
மகாராஷ்டிராவின் பீட் மாவட்டத்தில் உள்ள சிறிய கிராமத்தில் பிறந்தவர் தாதாசாஹேப். இது அடிக்கடி வறட்சி நிகழும் பகுதியாகும்.
அர்ப்பணிப்பு, கடின உழைப்பு, பெரிய கனவுகள்: இவை அனைத்துமே ஒரு எழுச்சியூட்டும் கதைக்குத் தேவையானவை. இதுபோல் பல வெற்றியாளர்களின் கதையை நாம் பார்த்துள்ளோம். அவர்களில் ஒருவர்தான் தாதாசாகேப் பகத். இது வெறும் ஊக்கமளிக்கும் கதையல்ல; அதையும்விட மேலானது. அவரது தொலைநோக்குப் பார்வை, ஒருபோதும் விட்டுக் கொடுக்காத மனப்பான்மை மற்றும் எப்படியாவது முன்னேற வேண்டும் என்ற ஆர்வம் ஆகியவையே பகத்தின் ஆளுமையை வடிவமைத்துள்ளது.
யார் இந்த தாதாசாகேப் பகத்?
மகாராஷ்டிராவின் பீட் மாவட்டத்தில் உள்ள சிறிய கிராமத்தில் பிறந்தவர் தாதாசாஹேப். இது அடிக்கடி வறட்சி நிகழும் பகுதியாகும். இதனால் விவசாயம் செய்வது கடினமான தொழிலாக மாறிப் போனது. தாதாசாஹேப் குடும்பம் ஒருபோதும் கல்விக்கு அவ்வளவு முன்னுரிமை அளித்ததில்லை என்பதால், அவர் 10ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்தார். பின்னர், ஐடிஐ படிப்பைத் தேர்ந்தெடுத்தார், இது பொதுவாக உடல் உழைப்பைக் கோரும் தொழிற்சாலை வேலைகளுக்கு மக்களைத் தயார்படுத்தும் படிப்பாகும்.
ஐடிஐ முடித்தவுடன் புனேவுக்கு வேலை தேடிச் சென்று, அங்கு ஒரு பணியில் அமர்ந்தார். முதல் வேலையில் அவருக்குக் கிடைத்த சம்பளம் வெறும் ரூ.4,000 மட்டுமே. இவ்வளவு குறைவான சம்பளத்தில் வாழ்க்கை நடத்த முடியாது என்பதை அவர் விரைவில் உணர்ந்தார். பின்னர் பிரபல ஐடி நிறுவனமான இன்போசிஸில் ஆஃபிஸ் பாயாக சேர்ந்தார். இதில் அவருக்கும் மாதம் ரூ.9,000 சம்பளம் கிடைத்தது. முன்பு வாங்கிய சம்பளத்தைவிட ரூ.5,000 அதிகமாகக் கிடைத்ததால் மிகவும் சந்தோஷப்பட்டார். எனவே, எந்த யோசனையும் இல்லாமல் விரைவாக அந்த வேலையைப் பற்றிக்கொண்டார்.
இந்தப் பணி உடல்ரீதியானதாகவும், கடினமான வேலைகள் நிறைந்ததாகவும் இருந்தாலும், சம்பளம் என்னவோ குறைவாகவே இருந்தது. அந்நிறுவனத்தில் கணினிகளில் அறிவுப்பூர்வமான வேலைகளைச் செய்வது பல வாய்ப்புகளையும், சிறந்த வருமானத்தையும் பெற்றுத் தரும் என்பதை அவர் உணரத் தொடங்கினார். கணினி சார்ந்த வேலையில் எப்படி சேர்வது என மற்ற ஊழியர்களிடம் கேட்டபோது, உன்னிடம் குறைந்த கல்வித் தரம் இருப்பதால் நல்ல வேலை கிடைக்காது என்று கூறினர். அதேசமயம் கிராஃபிக்ஸ் வடிவமைப்பு மற்றும் அனிமேஷனை கற்றுக்கொள்ளுமாறு பரிந்துரைத்தனர். ஏனென்றால், இதில் பட்டப்படிப்புகளைவிட திறன்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. அதன் பின்னர் படைப்புத் துறையைத் தொடர உறுதி பூண்டார்.
இரவில் ஆஃபிஸ் பாயாக பணியாற்றியபடியே, பகலில் வடிவமைப்புக் கலையைக் கற்றுக்கொண்டார். அவரது கடின உழைப்பு பலனளித்தது. ஒரு வருடத்திற்குள், தேர்ந்த தொழில்முறை வடிவமைப்பாளராக ஆனார். தனது பயணத்திற்கு எதுவும் இடைஞ்சலாக வரக்கூடாது என நினைத்து சொந்தமாக நிறுவனத்தைத் தொடங்கினார். ஆனால் அவர் நினைத்தது போல் தொழில்முனைவோர் பாதை அவ்வளவு எளிதாக அமையவில்லை. இதனால் மீண்டும் தனது கிராமத்திற்குத் திரும்பினார்.
அங்கு கிராமத்தின் எளிமையான வாழ்க்கை முறையில் உள்ள வாய்ப்புகளைக் கண்டுபிடித்து, அதற்கேற்ற தயாரிப்பை உருவாக்குவதில் கவனம் செலுத்தினார். தனது பணியிடத்தை மலை உச்சியில் அமைத்துக்கொண்டு, தனது நிறுவனத்திற்கு ‘டிசைன் டெம்ப்ளேட்’ என்று பெயரிட்டார். கொஞ்சம் கொஞ்சமாக அவரது நிறுவனம் வெற்றிபெறத் தொடங்கியது. இன்று புகழ்பெற்ற கேன்வாவைப் போல் தாதாசாகேப் பகத் தொடங்கிய நிறுவனமும் டெம்ப்ளேட்களை வடிவமைப்பதன் மூலம் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளது.
