
சஞ்சய் மஞ்ச்ரேக்கர் என் வாழ்க்கை முழுவதும் என்னை விமர்சித்தார் என்று ஹர்சித் ராணாவுக்கு ஆதரவாக ரவிச்சந்திரன் அஸ்வின் பேசியுள்ளார்.
Summary
இந்திய ஒருநாள் அணியில் ஹர்சித் ராணா தேர்வுசெய்யப்பட்டதற்கு முன்னாள் கேப்டன் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் விமர்சித்திருந்த நிலையில், அவருக்கு பதிலளிக்கும் வகையில் இந்திய தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் பேசியிருந்தார்.
இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்திருக்கும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஹர்சித் ராணாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்யவிருக்கும் இந்திய அணி 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் பங்கேற்று விளையாடவிருக்கிறது.
இதற்கான இந்திய அணி கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட நிலையில், இதில் இந்திய ஒருநாள் மற்றும் டி20 இரண்டுஅணியிலும் ஹர்சித் ராணா இடம்பெற்றதை, முன்னாள் கேப்டனும், தேர்வுக்குழு தலைவராகவும் இருந்த கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கடுமையாக விமர்சித்திருந்தார். மேலும் சஞ்சு சாம்சன், ஜடேஜா, வருண் சக்கரவர்த்தி போன்ற வீரர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதையும் கேள்வி எழுப்பியிருந்தார்..

கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்தை சாடிய கவுதம் கம்பீர்
இந்த சூழலில் சீக்காவின் விமர்சனம் குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியிருந்த கவுதம் கம்பீர், யூடியூப் வியூஸ்களுக்காக 23 வயது இளைஞரை விமர்சிப்பது நியாயமற்றது. என்னை விமர்சியுங்கள், 23 வயது வீரரின் தன்னம்பிக்கையை உடைக்காதீர்கள் என்று பதிலடி கொடுத்திருந்தார்.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பேசியிருக்கும் ரவிச்சந்திரன் அஸ்வின், ஹர்சித் ராணாவுக்கு ஆதரவாக பேசியுள்ளார்.
தனிப்பட்ட தாக்குதல் தவறு..
ஹர்சித் ராணா குறித்து தன்னுடைய யூடியூப் சேனலில் பேசியிருக்கும் அஸ்வின், “அவரை ஏன் தேர்வு செய்கிறார்கள் என்பது எனக்குத் தெரியவில்லை. அவர் சேர்க்கப்பட்டதற்கான காரணத்தை அறிய தேர்வுக் கூட்டத்தில் கலந்து கொள்ள விரும்புகிறேன். என் தரப்பில் இருந்து, நான் பார்க்கும் காரணம் என்னவென்றால் – ஆஸ்திரேலியாவில் பேட்டிங் செய்யக்கூடிய வேகப்பந்து வீச்சாளர் நமக்குத் தேவை. அவரால் அந்த ரோலில் பேட்டிங் செய்ய முடியும் என்று யாரோ நம்புகிறார்கள், அதனால்தான் அவரை 8வது இடத்தில் தேர்வு செய்கிறார்கள்.
எந்தவொரு வீரரையும் தனிப்பட்ட முறையில் தாக்கக்கூடாது என்று நான் எப்போதும் வலியுறுத்தி வருகிறேன். தாக்குதல் மிகவும் தனிப்பட்டதாக மாறும்போது, அது வேறுவிதமாக மாறுகிறது. சஞ்சய் மஞ்ச்ரேக்கரைப் பற்றி நான் பேச விரும்புகிறேன். அவர் என் கிரிக்கெட் வாழ்க்கை முழுவதும் என்னை விமர்சித்துள்ளார். ஆனால் நான் அவர் மீது எந்த வெறுப்பும் கொண்டதில்லை. அவர்கள் சொல்வது சரி அல்லது தவறாக இருக்கலாம், விமர்சனம் தனிப்பட்டதாக இல்லாத வரை, நான் அதை ஏற்றுக்கொள்கிறேன்” என்று பேசியுள்ளார்.

ஹர்சித் ரானா
ஆனால் இதற்கு எதிர்வினை ஆற்றிவரும் ரசிகர்கள், சீக்கா சொன்னதில் எந்த தவறும் இல்லை என்றும், பல வீரர்கள் தங்களை நிரூபித்த பிறகும் அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் பெஞ்சில் இருக்கும்போது, ஹர்சித் ராணா எதன் அடிப்படையில் எடுக்கப்பட்டார் என்றும், முகமது ஷமியை விட ஹர்சித் ராணா சிறந்த பவுலரா என்றும் கருத்திட்டு வருகின்றனர்.. சமீபத்தில் முகமது ஷமி ஒருநாள் அணியில் இடம்பெறாமல் போனதற்கு அதிருப்தி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது..