இன்றைய PT World Digest பகுதியில் பேரிடர் பூமியாக அறிவிக்கப்பட்ட ஜமைக்கா முதல் அமெரிக்க ரஷ்ய அதிபர்கள் சந்திப்பு வரையிலான முக்கிய செய்திகளைப் பார்க்கலாம்.
1. ஜமைக்கா பேரிடர்

Jamaica
மெலிசா புயல் ஏற்படுத்திய பாதிப்புகளால் ஜமைக்காவை பேரிடர் பூமியாக பிரதமர் ஆண்ட்ரூ ஹோல்னஸ் அறிவித்துள்ளார். ஏராளமான வீடுகள், மருத்துவமனைகள், பள்ளிகள் புயலால் சேதடைந்துள்ளன. இதுவரை 3 பேர் இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் இது மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. எங்கு நோக்கினும் வெள்ளமாக காணப்படுவதால் மக்கள் வீட்டிற்கு வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த புயல் எந்தளவுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தியது என்பது தெரியவே இன்னும் சில நாட்களாகும் என அரசு தெரிவித்துள்ளது. பெரும் சேதத்தை ஏற்படுத்திய இப்புயல் அடுத்து கியூபா நாட்டை நோக்கி நகர்ந்தது
2. நூற்றாண்டின் சக்தி வாய்ந்த புயல்

Jamaica
ஜமைக்கா நாட்டில் மெலிசா புயலால் பலத்த சேதம் ஏற்பட்டது. மணிக்கு 295 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய இப்புயல் இந்நூற்றாண்டில் சக்தி வாய்ந்த புயலாக பார்க்கப்படுகிறது. சூறாவளிக் காற்றால் பல வீடுகளின் கூரைகள் காற்றில் பறந்தன. ஏராளமான மரங்கள் விழுந்தன. தொலைத்தொடர்பு, மின்சார கோபுரங்கள் விழுந்ததால் தொலைபேசி, மின்சார சேவை பாதிக்கப்பட்டுள்ளது. 77% வீடுகளில் மின்சாரம் இன்றி இருண்டுள்ளது. கடலோர பகுதிகளில் வசித்த 50 ஆயிரம் பேர் முன்கூட்டியே முகாம்களுக்கு மாற்றப்பட்டுவிட்டனர்.
3. காசா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்

Israel hits Gaza
காஸா மீது இஸ்ரேலிய படைகள் விடியவிடிய நடத்திய கொடூர தாக்குதலில் குழந்தைகள் உட்பட 60 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஹமாஸ் கிளர்ச்சிப்படையினர் மீறுவதாக குற்றஞ்சாட்டி வந்த இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு சக்திவாய்ந்த தாக்குதலை நடத்துமாறு படைகளுக்கு உத்தரவிட்டிருந்தார். இத்தாக்குதலில் காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். போர் நின்று விட்டது என நம்பி காஸாவின் மையப்பகுதிக்கு வந்த அப்பாவி மக்கள் மீது இந்த கொடூரத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது
4. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் சமாதான பேச்சு தோல்வி

Pakistan-Afghanistan peace talks
துருக்கியின் இஸ்தான்புல்லில் நடைபெற்ற பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் சமாதான பேச்சு தோல்வியடைந்துவிட்டது. 4 நாட்களாக நடைபெற்ற இப்பேச்சுவார்த்தையில் எந்த தீர்வும் எட்டப்படவில்லை என பாகிஸ்தான் அமைச்சர் அட்டாவுல்லா தரார் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தி வரும் பயங்கரவாதிகளை அடக்க ஆப்கானிஸ்தான் தயக்கம் காட்டுவதாகவும் அட்டாவுல்லா தரார் தெரிவித்தார். பேச்சுவார்த்தை தோல்வியடைவதற்கு இந்தியாதான் காரணம் என பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிஃப் தெரிவித்துள்ளார்.
5. நாளை அமெரிக்கா, சீனா அதிபர்கள் சந்திப்பு

Trump and Xi
உலகமே எதிர்பார்க்கும் அமெரிக்கா, சீனா அதிபர்கள் சந்திப்பு நாளை மறுநாள் தென் கொரியாவில் நடைபெறுகிறது. தென் கொரியாவின் புசான் (BUSAN) நகரில் நடைபெறும் ஆசிய பசிபிக் நாடுகள் கூட்டத்தில் பங்கேற்கும் இரு தலைவர்களும் தனியாகவும் சந்தித்து பேசுகின்றனர். கடந்த 10 மாதங்களாக ட்ரம்ப் எடுத்து வரும் நடவடிக்கைகள் உலக பொருளாதாரத்தையே ஆட்டம் காண செய்துள்ளன. குறிப்பாக சீனாவுக்கு அவர் விதித்த வரிகள் உலக வர்த்தக சமநிலையையே பாதித்துள்ளன. இந்நிலையில் சீன அதிபர் ஷி ஜின்பிங்கை ட்ரம்ப் முதன்முறையாக நேரில் சந்திக்க உள்ளார். இதில் தங்களிடம் இருந்து சோயாபீன் வாங்குவது குறித்தும் அரிய வகை கனிமங்களுக்கு ஏற்றுமதி கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்தும் ட்ரம்ப் பேசுவார் எனத் தெரிகிறது. சீனா மீதான வரி விதிப்புகளை தளர்த்துவது குறித்து ஜின்பிங் வலியுறுத்துவார் எனத் தெரிகிறது. இவர்கள் பேசுவதற்கு முன்னதாக இரு தரப்பு அதிகாரிகளும் பேசி முக்கிய அம்சங்களில் கருத்தொற்றுமையை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க, சீன மோதல் போக்கு நீங்கும் என்ற தகவலால் சர்வதேச அளவில் தங்கம் விலை குறைந்து அது இந்தியாவிலும் எதிரொலிப்பது குறிப்பிடத்தக்கது
6. வெனிசுலா வெளியிட்ட அறிவிப்பு

kamla prasad
டிரினிடாட் டொபேகோ நாட்டின் பிரதமர் கமலா பிரசாத்தை விரும்பத்தகாத நபராக வெனிசுலா அறிவித்துள்ளது. தங்களக்கு எதிரான அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கு துணை போவதால் இந்த அறிவிப்பை வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ நாடாளுமன்றத்தில் வெளியிட்டார். மேலும் டிரினிடாட்டுடனான எரிசக்தி ஒப்பந்தங்கள் உடனடியாக நிறுத்திவைக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். இதற்கிடையே தங்களை போரில் ஈடுபட செய்வதற்கான அமெரிக்காவின் சதியை முறியடித்துவிட்டதாக வெனிசுலா அமைச்சர் தெரிவித்துள்ளார். வெனிசுலாவில் உள்ள ஒரு கூலிப்படையை கொண்டு அமெரிக்க கப்பல் மீது தாக்குதல் நடத்தி அப்பழியை அரசு மீது போட சிஐஏ சதி செய்ததாக அவர் கூறியுள்ளார்
