
அக்டோபர் 2024 வரை The Raja Saabக்காக அவர் எந்த வேலையும் செய்யவில்லை. நாங்கள் படத்தை ஏப்ரல் 2025ல் வெளியிட இருந்தோம். ஆனால் அவர் படத்தின் ஒரு ஷாட்டில் கூட பணியாற்றவில்லை.
பிரபாஸ் நடிப்பில் மாருதி இயக்கியுள்ள தெலுங்கு படம் ‘தி ராஜா சாப்’. இதில் சஞ்சய் தத், பொம்மன் இரானி, மாளவிகா மோகனன், நிதி அகர்வால், ரித்தி குமார் எனப் பலரும் நடித்துள்ளனர். முதலில் இப்படம் இந்த ஆண்டு ஏப்ரல் 10 வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. பின்பு டிசம்பர் 5ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. தற்போது மீண்டும் படம் அடுத்த ஆண்டு ஜனவரி 9க்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த தாமதத்திற்கு என்ன காரணம் என படத்தின் தயாரிப்பாளர் டி.ஜி. விஸ்வ பிரசாத் இப்போது வெளிப்படையாக பேசி இருக்கிறார்.
சமீபத்தில் பீப்பிள் மீடியா ஃபேக்டரி தயாரிப்பு நிறுவன தலைவர் டி ஜி விஸ்வபிரசாத் அளித்த பேட்டியில் “VFX மேற்பார்வையாளரால் தான் எங்கள் படம் (தி ராஜா சாப்) தள்ளப்போனது. அக்டோபர் 2024 வரை இப்படத்துக்காக அவர் எந்த வேலையும் செய்யவில்லை. நாங்கள் படத்தை ஏப்ரல் 2025ல் வெளியிட இருந்தோம். ஆனால் அவர் படத்தின் ஒரு ஷாட்டில் கூட பணியாற்றவில்லை. படத்தின் காட்சிகள் எல்லாவற்றையும் அவரிடம் வைத்துக் கொண்டார். அவரது குழு மொத்தத்துக்குமான மாத சம்பளத்தை வாங்கிக் கொண்டார். `புஷ்பா 2′ போன்ற பிற படங்களில் பிஸியாகி, தி ராஜா சாப் படத்தை இழுபறியில் நிறுத்திவிட்டார்.
இது பற்றி வெளியே சொன்னால், படத்திலிருந்து வெளியேறுவேன் என மிரட்டினார். இதை அவர் மற்ற படங்களிலும் செய்திருக்கிறார் போல. அதனால் அவர் ராஜமௌலியின் படத்திலிருந்தும் வெளியேற்றப்பட்டுள்ளார். இப்போது அவர் பெயரை சொல்லவில்லை என்றாலும், ஒரு நாள், எங்களை மிரட்டி பணம் பறித்ததற்கான, விலை என்ன என்பதை நான் அவருக்குக் காண்பிப்பேன். ராஜாசாப் வெளியே வந்த பின் ஒரு பெரிய விஷயம் வெளியே வரும்” எனத் தெரிவித்துள்ளார்.