நகராட்சி நிர்வாக பணி நியமனத்தில் முறைகேடு தொடர்பாக, அமைச்சர் கே.என்.நேரு விளக்கமளித்துள்ளார்.
Summary
நகராட்சி நிர்வாக பணி நியமனம்
தமிழகத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் லஞ்சம் பெற்றுக்கொண்டு பணி நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக காவல் துறைக்கு அமலாக்கத் துறை கடிதம் எழுதியுள்ளது. அதில், சோதனைகளின்போது கிடைத்த ஆவணங்களின் படி, 2024ஆம் ஆண்டு 2,538 பணியிடங்களுக்கான நியமனத்தில், முறைகேடு நடந்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு பதவிக்கும் 25 முதல் 35 லட்சம் ரூபாய் வரை லஞ்சம் வசூலிக்கப்பட்டிருக்கலாம் என்றும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

கே.என்.நேரு
எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி குற்றச்சாட்டு
இவ்விவகாரம் தொடர்பாக காவல் துறை வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள அவர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைகளில் காலியாக இருந்த பல்வேறு பதவிகளுக்கு புதிய ஊழியர்களை நியமிக்க நடைபெற்ற தேர்வில் முறைகேடு நடைபெற்றதாகவும், இதில் 800 கோடி ரூபாய்க்கும் மேல் பணப்பரிமாற்றம் நடந்துள்ளதாகவும் புகார் எழுந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அமலாக்கத் துறை, வருமான வரித் துறை நடத்திய சோதனைகளில் இந்த ஊழல் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிகிறது என கூறியுள்ள பழனிசாமி, வேலைவாய்ப்புக்காக முயற்சித்தவர்களிடம் அமைச்சர் நேரு மற்றும் அவரது சகோதரர்களின் நிறுவனங்கள் இணைந்து 25 லட்ச ரூபாய் முதல் 35 லட்ச ரூபாய் வரை லஞ்சம் வசூலித்ததாகவும், இந்த விவகாரத்தில் தமிழக காவல் துறையின் பொறுப்பு டிஜிபி நடுநிலையுடன் செயல்பட வேண்டும் என பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்
அதேபோல், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் 888 கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ள தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், இதுதொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ள அவர், தகுதியற்ற நபர்களை பணியமர்த்துவதற்காக பணம் பெற்றுக்கொண்டு மோசடி நடந்திருப்பது, திமுக ஆட்சியில் ஊழல் எந்தளவுக்கு வேரூன்றி இருக்கிறது என்பதை வெளிப்படுத்துவதாக குறிப்பிட்டுள்ளார். ஒரு காலிப் பணியிடத்துக்கு 35 லட்ச ரூபாய் வரை பெற்றுக்கொண்டு தகுதியற்ற நபர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் நயினார் நாகேந்திரன் புகார் கூறியுள்ளார்.

நயினார்
அதேபோல், பாமக தலைவர் அன்புமணியும் குற்றஞ்சாட்டியுள்ளார். அவர், லஞ்சமாக கொடுக்கப்பட்ட பணம், ஹவாலா முறையில் பல இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், அதில் பல அரசியல்வாதிகள், உயர் அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். உள்ளாட்சி துறை பணியிடங்களை நேரடியாக நிரப்பாமல், டி.என்.பி.எஸ்.சி. மூலம் நிரப்ப வேண்டும் என்றும் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். ஆட்சிக்கு வந்தால் ஐந்தரை லட்சம் பேருக்கு வேலை வழங்குவோம் என வாக்குறுதி அளித்த திமுக இன்னும் 50 பேருக்கு கூட நிரந்தர வேலை வழங்க வில்லை என விமர்சித்துள்ளார். அமலாக்கத்துறையின் குற்றச்சாட்டை சிபிஐ விசாரிக்கவும் அன்புமணி கோரிக்கை விடுத்துள்ளார்.
அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்
ஆனால், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் பணி நியமனங்கள் ஒளிவுமறைவற்ற நிலையில் நடந்துள்ளதாக அந்த துறையின் அமைச்சர் நேரு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2019பணியிடங்கள் நேரடி நியமனங்கள்மூலம் நிரப்ப வேண்டும் என்பதற்காக, அண்ணா பல்கலைக்கழம் மூலம் கடந்த 2024ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அறிவிக்கை வெளியிடப்பட்டதை சுட்டிக்காட்டியுள்ளார். தேர்வுகளை நடத்திய அண்ணா பல்கலைக்கழகம் உலகில் தலைசிறந்த சுயாட்சி பல்கலைக்கழகங்களுள் ஒன்று என்றும், அந்த பல்கலைக்கழகம் நேரடியாகவோ, மறைமுகமாகவே நகராட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டது அல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 2 லட்சம் பேர் தேர்வர்கள் விண்ணப்பித்து, ஒரு லட்சத்துக்கு அதிமானோர் தேர்வெழுதி ஒளிவு மறைவற்ற முறையில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு, 2,538 பேர் பணியமர்த்தப்பட்டுள்ளதாக அவர் விளக்கம் அளித்துள்ளார். ஆனால், இதற்கு களங்கம் கற்பிக்கும் முயற்சியை அமலாக்கத்துறை மூலம் மத்திய அரசு மேற்கொண்டுள்ளதாக நேரு குற்றஞ்சாட்டியுள்ளார்.

கே.என்.நேரு
இவ்விவகாரம் குறித்து நகராட்சி நிர்வாக துறையின் செயலாளர் கார்த்திகேயன், ”2,538 உதவி செயற்பொறியாளர்கள் நியமனத்தில் எவ்வித முறைகேடும் நடைபெறவில்லை. அத்முறைகேடு புகார் தொடர்பாக அமலாக்கத்துறை எவ்வித கடிதத்தையும் தங்களுக்கு அனுப்பவில்லை. சம்பந்தப்பட்ட தேர்வு, அண்ணா பல்கலைக்கழகம் மூலம் நேர்மையான முறையில் நடைபெற்றதாகவும், அதுகுறித்து தேர்வர்களிடம் விசாரித்தாலே உண்மை உறுதியாகும்” என்று அவர் குறிப்பிட்டார்.
