்தான் அணிக்கு அழைக்கப்பட்டார்.

Mohammad Rizwan
ஆனால், ரிஸ்வான் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறார். ரிஸ்வானை கேப்டன் பதவியிலிருந்து நீக்கியதற்கான எந்த ஒரு காரணத்தையும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தனது அதிகாரப்பூர்வ அறிக்கையில் குறிப்பிடவில்லை. முகமது ரிஸ்வானை கேப்டன் பதவியிலிருந்து நீக்கும் முடிவு, பயிற்சியாளர் ஹஸனின் தனிப்பட்ட விருப்பம் மட்டுமல்ல, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் உயர் மட்டத்தில் இருந்தும் அந்த முடிவுக்கு ஆதரவு இருந்ததாகக் கூறப்படுகிறது.
