ஜெகதீப் தன்கர் குடியரசுத் துணைத்தலைவர் பதவியிலிருந்து விலகி 100 நாட்களாகி விட்டதாகவும் ஆனால் அவருக்கு இன்னும்கூட பிரிவுபச்சாரவிழா நடத்தப்படவில்லை என்றும் காங்கிரஸ் விமர்சித்துள்ளது.
Summary
நாட்டின், 14வது துணைக் குடியரசுத் தலைவராக 2022 ஆகஸ்டில் பதவியேற்ற ஜெகதீப் தன்கர், கடந்த ஜூலை இறுதியில், உடல்நிலையை காரணம் காட்டி அப்பதவியை ராஜினாமா செய்தார். பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்னரே அவர் ராஜினாமா செய்தது, தேசிய அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியது. எனினும் ஜெகதீப் தன்கர் ராஜிநாமா செய்ததால், குடியரசு துணைத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில், தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் சி.பி.ராதாகிருஷ்ணனும், i-n-d-i-a கூட்டணி சார்பில் சுதர்சன் ரெட்டியும் போட்டியிட்டனர். இதில் தமிழகத்தைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றிபெற்று, துணைக் குடியரசுத் தலைவராகப் பதவியேற்றார். சி.பி.ராதாகிருஷ்ணன் பதவியேற்ற பிறகு ஜெகதீப் தன்கர் முதன்முறையாக பொதுவில் தோன்றிய விழாவில் கலந்துகொண்டார்.

ஜெய்ராம் ரமேஷ்
இந்த நிலையில், ஜெகதீப் தன்கர் குடியரசுத் துணைத்தலைவர் பதவியிலிருந்து விலகி 100 நாட்களாகி விட்டதாகவும் ஆனால் அவருக்கு இன்னும்கூட பிரிவுபச்சாரவிழா நடத்தப்படவில்லை என்றும் காங்கிரஸ் விமர்சித்துள்ளது. இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், ”குடியரசு துணைத் தலைவர் வலுக்கட்டாயமாக பதவி விலகவைக்கப்பட்ட விதம் இந்தியா இதுவரை கண்டிராதது, அதிர்ச்சிகரமானது. அவர் தங்களுக்கு நெருங்கிய நண்பர் இல்லை என்றாலும் முறைப்படியான பிரிவுபச்சாரம் தரப்பட்டிருக்க வேண்டும். கடந்த 100 நாட்களில் அவருக்கு என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை” என்று அவர் தெரிவித்துள்ளார்.
