
கேரள மாநிலம் திருவிதாங்கூர் தேவஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வைக்கம் ஸ்ரீ மகாதேவர் கோயிலில் பக்தர்கள் காணிக்கையாக அளித்த 255.83 கிராம் தங்கம் காணாமல் போனதாக மாநில தணிக்கையில் தெரியவந்துள்ளது.
Summary
கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோவில் கருவறையின் வாயிலில், இருபுறமும் உள்ள துவாரபாலகர்கள் சிலைகளில் அணிவிக்கப்பட்டு இருந்த தங்க கவசங்கள், 2019இல் கழற்றப்பட்டு, செப்பனிடுவதற்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதற்காக, திருவிதாங்கூர் தேவசம் போர்டு கவசங்களை ஒப்படைத்தபோது, அதன் எடை 42.8 கிலோவாக இருந்தது. அதை செப்பனிட்டபின், சென்னை நிறுவனம் மீண்டும் ஒப்படைத்தபோது, அதன் எடை 38 கிலோவாக குறைந்திருந்தது. அதாவது தங்கமுலாம் பூசப்பட்ட கவசத்தில் இருந்து 4.54 கிலோ அளவுக்கு தங்கம் மாயமாகி இருந்தது. இந்த விவகாரம், பக்தர்கள் மற்றும் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சபரிமலை
தங்கத்தின் எடை குறைந்ததில் உள்ள முறைகேடுகள் குறித்து முழுமையாக விசாரிக்க, நீதிபதிகள் ராஜா விஜயராகவன்.வி மற்றும் கே.வி.ஜெயக்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு தற்போது சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையே, 2019இல் சபரிமலை கோயிலின் துவாரபாலகர் சிலைகள் மீதான தங்கமுலாம் பூசப்பட்ட தகடுகளை தாமிரத் தகடுகளாக தவறாகப் பதிவு செய்ததாக, அப்போதைய நிர்வாக அதிகாரி பி.முராரி பாபுவை திருவிதாங்கூர் தேவசம் போர்டு இடைநீக்கம் செய்துள்ளது. மேலும், உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் இடைத்தரகராகச் செயல்பட்ட உன்னிகிருஷ்ணன் மற்றும் தேவசம்போர்டு துணை ஆணையர் முராரி பாபு, திருவிதாங்கூர் தேவசம் வாரிய செயலர் ஜெயஸ்ரீ, செயல் அதிகாரி சதீஷ், நிர்வாக அதிகாரி ஸ்ரீகுமார், முன்னாள் திருவாபரணம் ஆணையர் கே.எஸ்.பைஜு உள்ளிட்ட 9 அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தேவசம் போர்டு அதிகாரிகளே இந்த கூட்டுக் கொள்ளையில் ஈடுபட்டு இருப்பது அம்பலமாகி இருக்கிறது.
இந்த நிலையில், கேரள மாநிலம் திருவிதாங்கூர் தேவஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வைக்கம் ஸ்ரீ மகாதேவர் கோயிலில் பக்தர்கள் காணிக்கையாக அளித்த 255.83 கிராம் தங்கம் காணாமல் போனதாக மாநில தணிக்கையில் தெரியவந்துள்ளது. இந்த தணிக்கை அறிக்கை கேரள உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 2020-21 நிதியாண்டிற்கான கோயிலின் பதிவேடுகளை ஆய்வுசெய்த தணிக்கையில், 255 கிராம் தங்கம் கணக்கில் வராதது கண்டறியப்பட்டது. தணிக்கையில் கோவிலில் மொத்தம் 199 தங்கப் பொட்டலங்கள் இருப்பதும், பதிவேட்டில் 3,247.9 கிராம் பதிவு செய்யப்பட்டிருப்பதும் கண்டறியப்பட்டது.

வைக்கம் மகாதேவர்
இருப்பினும், பாதுகாப்பு அறையை ஆய்வு செய்ததில் 2,992.07 கிராம் தங்கம் மட்டுமே இருப்பது தெரியவந்தது. தணிக்கையின் அடிப்படையில் 255.83 கிராம் பற்றாக்குறை இருப்பதை தணிக்கைத் துறை உறுதிப்படுத்தியது. இதுதொடர்பாக தேவஸ்தானம் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை என்பதும் தணிக்கையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. ஏற்கெனவே ஐயப்பன் கோவில் கருவறையின் வாயிலில், இருபுறமும் உள்ள துவாரபாலகர்கள் சிலைகளில் அணிவிக்கப்பட்டு இருந்த தங்க கவசங்கள் காணாமல் போன நிலையில், மேலும் ஒரு கோயிலில் தங்கம் காணாமல் போயிருப்பது கேரள அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.