
இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக சாம்ராஜ்ஜியமான டாடா குழுமம், ரத்தன் டாடா மறைவிற்குப் பின்பு அதன் உயர்மட்ட நிர்வாகத்தில் எப்போதும் இல்லாத வகையில் புதிய நெருக்கடியை எதிர்கொண்டு உள்ளது. டாடா குழுமத்தின் ஹோல்டிங் நிறுவனமான டாடா சன்ஸ் நிறுவனத்தில் இயக்குனர் நியமிப்பதில் உருவான பிரச்சனை தற்போது டாடா டிர்ஸ்ட் அமைப்பின் டிரஸ்டிகள் மத்தியில் பெரும் பிரச்சனையாக வெடித்துள்ளது.
டாடா டிரஸ்ட் என்பது டாடா சன்ஸ் நிறுவனத்தில் சுமார் 66 சதவீத பங்குகளை வைத்திருக்கும் ஒரு அமைப்பு, இது டாடா குடும்பத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. டாடா டிரஸ்ட் அமைப்பின் தலைவராக ரத்தன் டாடா இருந்த காலம் வரையில் இயக்குனர் நியமனத்தில் எவ்விதமான பிரச்சனையும் வந்தது இல்லை, ஆனால் அவருடைய மறைவிற்குப் பின்பு நோயல் டாடா தலைமை பொறுப்பு ஏற்ற பின்பு புதிய பிரச்சனை வெடித்துள்ளது.
நாட்டின் மிகப்பெரிய வர்த்தக சாம்ராஜ்ஜியத்தில் இதுபோன்ற பிரச்சனை வருவது சரியில்லை என்பதால் மத்திய அரசு தலையிட்டு இப்பிரச்சனைக்குத் தீர்வு காண முடிவு செய்தது. இதன் படி செவ்வாய்க்கிழமை மாலை டாடா டிர்ஸ்ட் அமைப்பு முக்கிய டிரஸ்டிகள் மத்திய உள்துறை அமைச்சரான அமித் ஷா மற்றும் மத்திய நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்தனர்.
டாடா டிரஸ்ட்-யில் இருக்கும் 6 டிரஸ்டிகளில் தற்போது 2 குழுக்கள் ஆக பிரிந்துள்ளனர். இவ்விரு குழுவிற்கும் சமீபத்தில் டாடா சன்ஸ் நிறுவனத்தில் இயக்குனராக நியமிக்கப்ட்ட முன்னாள் பாதுகாப்பு செயலர் விஜய் சிங்கின் மறுநியமனத்தில் பிரச்சனை.
நோயல் டாடா, வேணு ஸ்ரீனிவாசன் ஆகியோர் அடங்கிய ஒரு குழு இவரின் நியமனத்தை ஆதரிக்கிறது, மெஹ்லி மிஸ்ட்ரி, பிரமித் ஜாவேரி, ஜஹாங்கிர் ஜஹாங்கிர் மற்றும் டாரியஸ் கம்பாட்டா ஆகியோர் அடங்கிய குழு எதிர்க்கிறது. விஜய் சிங் நியமனத்தை மறுக்கும் குழு மெஹ்லி மிஸ்ட்ரி-யை டாடா சன்ஸ் இயக்குனராக நியமிக்க வலியுறுத்தி வருகிறது.
இங்கு உருவான விரிசல் தான் தற்போது மிகப்பெரியதாக வெடித்துள்ளது, நேற்று அமித் ஷா – நிர்மலா சீதாராமன் சந்திப்பில் நோயல் டாடா, வேணு ஸ்ரீனிவாசன், டாரியஸ் கம்பாட்டா, டாடா சன்ஸ் தலைவர் என் சந்திரசேகரன் ஆகியோர் சந்தித்தனர். இந்த சந்திப்பைத் தொடர்ந்து டாடா குழுமத்தின் உயர்மட்ட நிர்வாகத்தில் இருக்கும் பிரச்சனைகள் விரைவில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளையில் டாடா – ஷாபூர்ஜி குடும்பத்திற்கு மத்தியிலான நட்புறவில் சைரஸ் மிஸ்திரி விவகாரத்திற்கு பின்பு, டாடா சன்ஸ் நிர்வாகத்தில் எடுக்கப்படும் முடிவுகள் முழுமையாக டாடா டிரஸ்ட் உறுப்பினர்களுக்கு (மிஸ்திரி குடும்ப ஆதரவாளர்களுக்கு) அளிப்பது இல்லை என்ற வாதம் இருந்து வருகிறது, இதற்காகவே டாடா சன்ஸ் நிர்வாகத்தில் மெஹ்லி மிஸ்ட்ரி இருக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.
இதைத் தொடர்ந்து டாடா சன்ஸ் நிறுவனம் பங்குச்சந்தையில் பட்டியலிட வேண்டும் என்ற ஆர்பிஐ விதிமுறையை எதிர்த்துப் போராடி வரும் டாடா குழுமத்திற்கு அதன் உயர்மட்ட நிர்வாகத்திலேயே பிரச்சனை வெடித்துள்ளது.
டாடா சன்ஸ் நிறுவனத்தில் சுமார் 18 சதவீத பங்குகளை வைத்திருக்கும் ஷாபூர்ஜி பலோன்ஜி குடும்பம் இந்த ஐபிஓ மூலம் தனக்குச் சொந்தமான பங்குகளை விற்பனை செய்து நிதி திரட்ட முடிவு செய்துள்ளது. ஷாபூர்ஜி குழுமம் நிதி நெருக்கடியில் நீண்ட காலமாகச் சிக்கியுள்ளது இந்த முடிவுக்கு முக்கிய காரணமாக உள்ளது.
மேலும் அமித் ஷா – நிர்மலா சீதாராமன் சந்திப்பு குறித்து நோயல் டாடா, டாடா குழுமம், என் சந்திரசேகரன் தரப்பில் இருந்து எவ்விதமான அறிவிப்பும் வரவில்லை.
இதேவேளையில் டாடா சன்ஸ் தலைவராக இருக்கும் என் சந்திரசேகரன் விஜய் சிங் நியமனத்தில் எதிரெதிர் திசையில் இருக்கும் இரு குழுக்கள் பக்கம் சாயாமல் நடுநிலையாக இருக்கிறார். டாடா குழுமத்தின் வர்த்தகம், வருவாய், லாபம் ஆகியவற்றை உயர்த்துவதிலும், நிர்வாக குழுவை மேம்பட்ட முறையில் நிர்வாகம் செய்ய வேண்டும் என்ற ஒற்றை இலக்குடன் இருக்கிறார்.