
இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில், இலங்கையின் மண் ஒருபோதும் பயன்படுத்தப்படாது என்றும் இது, இலங்கை தொடர்ந்து கடைப்பிடிக்கும் இறையாண்மைக் கொள்கை என்றும் இலங்கைப் பிரதமர் ஹரிணி அமரசூரியா தெரிவித்துள்ளார்.
இலங்கையின் 16வது பிரதமராக பதவியேற்றிருக்கும் ஹரிணி அமரசூரிய மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார். நேற்று, டெல்லி வந்தடைந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்துப் பேசினார். தொடர்ந்து, அவர் பயின்ற புதுடெல்லி பல்கலைக்கழகத்தின் இந்து கல்லூரிக்குச் சென்று மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

ஹரிணி அமரசூரிய, ஜெய் சங்கர்
அப்போது, அவருக்காக ஏற்பாடு செய்திருந்த வரவேற்பு நிகழ்வில் உரையாற்றிபோது, “இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் இலங்கையின் மண் ஒருபோதும் பயன்படுத்தப்படாது” என்ற இறையாண்மைக் கொள்கையை இலங்கை தொடர்ந்து கடைப்பிடிக்கும் என்றும், இந்தக் கொள்கை “புனிதமானது” (sacrosanct) என்றும் இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரிய உறுதியளித்திருக்கிறார்.
முப்பது ஆண்டுகளுக்கு முன், தான் பயின்ற புதுடெல்லி பல்கலைக்கழகத்தின் இந்து கல்லூரியில், மாணவர்களிடத்தில் உரையாற்றிய இலங்கை பிரதமர் அமரசூரிய, ”ஜனநாயகம் என்பது வேடிக்கை பார்ப்பவர்களின் விளையாட்டு அல்ல, அது கடினமான உழைப்பு. இலங்கை சில ஆண்டுகளுக்கு முன் பொருளாதார நெருக்கடிகளில் சிக்கியிருந்தது. அப்போது, உண்மையான நண்பனாக இந்தியா உதவி செய்தது என கூறியதோடு, இலங்கையில் மேற்கொள்ளப்படும் பரந்த அளவிலான மேம்பாட்டுத் திட்டங்களுக்கு இந்திய அரசாங்கம் தொடர்ச்சியாக வழங்கிவரும் உதவிகளையும், நிதிரீதியாகப் பெற்றுத்தரும் ஒத்துழைப்பினையும் பாராட்டிப் பேசினார்.

ஹரிணி அமரசூரிய
தொடர்ந்து, சவாலான காலங்களில் இலங்கைக்கு இந்தியா பெற்றுக் கொடுத்த ஆதரவுகளை நினைவுகூர்ந்த பிரதமர், இலங்கைக்கு நெருங்கிய நேச நாடு என்ற வகையிலும், பிராந்தியத்தின் நீண்டகாலப் பங்காளர் என்ற வகையிலும் இந்தியாவுடனான ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் இலங்கையின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்திப் பேசினார். தொடர்ந்து பேசிய அவர், இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் இலங்கையின் மண் ஒருபோதும் பயன்படுத்தப்படாது” என உறுதிபடத் தெரிவித்துப் பேசினார்.
1991ஆம் ஆண்டு முதல் 1994 வரை புதுடெல்லி பல்கலைக்கழகத்தின் இந்துக் கல்லூரில் சமூகவியல் துறையில் படித்திருந்தவர் இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரிய என்பது குறிப்பிடத்தக்கது.