
அனில் அம்பானி சம்பந்தப்பட்ட நிதி மோசடி வழக்கில் ரிலையன்ஸ் பவர் நிறுவனத்தின் முக்கிய அதிகாரி ஒருவர் ஒருவரை அமலாக்க துறையினர் கைது செய்துள்ளனர். இது இந்திய கார்ப்பரேட் உலகில் பரபரப்பாக பேசப்படும் ஒரு விஷயமாக மாறி இருக்கிறது .
இந்தியாவின் மிகப்பெரிய தொழில் குழுமம் தான் ரிலையன்ஸ். திருபாய் அம்பானி தான் ரிலையன்ஸ் தொழில் குழுமத்தை தோற்றுவித்தவர். அவருடைய இரண்டு மகன்கள் அனில் அம்பானி மற்றும் முகேஷ் அம்பானி ஆகிய இருவரும் தான் தந்தையின் தொழில்களை கவனித்து வருகின்றனர். இதில் முகேஷ் அம்பானி தொழிலில் வெற்றி பெற்று நாட்டின் நம்பர் ஒன் பணக்காரராக தொடர்ந்து தன்னை தக்கவைத்துக் கொண்டிருக்கிறார் . கால் பதிக்கும் துறைகளில் எல்லாம் வெற்றியும் பெற்று வருகிறார்.
அனில் அம்பானியை பொருத்தவரை தொடக்கத்தில் சிறப்பாக செயல்பட்டிருந்தாலும் நாளடைவில் தொழிலில் நஷ்டம் அடைந்து திவால் நிலைக்கு சென்றுவிட்டார் . அனில் அம்பானி தற்போது அந்த பிரச்சினைகளில் இருந்து மீண்டு வந்தாலும் பல்வேறு வழக்குகள் தொடர்ந்து அவரை சுற்றிக்கொண்டு தான் இருக்கின்றன . பல்வேறு வங்கிகளும் கடன்களை வாங்கிவிட்டு திரும்ப செலுத்தவில்லை என அனில் அம்பானி மற்றும் அவருக்கு சொந்தமான நிறுவனங்களின் மீது கடன் மோசடி புகார்களை அளித்துள்ளன .
இது தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தரப்பில் விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது. இத்தகைய சூழலில் அனில் அம்பானிக்கு நெருக்கமானவரும் ரிலையன்ஸ் பவர் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியமான அசோக்குமார் பால் அமலாக்க துறையினரால் கைது செய்யப்பட்டு இருக்கிறார். 17 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான கடன் மோசடி வழக்கில் அவர் கைது செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
டெல்லியில் இருக்கக்கூடிய அமலாக்கத்துறை அலுவலகத்தில் அவர் கஸ்டடியில் எடுக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவிடம் போலி வங்கி உறுதி சான்றிதழை வழங்கி மோசடி செய்ததில் அசோக்குமார் பால் முக்கிய பங்கு வகித்ததாக அமலாக்க துறையினரின் விசாரணையில் தெரிய வந்திருக்கிறதாம்.
இந்த போலி வங்கி உத்தரவாதத்தை அடிப்படையாகக் கொண்டுதான் போலி ரசீதுகள் ,போலி நிறுவனங்கள் உள்ளிட்டவற்றை உருவாக்கி மிகப்பெரிய அளவில் கடன் மோசடி செய்திருப்பதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர். இந்த மோசடிக்கு மையமாக அசோக் பால் இருப்பதாகவும் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருவதாகவும் கூறுகின்றனர்.
முன்னதாக ஆகஸ்ட் மாதம் அனில் அம்பானிக்கு சொந்தமான 35 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். 25 தனி நபர்களின் குடியிருப்புகளிலும் சோதனை நடத்தினர். அதே மாதத்தில் அனில் அம்பானியும் அமலாக்கத்துறை அதிகாரிகளால் விசாரணைக்கு அழைக்கப்பட்டார் . அவரிடம் யெஸ் வங்கி உள்ளிட்ட பல்வேறு வங்கிகள் நிதி மோசடி செய்ததாக வழங்கப்பட்ட புகார் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது . அசோக்குமார் பாலின் கைது அனில் அம்பானிக்கு மிகப்பெரும் ஒரு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.