நவம்பரில் நடக்கவிருக்கும் ஜூனியர் ஹாக்கி உலகக்கோப்பையில் தமிழகத்திற்கு வந்து விளையாட முடியாது என்று பாகிஸ்தான் அணி தெரிவித்துள்ளது.
Summary
2025 ஜூனியர் ஹாக்கி உலகக்கோப்பை தொடரில் இந்தியாவிற்கு வந்து விளையாட பாகிஸ்தான் அணி மறுத்துள்ளது. பாகிஸ்தான் அணியின் இந்த முடிவு, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான தற்போதைய அரசியல் சூழ்நிலையை பிரதிபலிக்கிறது. பாகிஸ்தான், பொதுவான ஆடுகளங்களை பரிந்துரைக்க கோரிக்கை வைத்துள்ளது, இது இரு நாடுகளுக்கிடையேயான விரிசலை மேலும் அதிகரிக்கிறது.
2025 ஜூனியர் ஹாக்கி உலகக்கோப்பை தொடர் நவம்பர் 28 முதல் டிசம்பர் 28-ம் தேதிவரை நடைபெறவிருக்கிறது. 24 அணிகள் பங்குபெறும் இத்தொடர் சென்னை மற்றும் மதுரையில் உள்ள ஆடுகளங்களில் நடக்கவிருக்கின்றன. 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளதில் பாகிஸ்தான், இந்தியா அணிகள் பி பிரிவில் இடம்பெற்றுள்ளன..

இந்தியா – பாகிஸ்தான்
இந்த சூழலில் ஏற்கனவே கடந்த ஆகஸ்டு மாதம் பிகாரில் நடைபெற்ற ஜூனியர் ஆசியக்கோப்பையில் பங்கேற்க மறுப்பு தெரிவித்து விலகிய பாகிஸ்தான் அணி, தற்போது ஜூனியர் உலகக் கோப்பையிலிருந்தும் விலகுவதாக தெரிவித்துள்ளது..
பாகிஸ்தான் வைக்கும் கோரிக்கை..
பஹல்காம் தாக்குதல், அதைத்தொடர்ந்து இந்தியாவின் ஆப்ரேசன் சிந்தூர் நடவடிக்கைகளுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இரு நாடுகளுக்கு இடையே விரிசல் அதிகரித்துள்ளது. ஆடவர் மற்றும் பெண்கள் கிரிக்கெட் போட்டிகளில் இரண்டு நாடுகளும் பொதுவான ஆடுகளங்களில் விளையாடி வருவதோடு, தற்போது இரண்டு நாட்டு வீரர்களும் கைக்குலுக்கி கொள்வதை கூட தவிர்த்து வருகின்றனர்.
இந்தசூழலில் பாகிஸ்தான் ஜூனியர் ஹாக்கி அணி இந்தியாவிற்கு வந்து விளையாட மறுப்பு தெரிவித்து தொடரிலிருந்து விலகுவதாக சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு நேற்று தெரிவித்துள்ளது. மேலும் பாகிஸ்தான் விளையாட பொதுவான ஆடுகளங்களை பரிந்துரைக்குமாறும் கோரிக்கை வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் ஜோகூர் சுல்தான் கோப்பையில் 21 வயதுக்குட்பட்ட இந்திய அணி மற்றும் பாகிஸ்தான் அணி வீரர்கள் கைக்குலுக்கி கொண்டது இணையத்தில் வரவேற்பை பெற்றது. ஆனால் தற்போது பாகிஸ்தான் அணி இந்தியாவிற்கு வந்து விளையாட முடியாது என தெரிவித்துள்ளது பேசுபொருளாக மாறியுள்ளது..
