
கரூர் துயரச்சம்பவம் தொடர்பாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு இடையே காரசார விவாதம் நடைபெற்றது..
Summary
கரூர் மாவட்டத்தில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி இரவு தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பரப்புரையில், கூட்ட நெரிசல் காரணமாக 10 குழந்தைகள் உட்பட 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த துயரச் சம்பவம் தொடர்பாக காவல்துறை தரப்பும், தவெக தரப்பும் மாறிமாறி குற்றச்சாட்டை முன்வைத்தனர்.

கரூர் துயரச் சம்பவம்
தொடர்ந்து கூட்டநெரிசல் சம்பவம் தொடர்பாக அரசு தரப்பில் விசாரணை ஆணையமும், சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவின் பேரில் சிறப்பு விசாரணைக்குழுவும் நியமிக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. இதை எதிர்த்து தவெக தரப்பு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்தசூழலில் இன்று சட்டப்பேரவை கூட்டத்தில் பேசிய தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தமிழக அரசு எடுத்த நடவடிக்கை குறித்து விளக்கம் கொடுத்தார். கரூர் விவகாரத்தில் தமிழக அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து கையில் கருப்பு பட்டை அணிந்து அதிமுகவினர் பங்கேற்றனர்.
தொடர்ந்து பேரவையில் முதலமைச்சருக்கும் எதிர்க்கட்சித் தலைவருக்கும் இடையே காரசார விவாதம் நடைபெற்றது. பின்னர் எதிர்கட்சித்தலைவர் தர்ணாவில் ஈடுபட்ட நிலையில், அதிமுகவினர் சட்டப்பேரவையை விட்டு வெளிநடப்பு செய்தனர்.
முதல்வர் Vs எதிர்க்கட்சித் தலைவர் காரசார விவாதம்..
கரூர் கூட்டநெரிசல் சம்பவத்தில் தவெக கேட்ட இடத்தை பாதுகாப்பின்மை காரணமாக கொடுக்க மறுத்ததாகவும், பின்னர் தவெகவினர் கோரிக்கையின் பெயரிலேயே வேலுச்சாமிபுரம் ஒதுக்கப்பட்டதாகவும் முதல்வர் தெரிவித்தார்..
அதற்கு பதிலளித்த எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி, திமுகவினர் கட்சிக்கூட்டம் நடத்தினால் மட்டும் கரூர் ரவுண்டானா ஒதுக்கப்படுகிறது. ஆனால் நாங்கள் அந்த இடத்தை கேட்டால் எங்களுக்கு வேறு இடங்கள் திணிக்கப்படுகிறது என்று விமர்சித்தார்.
கரூரில் பாதுகாப்பு பணியில் 606 காவலர்கள் மற்றும் அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டதாக முதல்வர் தெரிவிக்க, மாவட்ட நிர்வாகம் சொன்னதும் முதல்வர் சொன்னதும் வேறுவேறாக இருக்கிறது என்று எடப்பாடி பழனிசாமி விமர்சித்தார். மேலும் இந்த துயரச்சம்பவத்தில் உள்நோக்கம் இருப்பதாகவும் எபிஎஸ் குற்றஞ்சாட்டினார்.
அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின், ஊரில் கல்யாணம் என்றால் மார்பில் சந்தனமா? என்று கூறி, கூட்டணிக்காக பேசவேண்டாம் என்று விமர்சித்தார். மேலும் உள்நோக்கம் என்ற சொல்லை அவைக்குறிப்பில் இருந்து நீக்கவேண்டும் என்றும் தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் பேசுகையில், உள்நோக்கம் என்பது இருக்கட்டும் கூட்டணிக்காக பேசவேண்டாம் என்று பேசியதை அவைக்குறிப்பிலிருந்து நீக்கவேண்டும் என்று எதிர்க்கோரிக்கை வைத்தார்.
39 உடல்கள் உடற்கூராய்வு செய்யப்பட்டதாகவும், அது விடியற்காலை 1 மணிக்கு தொடர்ந்து மதியம் 1 மணிவரை 12 நேரம் செய்யப்பட்டதாகவும், மருத்துவமனையில் உடல்களை வைக்க இடமில்லை என்பதால் தனிக்குழுவை வரவழைத்து உடற்கூராய்வு செய்ததாக முதல்வர் கூறினார்.
அதற்கு பதிலளித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, நான் சென்று பார்த்தபோது ஒரே இரவிலேயே 31 உடல்கள் உடற்கூராய்வு செய்யப்பட்டது. எதற்காக அவசர அவசரமாக 39 உடல்கள் உடற்கூராய்வு செய்யப்பட்டது. 1474 மருத்துவர்கள், செவிலியர்கள் வரவழைக்கப்பட்டது எதற்காக என்று அடுக்கடுக்காக கேள்வி எழுப்பினார்.
உடற்கூராய்வு செய்ய டேபிள்கள் குறைவாக இருந்ததாகவும், உடற்கூராய்வு செய்யும் மருத்துவர்கள் குறைவாக இருந்ததால் மட்டுமே பக்கத்து மாவட்டத்திலிருந்து அத்தனை பேர் வரவழைக்கப்பட்டனர் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
கள்ளக்குறிச்சி சம்பவத்தில் எதற்காக முதல்வர் நேரடியாக செல்லவில்லை என்ற கேள்வி எழுப்பபட்ட நிலையில், அங்கு இறந்தவர்கள் கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்கள் அதனால் தான் செல்லவில்லை. இங்கு சென்றது இறந்தவர்கள் அப்பாவி என்பதால் சென்றேன் என்று பதிலளித்தார்.
தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு செய்திருக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்ட, முதலமைச்சர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் இடையே விவாதம் முற்றியது. இந்தசூழலில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தர்ணாவில் ஈடுபட்டார். பின்னர் அதிமுகவினர் திமுகவிற்கு எதிராக குரல் எழுப்பி அவையை புறக்கணித்தனர்.