
இந்தியா–அமெரிக்கா உறவு வர்த்தகப் பின்னணியில் தொடர்ந்து பதற்றமான சூழலை எட்டி வருகிறது. இதற்கு வரிவிவகாரம், வௌிநாட்டு அரசியல் நிலைப்பாடுகள் மற்றும் ஜியோபாலிடிக்ஸ் சார்ந்த திட்டவட்டமான காரணங்கள் இருக்கின்றன.
Summary
இந்தியா-அமெரிக்கா வர்த்தக உறவுகள் சீரற்ற நிலையில் உள்ளன. அமெரிக்கா இந்திய பொருட்களுக்கு அதிக வரி விதிப்பதால், இந்திய பொருட்கள் அமெரிக்க சந்தையில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இந்திய தொழில்துறையினர் கவலையில் உள்ளனர். பிரதமர் மோடி இந்திய தொழில்துறையினரை பாதுகாக்க உறுதியளித்துள்ளார்.
இந்தியா–அமெரிக்கா வர்த்தக உறவு தொடர்ந்து சீரற்ற சூழலை எட்டி வருகிறது. இதற்கு வரிவிவகாரம், வெளிநாட்டு அரசியல் நிலைப்பாடுகள் மற்றும் புவி அரசியல் சார்ந்த திட்டவட்டமான காரணங்கள் இருக்கின்றன.
இந்தியப் பொருட்கள் மீது அமெரிக்கா அரசு விதித்துள்ள 25 விழுக்காடு கூடுதல் வரிவிதிப்பு அமலுக்கு வந்திருப்பதால், அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் இந்தியப் பொருட்களுக்கு 50 விழுக்காடு வரி செலுத்த வேண்டியுள்ளது. இந்த அதீத வரியால் இந்தியப் பொருட்கள் அமெரிக்கச் சந்தையில் மற்ற பொருட்களுடன் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக அண்டை நாடுகளுக்கு அமெரிக்கா விதித்துள்ள வரி, இந்தியாவை விட குறைவு. இதனால்,வர்த்தக போட்டிகளும் மிகவும் அதிகம். இது இந்திய தொழில்துறையினர், ஏற்றுமதியாளர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தி இருக்கும் சூழலில், வெளிநாட்டு நெருக்கடிகளுக்கு பணியாமல் இந்திய தொழிற்துறையினரை அரசு பாதுகாக்கும் என பிரதமர் மோடி ஏற்கனவே உறுதியளித்துள்ளார்.
இந்தியா பாகிஸ்தான் அமெரிக்கா…
அடுத்தது இந்திய பாகிஸ்தான் போரில் அமெரிக்காவின் நிலைப்பாடு.. இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போரை தானே நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தொடர்ச்சியாகக் கூறி வருகிறார்.பாகிஸ்தானின் ராணுவ தளபதி முனீர் வெள்ளை மாளிகைக்கு அழைக்கப்பட்ட நிலையில் அவருக்கு விருந்தும் அளிக்கப்பட்டது. இதனையடுத்து மீண்டும் முனீர் அமெரிக்காவுக்கு அழைக்கப்பட்டார். தொடர்ச்சியாக பாகிஸ்தானுக்கு அமெரிக்கா முக்கியத்துவம் கொடுத்து வந்த நிலையில், அதற்கு மூன்று காரணங்கள் இருக்கலாம் என பேசப்பட்டது.
பாகிஸ்தான் தீவிரவாதத்தை ஊக்குவிப்பதாக இந்திய அரசு தொடர்ந்து கூறி வருகிறது. அதேவேளை பாகிஸ்தானில் மக்களாட்சி எனும் பெயரில் மாதிரி ஆட்சியே நடைபெறுகிறது. இத்தகைய சூழலில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முனீரை அழைத்தது பாகிஸ்தானில் உச்சக்கட்ட அதிகாரம் அனைத்தும் ராணுவத்திடம்தான் இருக்கிறது என்பதை அங்கீகரிக்கும் வகையில் ஆகிறது. அதேசமயம் பாகிஸ்தான் தீவிரவாதத்தை ஊக்குவிக்கிறது என்ற இந்தியாவின் பரப்புரைக்கும் பலனில்லாமல் ஆகிறது.
அடுத்தது, ராணுவத்தளபதியான முனீர், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் மோடி என இருவரையும் ஒரே தரத்தில் பார்க்கும் விதமாக ட்ரம்ப் நடந்துகொள்வது இந்தியாவை அவமதிக்கும் செயல் என்கின்றனர் விமர்சகர்கள். மூன்றாவதாக, ட்ரம்ப் அமைதிக்கான நோபல் பரிசை வாங்க வேண்டும் என்று பாகிஸ்தான் வலியுறுத்துவதும் அமெரிக்கா பாகிஸ்தானை ஆதரிப்பதற்கான காரணம் என்கின்றனர்.
அமெரிக்கா தாக்குவதன் 3 காரணங்கள்
இந்தியா மீதான அமெரிக்காவின் இந்த தொடர் தாக்குதல்களுக்கு மூன்று காரணங்கள் சொல்லப்படுகின்றன. இந்தியா ஜப்பானை முந்தி 4.18 டிரில்லியன் அமெரிக்க டாலர் மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன், உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாடாக உருவெடுத்ததும் மிக முக்கியமான காரணமாகப் பார்க்கப்படுகிறது. அடுத்தது, பிரிக்ஸ் அமைப்பு 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைக் கண்டுள்ளது, அதன் உலகளாவிய செல்வாக்கை விரிவுபடுத்துதல், அமெரிக்க டாலரைச் சார்ந்திருப்பதைக் குறைத்தல் மற்றும் வளர்ந்து வரும் பொருளாதாரங்களுக்கிடையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது. இதுவும் ஒரு காரணமாகப் பார்க்கப்படுகிறது. மூன்றாவதாக, இந்தியா, சீனா, ரஷ்யா நட்புறவும் ஒரு காரணமாகக் கூறப்படுகிறது.
குறிப்பாக பிரதமர் மோடி சீனாவுக்கு செல்லவிருப்பதும், 20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் மாநாட்டில் பிரதமர் பங்கேற்கவிருப்பதும் சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது. இந்நிலையில், அமெரிக்காவின் வர்த்தக நடவடிக்கைகள், இருநாடுகளுக்கும் இடையே நீண்டகால கூட்டு உறவை சோதிக்கும் நிலைக்கு கொண்டு சென்றாலும், பரஸ்பர நலன்களில் அடிப்படையாக அமைந்த ஒத்துழைப்பு, நிலைப்பாட்டில் மாறுதல்களை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை தொடர்கிறது. அமெரிக்க அதிபர் ட்ரம்பை பொறுத்தவரையில் அடிக்கடி மாற்றங்களை செய்யக்கூடியவர் என்பதால் இந்த நிலைப்பாட்டிலும் மாற்றம் வருமா என்று பார்க்கலாம்.
இந்தியா மட்டும்தான் வாங்குகிறதா?
உக்ரைன் மீது போர் நடத்திவரும் ரஷ்யாவுக்கு எண்ணெய் வர்த்தகம்தான் மிகப்பெரிய வருவாய் ஆதாரமாக இருக்கிறது. உக்ரைன் போருக்கு முன்பாக இந்தியாவின் எண்ணெய் தேவையில் 2%க்கும் குறைவாக வழங்கிய ரஷ்யா, உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான போருக்குப் பின் 35-40% வரை எண்ணெய் வழங்குகிறது. ரஷ்யாவிடம் இருந்து நாளொன்றுக்கு சுமார் 20 லட்சம் பேரல்கள் அளவுக்கு கச்சா எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்கிறது. இதனை சுத்திகரித்து டீசல் மற்றும் ஜெட் எரிபொருளாக ஐரோப்பிய வாடிக்கையாளர்களுக்கு இந்தியா விற்பனை செய்கிறது.
ரஷ்யாவிடம் இருந்து இந்தியா மட்டும்தான் எண்ணெய் வாங்குகிறதா? எனில் இல்லை. சீனாவும்தான் வாங்குகிறது. ரஷ்யாவின் 70% எண்ணெயை இந்தியாவும், சீனாவும் வாங்குகின்றன. ஆனால் சீனாவை குறைவாகவும் இந்தியாவை அதிகமாகவும் ட்ரம்ப் ஏன் குறிவைக்கிறார் என்ற கேள்வி எழுந்திருக்கிறது. அதேசமயத்தில், ஐரோப்பிய ஒன்றியத்தையும் அமெரிக்கா எதுவும் சொல்வதில்லை.. கூடுதலாக வரிகளையும் விதிப்பதில்லை என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்.