
கென்யா முன்னாள் பிரதமர் ரெய்லா ஒடிங்கா உயிரிழந்த நிலையில் அவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்த திரண்ட கூட்டத்தை கலைக்க பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
Summary
கென்யாவின் முன்னாள் பிரதமர் ரெய்லா ஒடிங்காவின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலால் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், 2 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர். இந்த துக்க நிகழ்வில் ஏற்பட்ட வன்முறை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்ரிக்கா நாடான கென்யாவில் 2008 முதல் 2013 வரை பிரதமராக பதவி வகித்தவர் ரெய்லா ஒடிங்கா (80). இவருக்கு உடல்நல பாதிப்பு ஏற்ப்பட்ட நிலையில், ஆயுர்வேத சிகிச்சைப் பெறுவதற்காக கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு வந்திருந்தார். இந்நிலையில், அக்டோபர் 15 அன்று மருத்துவமனையில் நடைப்பயிற்சி செய்தபோது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இதையடுத்து அவரின் உடல் அவரின் சொந்த நாடான கென்யாவிற்கு நேற்று கொண்டு செல்லப்பட்டது. அப்போது, அவருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக பல்லாயிரக்கணக்கான கென்ய மக்கள் விமான நிலையத்தில் கூடியிருந்தனர்.

எதிர்பாராத விதமாக அதிக மக்கள் கூடியிருந்ததால், முதலில் முடிவு செய்திருந்த நாடாளுமன்ற கட்டடத்தில் அஞ்சலிக்காக வைக்காமல், கென்ய தலைநகர் நைரோபி விமான நிலையத்திலிருந்து சுமார்,10 கிலோமீட்டரில் தொலைவில் உள்ள ஒரு மோய் சர்வதேச மைதானத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்கு வைப்பதற்காக முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து முன்னாள் பிரதமர் ரெய்லா ஒடிங்கா உடல் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரளுக்கு மத்தியில் கொண்டு செல்லப்பட்டது. 60,000 பேர் அமரக்கூடிய அளவிலான மைதானத்தில்தான் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது என்றாலும், மைதானத்திற்கு வெளியேயும் ஏரளமான மக்கள் திரண்டிருந்தனர்.
அப்போது, மைதானத்தில் வைக்கப்பட்டிருந்த ஒடிங்காவின் உடலைக் காண கதவை உடைத்துக்கொண்டு ஆயிரக்கணக்கானோர் நுழைந்த நிலையில், வன்முறைகளை தவிர்க்க அவர்கள் மீது பாதுகாப்புப் படையினர்,கண்ணீர் புகைக் குண்டுகள் மற்றும் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த மக்கள், அலறியடித்தபடி அங்கிருந்து ஓடினர். இதில், இரண்டு பேர் உயிரிழந்ததாகவும், பலர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. இவ்வாறு, துக்க நிகழ்ச்சி ஒன்றில் ஏற்ப்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.