
பீகார் தேர்தலில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிரசாந்த் கிஷோர் தேர்தலில் போட்டியிடவில்லை என அறிவித்துள்ளார்.
243 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட பிகார் மாநிலத்திற்கு நவம்பர் மாதம் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் , காங்கிரஸ் தலைமையிலான மகா கட்பந்தன் கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நடைபெற்றாலும், புதிய அரசியல் தலைவர்களின் வருகை பிகார் அரசியலில் பெரிதும் பேசப்பட்டு வருகிறது.

prasanth kishor
அவ்வாறு, தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோரின் “ஜன் சுராஜ்” கட்சியும் பிகார் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தும் முக்கிய கட்சியாக வளர்ந்துள்ளது. இந்நிலையில், பிகார் சட்டப்பேரவைத் தேர்தலுக்காக இரண்டு கட்டங்களாக வேட்பாளர் பட்டியலை அறிவித்தார் ஜன்சுராஜ் கட்சித் தலைவர் பிரசாந்த் கிஷோர். அதில், வழக்கமான அரசியல் கட்சிகளைப் போலல்லாமல் வேட்பாளர் பட்டியலில், தொழில்முறை வல்லுநர்கள், முன்னாள் அரசு அதிகாரிகள், மருத்துவர்கள் மற்றும் கல்வியாளர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து, அனைத்து சமூக மக்களின் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்யும் வகையில், அனைத்து சமூகப் பிரிவுகளில் இருந்தும், வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டார்கள். இதன்மூலம், பிகார் அரசியலில் திறமை மற்றும் தூய்மையான ஆளுமை என்ற புதிய அத்தியாயத்தை எழுத பிரசாந்த் கிஷோர் முயல்வதைச் பலர் சுட்டிக்காட்டினர்.
தொடர்ந்து, பிராசாந்த் கிஷோர் எந்த சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடப் போகிறார்? என்ற எதிர்பார்ப்பு இருந்த சூழலில், அவர், தேஜஸ்வி யாதவின் கோட்டையான ராகோபூர் தொகுதியில் போட்டியிடுவார் என பலத்தரப்பில் இருந்தும் கூறப்பட்டு வந்தது. இந்நிலையில், இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, நேற்று இரவு ஜன் சுராஜ் கட்சி ராகோபூர் தொகுதிக்கு சஞ்சல் சிங் வேட்பாளர் அறிவிக்கப்பட்டிருக்கிறார்.
இதனால், பிரசாந்த் கிஷோர் தேர்தலில் போட்டியிடுவாரா? என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் தனியார் செய்து நிறுவனமான பி.டி.ஐ-க்கு பிரசாந்த் கிஷோர் வழங்கியுள்ள நேர்காணலில், நடப்பு பிஹார் சட்டமன்றத் தேர்தலில் தான் போட்டியிட போவதில்லை என அவர் அறிவித்துள்ளார். அதே நேரத்தில் தனது கட்சியான ஜான் சுராஜ் க்கு 150 சட்டமன்றத் தொகுதிகளை இலக்காக நிர்ணயம் செய்துள்ளதாகவும், ஜன் சுராஜ் கட்சி பீகார் மாநிலத்தில் ஆட்சிக்கு வந்தால் ஒரு மாதத்திற்குள் ஊழல் நிறைந்த அரசியல்வாதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் என 100 பேரின் அடையாளம் கண்டறியப்பட்டு அவர்கள் சட்ட விரோதமாக சேர்த்த செல்வத்தை பறிமுதல் செய்வோம் என தெரிவித்துள்ளார்.
மேலும் பிகார் தேர்தலில் போட்டியிடும் லாலு குடும்பத்தை கடுமையாக விமர்சித்துள்ள பிரசாந்த் கிஷோர் ‘அழுக்கு துணியில் படிந்த கரை’ போல லாலு குடும்பத்திற்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுக்கள் உள்ளது என விமர்சித்தார். மேலும், தற்போது ஆட்சியில் உள்ள தேசிய ஜனநாயக கூட்டணி மாநிலத்தில் ஆட்சியை இழக்க நேரிடும் எனவும் நிதீஷ்குமார் மீண்டும் முதலமைச்சராக வர மாட்டார் என்றும் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.
தேர்தலில் போட்டியிடாததற்கு காரணம் குறித்து பேசுகையில், “கட்சியின் மற்ற வேட்பாளர்களின் வெற்றிக்காக நான் பணியாற்றுவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று கட்சி உறுப்பினர்கள் முடிவு செய்துள்ளனர், எனவே நான் தேர்தலில் போட்டியிடவில்லை. நான் போட்டியிட்டால் கட்சியின் வளர்ச்சியில் கவனம் செலுத்துவதில் இருந்து திசைதிருப்பப்படும்” என்றார்.