
மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் 10 ஆதரவை நிறுத்தியது, பயனர்கள் விண்டோஸ் 11-க்கு மேம்படுத்த வேண்டும் அல்லது ESU மூலம் பாதுகாப்பு பெறலாம். தரவை கிளவுட்டில் சேமிக்க பரிந்துரை.

விண்டோஸ் 10 -க்கு மைக்ரோசாப்ட் வழங்கிய அதிகாரப்பூர்வ சப்போர்ட் முடிவடைந்த நிலையில், உலகம் முழுக்க உள்ள விண்டோஸ் யூசர்கள் தங்களது கணினியை புதிய விண்டோஸ் 11 – க்கு மேம்படுத்த வேண்டும் அல்லது பாதுகாப்பு அபாயத்தை எதிர்கொள்ள வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
மைக்ரோசாஃப்ட் நிறுவனம் நேற்று (அக்டோபர் 14, 2025) முதல் அதிகாரப்பூர்வமாக விண்டோஸ் 10 -க்கான ஆதரவை நிறுத்துகிறது. இதன் விளைவாக, உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான விண்டோஸ் 10 யூசர்கள், புதுப்பிக்கப்பட்ட விண்டோஸ் 11-க்கு மாறவோ அல்லது பாதுகாப்பு அபாயங்களுடன் விண்டோஸ் 10 உடன் தொடர வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
அதிகாரப்பூர்வ ஆதரவு முடிவு
விண்டோஸ் 10-க்கான அதிகாரப்பூர்வ ஆதரவை நிறுவனம் இன்றுடன் நிறுத்திக் கொள்கிறது. இதன் பொருள் என்னவென்றால், விண்டோஸ் 10 பதிப்பை தங்களது கணினியில் பயன்படுத்தி வரும் யூசர்கள், இனி மைக்ரோசாஃப்ட் தரவுத்தளத்திலிருந்து அப்டேட்கள், பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப ஆதரவை பெற முடியாது.
இரண்டு விருப்பங்கள்
மேலும், விண்டோஸ் 10 யூசர்களுக்கு இரண்டு விருப்பங்கள் வழங்கப்பட்டுள்ளன.
விண்டோஸ் 11-க்கு மேம்படுத்தல்: இதன் மூலம் புதிய ஓஎஸ்-க்கு மாற்றம் செய்து, புதிய பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப வசதிகளைப் பெறலாம்.
– பழைய பதிப்பில் தொடர்ந்த பயன்பாடு: ஆனால், இதில் பாதுகாப்பு அபாயங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
எக்ஸ்டெண்டட் செக்யூரிட்டி அப்டேட்கள் (ESU)
தங்களது யூசர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, மைக்ரோசாஃப்ட் நிறுவனம் எக்ஸ்டெண்டட் செக்யூரிட்டி அப்டேட்கள் (Extended Security Updates – ESU) திட்டத்தையும் வழங்கி வருகிறது. இது மாணவர்கள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்களுக்காக ஒரு வருடத்திற்கு $30 (தோராயமாக ரூ. 2,550) என்கிற விலையில் கிடைக்கும். இந்தியாவில் இதன் எதிர்பார்க்கப்படும் விலை இன்னும் உறுதியாகத் தெரியவில்லை.
மைக்ரோசாஃப்ட் ரிவார்ட்ஸ் மூலம் ஆதரவு
யூசர்கள் 1000 மைக்ரோசாஃப்ட் ரிவார்டு புள்ளிகளை சேர்த்து எக்ஸ்டெண்டட் செக்யூரிட்டி அப்டேட்களை குறைந்த செலவில் பெறலாம். இதற்காக, நீங்கள் மைக்ரோசாஃப்ட் கணக்கில் பதிவு செய்து, பிங் சர்ஸ், மைக்ரோசாஃப்ட் ஸ்டோர் ஷாப்பிங், எக்ஸ்பாக்ஸ் கேம்கள் விளையாடுதல் போன்றவற்றை செய்ய வேண்டும்.
தரவுகளை கிளவுட்டில் பதிவேற்றுதல்
ஒருவேளை நீங்கள் பழைய விண்டோஸ் 10 ஓஎஸ்-ஐயே தொடர்ந்து பயன்படுத்த நினைத்தால், உங்களது முக்கிய கோப்புகள் மற்றும் தரவுகளை பாதுகாப்பதற்காக விண்டோஸ் பேக்அப் கிளவுட் போன்ற சேவையில் பதிவேற்றிக் கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது. இதன் மூலம், ஓஎஸ்-இல் ஏதேனும் பிழைகள் அல்லது குறைபாடுகள் ஏற்பட்டாலும், உங்களது தரவு பாதுகாப்பாக இருப்பது உறுதி செய்யப்படும்.
இவ்வாறாக, விண்டோஸ் 10 -இன் அதிகாரப்பூர்வ ஆதரவு நிறுத்தம், பயனர்களை புதிய ஓஎஸ்-க்கு மேம்படுத்தவோ அல்லது பாதுகாப்பு அபாயங்களுடன் பழைய பதிப்பை தொடர வேண்டிய இக்கட்டான சூழலுக்கு தள்ளியுள்ளது. அதே நேரம், எக்ஸ்டெண்டட் செக்யூரிட்டி அப்டேட்கள் அம்சம் மற்றும் கிளவுட்டில் பதிவேற்றுதல் போன்ற மாற்று வழிகளின் மூலம் பயனர்கள் தங்கள் கணினி மற்றும் தரவை பாதுகாக்க முடியும்.