
நிதி ரீதியாகச் சுயசார்புடனும், சுதந்திரமாகவும் இருக்கும் ஒரு வாழ்க்கைத் துணைக்கு (கணவன் அல்லது மனைவி) நிரந்தர ஜீவனாம்சம் வழங்க முடியாது என்று டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
Summary
சமீபத்தில், ஜீவனாம்சம் தொடர்பான ஒரு குடும்ப நல நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதிகள் அனில் க்ஷேதர்பால் மற்றும் ஹரிஷ் வைத்தியநாதன் சங்கர் ஆகியோர் அடங்கியஅமர்வின் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், நிரந்தர ஜீவனாம்சம் என்பது சமூக நீதியின் ஒரு நடவடிக்கையாகத்தான் கருதப்படுகிறது. இது திறமையான இரு நபர்களின் நிதி நிலையைச் சமன்படுத்துவதற்கான ஒரு கருவியோ அல்லது ஒருவரைச் செல்வச் செழிப்படையச் செய்வதற்கான ஒரு வழியாகவோ கருதப்பட முடியாது என்றும் நீதிமன்றம் கூறியது.

ஜீவனாம்சம்
தொடர்ந்து, ஜீவனாம்சம் கோருபவர் தனக்கு உண்மையிலேயே நிதி உதவி தேவை என்பதை நிரூபிக்க வேண்டும் என்று நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. நிதி ரீதியாகச் சுயசார்புடையவர்களுக்கு ஜீவனாம்சம் வழங்க, இந்து திருமணச் சட்டத்தின் பிரிவு 25-இன் கீழ் உள்ள நீதிமன்ற அதிகாரத்தைப் பயன்படுத்த முடியாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
முன்னதாக அந்த வழக்கில், கணவரின் மனுவை ஏற்று மனைவிக்கு ஜீவனாம்சம் மறுக்கப்பட்டதுடன், கொடுமை அடிப்படையில் விவாகரத்து வழங்கப்பட்டிருந்தது. மனுதாரர் (மனைவி), இந்திய ரயில்வே போக்குவரத்துத் துறையில் குரூப் ‘ஏ’ அதிகாரியாகப் பணியாற்றுவதாகவும், கணிசமான வருமானம் ஈட்டி நிதிச் சுதந்திரத்துடன் இருப்பதாகவும் நீதிமன்றம் குறிப்பிட்டது.
மனைவி, கணவரை நோக்கித் தரக்குறைவான வார்த்தைகளைப் பயன்படுத்தியது, அவரது தாயை இழிவாகப் பேசியது மற்றும் பிற அவமானப்படுத்தும் செயல்களில் ஈடுபட்டது மனரீதியான கொடுமை ஆகும் என்றும் உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.

நீதிபதி அனில் க்ஷேத்ரபால் மற்றும் நீதிபதி ஹரீஷ் வைத்தியநாதன்
தொடர்ந்து, மனைவி தரப்பிலிருந்து விவாகரத்தைத் தடுப்பதாக வெளிப்படையாகக் கூறிக்கொண்டாலும், திருமணத்தை ரத்து செய்ய சம்மதிக்க ரூ.50 லட்சம் நிதி ஜீவனாம்சம் கேட்டது. பாசம் அல்லது உறவைப் பாதுகாப்பது நோக்கமாக அல்லாமல், அவரது நோக்கம் பொருளாதார ரீதியானது என்பதைக் காட்டுகிறது என்றும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.
இதையடுத்து நீதிபதி அனில் க்ஷேத்ரபால் மற்றும் நீதிபதி ஹரீஷ் வைத்தியநாதன் ஷங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு, “குறுகிய கால திருமண வாழ்க்கை, குழந்தைகள் இல்லாதது, மனுதாரரின் கணிசமான மற்றும் தனிப்பட்ட வருமானம் மற்றும் நிதித் தேவையின் நம்பகமான ஆதாரம் இல்லாதது ஆகியவை நிரந்தர ஜீவனாம்சம் கோருவதை மறுக்கின்றன” என்று கூறி, குடும்ப நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்து உத்தரவிட்டுள்ளது.