சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை பெய்து, முக்கிய சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மழை பாதிப்புகளை சரிசெய்ய, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
Summary
மோன்தா புயல் ஆந்திராவில் கரையை கடக்கும் சூழலில், திருவள்ளூர் மாவட்டத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை பெய்து, முக்கிய சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மழை பாதிப்புகளை சரிசெய்ய, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
மோன்தா புயல் காரணமாக சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

montha cyclone
தற்போது மோன்தா புயல் சென்னைக்கு கிழக்கு-தென்கிழக்கில் 400 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. கடந்த ஆறு மணி நேரமாக, புயல் மணிக்கு 17 கிலோமீட்டர் வேகத்தில் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. இன்று காலைக்குள் தீவிர புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மைய அறிக்கைகள் கூறுகின்றன.
புயலின் மையம் காக்கிநாடா தென்- தென்கிழக்கே 310 கிலோ மீட்டர், விசாகப்பட்டினத்தில் இருந்து தெற்கே 370 கிலோ மீட்டர், கோபால்பூர் தென்- தென்மேற்கே 570 கிலோ மீட்டர் தொலைவிலுள்ளது. இன்று மாலை அல்லது இரவில், புயல் அதிகபட்சமாக மணிக்கு 90 முதல் 110 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் காற்றுடன், காக்கிநாடா அருகே ஆந்திர கடற்கரையான மச்சிலிப்பட்டினம்-கலிங்கப்பட்டினம் வழியாக கடக்க வாய்ப்பு உள்ளது.
மோன்தா புயல் ஆந்திராவில் கரையை கடக்கும் சூழலில், திருவள்ளூர் மாவட்டத்திற்கு இன்று ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காக்கிநாடா அருகே மோன்தா புயல் கரையை கடக்கும் நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் மிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதேசமயம், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களிலும், தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களிலும், கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது.
புயல் தாக்கம் எதிரொலியாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை நகரின் பல்வேறு இடங்களில் நேற்று காலை முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக முக்கிய சாலைகளில் தண்ணீர் தேங்கியதால், வாகன ஓட்டிகள் சிரமமடைந்தனர். தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது. சென்னையின் புறநகர் பகுதிகளிலும் காலை முதலே மழை நீடித்தது. மழையின் காரணமாக முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டதால், வாகன ஓட்டிகள் இன்னலுக்கு உள்ளாகினர்.
சென்னையில் மழை பாதிப்புகளை சரிசெய்யும் வகையில், நள்ளிரவில் சென்னை பெருநகர மாநகராட்சியில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் சேவை மையத்தில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார். அப்போது, மழை காரணமாக பொது மக்களிடமிருந்து வரும் கோரிக்கைகள் மற்றும் தேவைகள் குறித்து, அங்கு பணியில் இருந்த அதிகாரிகளிடம் விசாரித்தார்.

உதயநிதி ஸ்டாலின்
வங்கக்கடலில் மோன்தா புயல் உருவான நிலையில், 2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு எண்ணூர் துறைமுகத்தில் ஏற்றப்பட்டுள்ளது. இதன் காரணமாக, பழவேற்காட்டில் 5000க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் ஒரு பகுதியாக, 1000க்கும் மேற்பட்ட படகுகள் கரையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கடல் அலைகளும், கடலோர காற்றும் திடீர் சீற்றத்துடன் காணப்படுகிறது. பழவேற்காடு மீனவர்கள் தங்கள் படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி, மீன்பிடி வலைகளை பத்திரமாக வைத்துள்ளனர்.
