
ஐபோன் உள்ளிட்ட எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் உற்பத்தியில் இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் ஐபோன்கள் தான் உலகின் பல நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
உலகின் மிகப்பெரிய ஐபோன் உற்பத்தியாளரான பெகட்ரான் நிறுவனம் சென்னையில் புதிய ஆலை அமைக்க இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தைவான் நாட்டை சேர்ந்த பெகட்ரான் நிறுவனம் சென்னையில் புது ஆலை அமைக்க உள்ளது. உலக அளவில் ஆப்பிள் நிறுவனத்திற்கு தேவையான ஐபோன்களை உற்பத்தி செய்யக்கூடிய முன்னணி நிறுவனங்களாக ஃபாக்ஸ்கான், பெகட்ரான் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன.
இதில் ஃபாக்ஸ்தான் ஏற்கனவே சென்னையில் தன்னுடைய உற்பத்தி ஆலையை நிறுதி செயல்படுத்தி ஐபோன்களை தயாரித்து ஏற்றுமதி செய்து வருகிறது. இந்த சூழலில் மற்றொரு ஐபோன் உற்பத்தி நிறுவனமும் சென்னையில் புதிய ஆலையை அமைக்க இருக்கிறது.இந்தியாவில் தற்போது தனியார் 5ஜி நெட்வொர்க்களுக்கான சந்தை அதிகரித்து வருவதன் காரணமாக தங்களுடைய 5ஜி ஸ்மால் செல்களை உற்பத்தி செய்யக்கூடிய ஆலையை சென்னையில் நிறுவ இருக்கிறோம் என பெகட்ரான் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
பெகட்ரான் நிறுவனத்தின் இந்தியாவிற்கான மேலாளர் ஜெயந்த் மணி கண்ட்ரோல் தளத்திற்கு அளித்துள்ள பேட்டியில் இந்தியாவின் தொலைதொடர்பு உற்பத்தி துறையில் பெகட்ரான் நிறுவனம் மிகப்பெரிய திட்டங்களை வைத்திருப்பதாக கூறி இருக்கிறார். சென்னையில் தங்களின் இரண்டாவது உற்பத்தி ஆலையை நிறுவ இருக்கிறோம் என்றும் இந்த 5ஜி ஸ்மால் செல் உற்பத்தி என்பது தனியார் நிறுவனங்களின் 5ஜி சந்தைக்கு உதவிகரமாக இருக்கும் என்றும் கூறியிருக்கிறார். இந்தியாவில் இந்த துறை வேகமாக வளர்ந்து வருகிறது என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.
பெகட்ரான் உலகின் மிகப்பெரிய எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. உலக அளவில் இதன் வருமானம் ஆண்டுதோறும் 35 லிருந்து 40 பில்லியன் டாலர்களாக இருக்கிறது. மின்னணு உற்பத்தி மட்டும் இல்லாமல் டெலிகாம் உற்பத்தி பிரிவிலும் கடந்த நான்கு ஆண்டுகளாக கால் பதித்து வேகமான வளர்ச்சியை அடைந்து வருகிறது.
சென்னையில் நிறுவப்படக்கூடிய இந்த ஆலையின் மூலம் உற்பத்தி செய்யப்படக்கூடிய 5ஜி ஸ்மால் செல்கள் உள்நாட்டு பயன்பாட்டுக்கு மட்டும் இல்லாமல் வெளிநாட்டு சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் என கூறி இருக்கிறார். ஐரோப்பா, கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகள் , வட அமெரிக்கா நாடுகளுக்கும் இங்கு உற்பத்தி செய்யக்கூடிய 5ஜி செல்கள் ஏற்றுமதி செய்யப்பட உள்ளன.
ஏற்கனவே சென்னையில் பெகட்ரான் ஒரு ஆலையை நிறுவி இருக்கிறது. இந்த ஆலையில் ஐபோன்கள் ஒருங்கிணைக்கப்பட்டு ஏற்றுமதி செய்து வருகிறது .தற்போது இந்த ஆலையை டாடா எலக்ட்ரானிக்ஸ் கையகப்படுத்தி ஐபோன் உற்பத்தியை தொடர்கிறது. சென்னையில் புதிதாக நிறுவப்படும் ஆலையில் 5 ஜி கருவிகளுக்கான கேமரா, வைஃபை உள்ளிட்டவையும் உற்பத்தி செய்யப்படும் என பெகட்ரான் கூறியுள்ளது. பெகட்ரானின் இந்த புதிய ஆலை மூலம் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாக உள்ளன.