
மு.க.ஸ்டாலின், காசா மீது இஸ்ரேல் தாக்குதலை கண்டித்து, தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்..
காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலை கண்டித்தும், போர் நிறுத்தம் குறித்தும் தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
காசா மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதலை கண்டித்து, சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் கண்மூடித்தனமான தாக்குதல், அனைவரின் மனதையும் உலுக்கி இருப்பதாக குறிப்பிட்டார்.
பன்னாட்டு சட்டங்களை மீறும் இஸ்ரேலை கண்டிக்காமல் இருக்க முடியுமா என்று கேள்வி எழுப்பிய முதலமைச்சர், இனப்படுகொலையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று தெரிவித்தார். இது தொடர்பாக, தமிழ்நாடு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றும் முதலமைச்சர் கூறினார்.
போர் நிறுத்தம் தொடர்பாக இஸ்ரேலுக்கு மத்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார். மேலும், காசாவிற்கு தேவையான அனைத்து விதமான மனிதாபிமான உதவிகளை செய்ய மத்திய அரசு முயற்சிக்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டார்.