சில மாதங்களில் தங்கம் விலையானது வரலாறு காணாத உச்சம் தொட்டுக் கொண்டே வந்த நிலையில், கடந்த மூன்று நாட்களாக தங்கம் விலை சரிவைக் கண்டிருக்கிறது..
தங்கம் விலை என்பது நம்முடைய தினசரி வாழ்வில் ஒரு பேசுபொருளாகவே இருந்து வருகிறது. ஏனெனில், கடந்த சில மாதங்களில் தங்கம் விலையானது வரலாறு காணாத உச்சம் தொட்டுக் கொண்டே வந்தது. கிட்டதட்ட ஒரு சவரன் ஒரு லட்சம் ரூபாய் வரை நெருங்கக் காத்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், கடந்த சில வருடங்களில் தங்கம் விலை கண்ட ஏற்றம் குறித்தும் கடந்த இரு தினங்களாக ஏற்பட்டுள்ள சரிவு குறித்தும் இங்கே பார்க்கலாம்.

தங்கம் விலை
எங்கிருந்து எங்கோ சென்ற தங்கம் விலை!
2021 அக்டோபர் மாதம் கிராமுக்கு ரூபாய் 4 ஆயிரத்து 487 ஆக இருந்த தங்கம், தற்போது 11 ஆயிரத்து 500 ஆக உயர்ந்துள்ளது. கடந்த ஓராண்டில் மட்டுமே 60 சதவீதம் அளவுக்கு தங்கம் விலை உயர்வு கண்டுள்ளது. ரஷ்யா – உக்ரைன், இஸ்ரேல் – காஸா போரைத் தொடர்ந்து சர்வதேச அளவில் தங்கத்தின் விலை அதிகரிக்கத் தொடங்கியது. கடந்த, ஜனவரி மாதம் ட்ரம்ப் மீண்டும் அமெரிக்க அதிபராக பதவியேற்றதை அடுத்து, பல்வேறு நாடுகள் மீதான வரிகளை பெருமளவில் உயர்த்தினார். இதனால், உலக பொருளாதாரத்தில் நிச்சயமற்ற சூழல் உருவானது. இதன் காரணமாக, முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி
தங்கத்தின் மீது முதலீட்டைக் குவிக்கத் தொடங்கினார். விளைவாக, இவ்வாண்டில் தங்கம் வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
தீபாவளி பண்டிகையில் சரிந்த தங்கம் விற்பனை
தீபாவளி பண்டிகையின்போது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு தங்கம் விற்பனை பத்து சதவீதம் குறைந்து இருப்பதாக சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் சாந்தகுமார் தெரிவித்துள்ளார். தீபாவளி பண்டிகையின்போது தங்கம் விற்பனை 10% சரிவு கண்டுள்ளதாக கூறும் சாந்தகுமார், தங்க விலை உயர்வால் நகைகளின் விற்பனை சரிவுக்கு காரணம் என்றும் மக்கள் நகைகளுக்குப் பதிலாக தங்கம், வெள்ளி கட்டிகளில் முதலீடு செய்கின்றனர் என்றும் தெரிவித்தார்.

தங்கம்
சரிவை சந்திக்கும் தங்கம் விலை
இந்நிலையில்தான், கடந்த சில தினங்களாக தங்கம் விலை சரிவை கண்டுள்ளது. நேற்று ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு 3 ஆயிரத்து 680 ரூபாய் குறைந்தது. அதாவது ஒரு சவரன் 92 ஆயிரத்து 320 ரூபாய்க்கு விற்பனை ஆனது. காலை, மாலை இரு வேளைகளிலும் விலை சரிவை கண்டது. அதாவது, அக்டோபர் 23 ஆம் தேதியான இன்றும் தங்கம் விலை சரிவை கண்டுள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.40 குறைந்து ரூ.11,500-க்கு விற்பனை ஆகிறது. மொத்தமாக சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.92,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையிலும் லேசான சரிவு இருந்தது. கிராமுக்கு ரூ.1 குறைந்து 174 ரூபாயாக விற்பனை ஆகிறது. கிலோவுக்கு 1000 ரூபாய் குறைந்து 1.74 லட்சத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது.
அமெரிக்கா – சீனா இடையே நடைபெற்று வரும் வர்த்தக பேச்சுவார்த்தை உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை சரிவு கண்டுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் மீண்டும் தங்கம் விலை உயரவே வாய்ப்புள்ளதாகவே வல்லுநர்கள் கூறுகின்றனர்.
