
இந்திய பொருட்களுக்கான வரியை, அமெரிக்கா மொத்தமாக 50 சதவீதமாக உயர்த்தியுள்ளது.
Summary
இந்திய பொருட்களுக்கான வரியை, மொத்தமாக 50 சதவீதமாக உயர்த்தியுள்ளது. இது நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், அது குறித்த செய்திகளை இக்கட்டுரை அலசுகிறது.
அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்துகொள்ளாத நாடுகளுக்குப் புதிய வரிவிதிப்பு அமல்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில், இந்தியாவிற்கும் 50% வரி விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே 25 சதவீத வரி விதிக்கப்பட்ட நிலையில், ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதாகவும், அதன்மூலம் உக்ரைனில் போரை தூண்டுவதாகவும் இந்தியா மீது குற்றம்சாட்டி, கூடுதலாக 25% வரியை அமெரிக்கா விதித்தது.
இதன்மூலம், அமெரிக்க அரசு இந்திய பொருட்களுக்கான வரியை, மொத்தமாக 50 சதவீதமாக உயர்த்தியுள்ளது. ஆரம்ப வரி ஆகஸ்ட் 7ஆம் தேதி முதல் அமலுக்கு வந்த நிலையில், 25% அபராத வரி ஆகஸ்ட் 27 முதல் அமலுக்கு வந்துள்ளது.
இந்தியாவில் பாதிப்புக்குள்ளான துறைகள் :
இந்த வரி நடவடிக்கையால், இந்தியாவின் ஜவுளி, காலணிகள், தோல், ரசாயனங்கள், நகைகள், ஜெம் கற்கள், மின்னணுப் பொருட்கள், கடல்சார்ந்த உணவுப் பொருட்களின் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழகத்தின் திருப்பூர், நொய்டா, சூரத் ஆகிய நகரங்களில் இருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் முடங்கியுள்ளன. ட்ரம்பின் நடவடிக்கையால், இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகும் 48.2 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்கள் வரிவிதிப்புக்கு உள்ளாகும் என கணக்கிடப்பட்டுள்ளது.
அதேநேரத்தில், ட்ரம்ப் அரசின் இது போன்ற வரி நெருக்கடிகளுக்கு அடி பணியாமல், அதை எதிர்கொள்வதற்கான வலிமையை இந்தியா அதிகரித்துக்கொள்ளும் என பிரதமர் மோடி கூறியுள்ளார். தவிர, அமெரிக்காவால் ஏற்படும் பாதிப்பைப் போக்க 40 நாடுகளுக்கு ஜவுளி பொருட்கள் ஏற்றுமதியை விரிவுபடுத்த இந்தியா திட்டமிட்டுள்ளது. அதேசமயம், இழுபறியில் உள்ள அமெரிக்கா, இந்தியா இடையேயான பொருளாதார ஒப்பந்தத்தை இறுதி செய்யும் நடவடிக்கைகளிலும் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து
இதற்கிடையே, இந்திய பொருட்கள் மீது அமெரிக்கா விதித்துள்ள 50% வரியால், தமிழ்நாட்டின் ஏற்றுமதி கடுமையாக பாதித்துள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், அமெரிக்காவின் வரி விதிப்பால் திருப்பூரில் மூவாயிரம் கோடி ரூபாய் வர்த்தக இழப்பு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்திய பொருட்கள் மீது அமெரிக்கா விதித்துள்ள 50% வரியால், தமிழ்நாட்டின் ஏற்றுமதி கடுமையாக பாதித்துள்ளது.
அதேபோல், இந்திய பொருட்களுக்கு 50% வரி விதித்த அமெரிக்காவிற்கு பதிலடியாக அவர்கள் பொருட்களுக்கு நாம் 100% வரி விதிக்க வேண்டும் என டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தியுள்ளார். மத்திய அரசு இம்முடிவை எடுத்தால் ஒட்டுமொத்த நாட்டு மக்களும் ஆதரிப்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார். பிற நாடுகளும் அமெரிக்காவுக்கு இப்படித்தான் பதிலடி கொடுத்துள்ளன என்றும் கெஜ்ரிவால் தெரிவித்தார். அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா வரியை இரட்டிப்பாக்கினால் அதை எதிர்த்து எந்த நாடும் கேள்வி எழுப்பாது என்றும் அவர் கூறினார்.
’அமெரிக்க வரிகள் இந்தியாவுக்கு ஓர் எச்சரிக்கை மணி’ என ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னரும், பிரபல பொருளாதார நிபுணருமான ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார். அவர், “அமெரிக்க வரிகள் இந்தியாவுக்கு ஓர் எச்சரிக்கை மணி. எந்தவொரு ஒற்றை வர்த்தக கூட்டாளியையும் சார்ந்திருப்பதை இந்தியா குறைக்க வேண்டும் என்பதை இது தெளிவுப்படுத்தி உள்ளது. நாம் எந்தவொரு நாட்டையும் பெரிய அளவில் சார்ந்து இருக்கக் கூடாது. ரஷ்யாவின் எண்ணெய் இறக்குமதி தொடர்பான தனது கொள்கையை இந்தியா மறுபரிசீலனை செய்ய வேண்டும். நமது ஏற்றுமதி சந்தைகளை நாம் பன்முகப்படுத்த வேண்டும். சீனா, ஜப்பான், அமெரிக்கா அல்லது வேறு யாருடனும் இணைந்து பணியாற்றுங்கள். ஆனால் அவர்களை சார்ந்து இருக்காதீர்கள். வர்த்தகம், நிதி, முதலீடு இப்போது ஆயுதமாக்கப்பட்டு உள்ளது. இந்தியா மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இதனால் யார் பயன் அடைகிறார்கள்? யார் பாதிக்கப்படுகிறார்கள் என்று நாம் கேட்க வேண்டும். சுத்தகரிப்பு நிறுவனங்கள் அதிகப்படியான லாபங்கள் ஈட்டுகின்றன. ஆனால் ஏற்றுமதியாளர்கள் வரிகள் மூலம் அதிக ரூபாயை செலுத்துகின்றனர். நன்மை மிகவும் பெரிதாக இல்லாவிட்டால், இந்த கொள்முதலைத் தொடர வேண்டுமா என்று பரிசீலிப்பது மதிப்புக்குரியது. எந்த நேரத்திலும் நாம் யாரையும் சார்ந்து இருக்கக் கூடாது” என அவர் எச்சரித்துள்ளார்.