
பாகிஸ்தான் கிரிக்கெட்டையே அழிக்க நினைக்கிறது என்றும், இந்தியாவை போல நாங்களும் பாகிஸ்தானுடன் கைக்குலுக்க மாட்டோம் என்று ஆப்கானிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் கூறியுள்ளார்.
Summary
பாகிஸ்தான் கிரிக்கெட்டையே அழிக்க நினைக்கிறது என்றும், இந்தியாவை போல நாங்களும் பாகிஸ்தானுடன் கைக்குலுக்க மாட்டோம் என்று ஆப்கானிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் கூறியுள்ளார்.
ஆப்கானிஸ்தானின் உர்குன் மாவட்டத்தில் பாகிஸ்தான் நடத்திய எல்லைத்தாண்டிய தாக்குதலில் ஆப்கானிஸ்தானை சேர்ந்த உள்ளூர் கிரிக்கெட் வீரர்கள் 3 பேர் கொல்லப்பட்டதாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
8 பேர் கொல்லப்பட்டதில் 3 கிரிக்கெட் வீரர்கள் இறந்ததாகவும், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பாகிஸ்தானில் நடக்கவிருந்த முத்தரப்பு டி20 தொடரிலிருந்து விலகுவதாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் கொல்லப்பட்டதற்கு ரசீத் கான் கண்டனம்
இந்த செய்தி கிரிக்கெட் உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், ஆப்கானிஸ்தான் அணியின் தற்போதைய கேப்டன் ரசீத் கான் வேதனையாக இருப்பதாக பதிவிட்டுள்ளார். அதேவேளையில் முன்னாள் ஆப்கானிஸ்தான் கேப்டன் கரீம் சாதிக், பாகிஸ்தான் கிரிக்கெட்டை அழிக்க நினைக்கிறது என்று குற்றஞ்சாட்டினார்..
பாகிஸ்தான் உடன் கைக்குலுக்க மாட்டோம்..
ஆப்கானிஸ்தானை சேர்ந்த 3 இளம் கிரிக்கெட் வீரர்கள் கொல்லப்பட்ட அதிர்ச்சி செய்திக்கு பிறகு NDTV உடன் பேசியிருக்கும் முன்னாள் ஆப்கானிஸ்தான் கேப்டன் கரீம் சாதிக், தங்களுடைய சிறுவர்கள் எப்படியான கடினமான சூழலில் சாதிக்க போராடுகிறார்கள் என்பதை வெளிப்படுத்தினார்.
இதுகுறித்து அவர் பேசுகையில், “8 பேரில் எங்களின் எதிர்கால கிரிக்கெட்டர்கள் வீரர்கள் 3 பேர் கொல்லப்பட்டனர். எங்கள் குழந்தைகள் ஏழை வீடுகளிலிருந்து வருகிறார்கள். இங்குள்ள பெரும்பாலான மக்கள் ஒரு நாளைக்கு ஒரு வேளை மட்டுமே சாப்பிடுகிறார்கள். அவர்களைக் கொல்வதன் மூலம், பாகிஸ்தான் ஒரு கோழைத்தனமான செயலைச் செய்துள்ளது. ஆனால் இவை எதுவும் எங்களுடைய கிரிக்கெட்டை நிறுத்தாது. நாங்கள் தொடர்ந்து கிரிக்கெட் விளையாடுவோம். அதேவேளையில் இந்தியாவைப் போல நாங்களும் பாகிஸ்தானுடனும் கைகுலுக்க மாட்டோம்.

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி
ஆப்கானிஸ்தானின் 34 மாகாணங்களில் சுமார் 2,000 சிறிய மற்றும் பெரிய கிளப்புகள் உள்ளன. இந்த இரண்டாயிரம் கிளப்புகளில் இருந்து வடிகட்டப்பட்ட கிரிக்கெட் வீரர்கள் கிரேடு-2க்குள் நுழைகிறார்கள். கிரேடு-2ல் சிறப்பாக செயல்படும் வீரர்கள் கிரேடு-1ஐ அடைகிறார்கள். கிரேடு-1ல் தங்கள் திறமையை நிரூபித்த பிறகு, இந்த கிரிக்கெட் வீரர்கள் முதல் தர கிரிக்கெட்டை விளையாடுகிறார்கள், பின்னர் நாட்டிற்காக விளையாடுகிறார்கள். இப்படிதான் தங்களுடைய திறமையை வளர்த்துக்கொண்டு கனவோடு வெளியே வருகிறார்கள்.

கரிம் சாதிக்
கொல்லப்பட்ட வீரர்களும் இங்கிருந்து மாகாண கிரிக்கெட்டை விளையாடியிருக்கலாம். அவர்கள் உங்கள் ரஞ்சி அணிக்கு சமமான நிலையை நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். கிரிக்கெட் வீரர்கள் உலகை ஒன்றிணைக்க உழைக்கிறார்கள். ஆனால் பாகிஸ்தான் கிரிக்கெட்டையே அழிக்க விரும்புகிறது” என்று வேதனையுடன் பேசியுள்ளார்.