மகளிர் உலகக் கோப்பைக் கிரிக்கெட் தொடரில் முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி, தென்னாப்பிரிக்கா அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
Summary
8 அணிகள் கலந்துகொண்ட மகளிர் உலகக் கோப்பைக் கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வரும் நிலையில், தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, இந்தியா ஆகிய அணிகள் புள்ளிகள் பட்டியலில் முதல் 4 இடங்களுக்கு முன்னேறி அரையிறுதிக்குள் நுழைந்தன. இந்த நிலையில் இறுதிப்போட்டிக்குள் நுழையப் போவது யார் என்பதைத் தீர்மானிக்கும் முதல் அரையிறுதிப் போட்டி நேற்று கவுகாத்தியில் நடைபெற்றது. இதில் தென்னாப்பிரிக்கா அணியும் இங்கிலாந்து அணியும் பலப்பரீட்சை நடத்தின.

eng vs sa womens
இப்போட்டியில் முதலில் டாஸ் ஜெயித்த இங்கிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து தென்னாப்பிரிக்கா அணி முதலில் பேட் செய்ய களமிறங்கியது. தொடக்க வீராங்கனைகளாக கேப்டன் லாரா வால்டார்ட்டும், டாஜ்மின் பிரிட்ஸும் களமிறங்கினர். இந்த ஜோடி, நிலைத்து நின்று நிதானமாக விளையாடியது. அதிலும் கேப்டன் லாரா ஆட்டம் சிறப்பானதாக இருந்தது. பிரிட்ஸ் 45 ரன்களில் வெளியேறினாலும், அதற்குப் பின் களமிறங்கிய 2 வீராங்கனைகள் சோபிக்கத் தவறினாலும் தென்னாப்பிரிக்காவின் ரன் ரேட் கொஞ்சமும் குறையவில்லை. இதற்கிடையே காப், கேப்டன் லாராவுடன் கைகோர்த்தார்.
இந்த இணையும் ரன் ரேட்டை உயர்த்தியபடியே இருந்தது. எனினும், காப் 42 ரன்களில் விக்கெட்டைப் பறிகொடுத்தார். மறுபுறம், கேப்டன் லாரா சதமடித்து ரசிகர்களுக்கு மகிழ்ச்சியைத் தந்தார். ஒருநாள் தொடரில், அவருக்கு இது 10வது சதமாகும். இறுதியில், சோலே டிரையனும் (33 ரன்கள்) தன் பங்குக்கு அதிரடி காட்டினார். 48 ஓவர்கள் வரை களத்தில் நின்ற கேப்டன் லாரா, தனி ஒருவனாக 169 ரன்கள் எடுத்து அசத்தினார். அதில், 20 பவுண்டரிகளும் 4 சிக்சர்களும் அடக்கம். இறுதியில் அந்த அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 319 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணி தரப்பில் சோஃபி 4 விக்கெட்களை வீழ்த்தினார். பின்னர், மிகக் கடுமையான இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீராங்கனைகள் எமி ஜோன்ஸ், டாமி, ஹெதர் நைட் ஆகிய மூவரும் டக் அவுட்டில் முறையில் வீழ்ந்து அதிர்ச்சியளித்தனர்.

Laura Wolvaardt
எனினும் கேப்டன் ப்ருண்ட்டும், அலேசி காப்சியும் மேலும் விக்கெட்களைத் தாரை வார்க்காமல் நிதானத்துடன் விளையாடினர். ஆனாலும், அவர்கள் இருவரும் அரைசதத்தைக் கடந்த நிலையில், தங்களது விக்கெட்டை தாரை வார்த்தனர். பின்னர் வந்த வீராங்கனைகளும் நிலைத்து நின்று விளையாடாததாலும், ரன் குவிக்கத் தவறியதாலும் அந்த அணி, 42.3 ஓவர்களில் 194 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதையடுத்து, தென்னாப்பிரிக்கா அணி 125 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. 4 முறை சாம்பியனான இங்கிலாந்து அணி, இந்த முறை பரிதாபமாக வெளியேறியது.
