
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 2,400 உயர்ந்து ரூ. 97,600க்கு விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்வதற்கான காரணம் குறித்துப் பார்க்கலாம்.
வணிகப்பிரிவு செய்தியாளர் ரியாஸ்
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 2,400 உயர்ந்து ரூ.97,600க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன்மூலம் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூபாய் 12 ஆயிரத்தை தாண்டியிருக்கிறது. இவ்வாறு, கடந்த சில மாதங்களாகவே தங்கத்தின் விலை உச்சத்தை தொட்டுவருகிறது. இந்நிலையில், தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதற்கான காரணம் என்ன?

தங்கம் விலை
தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதற்கு இரண்டு முக்கியமான காரணங்கள் இருக்கின்றன. அதில், ஒன்று டிரம்பின் சர்வதேச வரி விதிப்பு. அதன் காரணமாக உலகில் ஒருவித பொருளாதார நிலையற்ற சூழல் ஏற்பட்டிருக்கிறது. அதனால், முதலீட்டார்களுக்கு பங்குச்சந்தையில் முதலீடு செய்வதில் ஒரு தயக்கம் இருக்கிறது. ஏனெனில், பங்குசந்தையில் முதலீடு செய்தால் அடுத்தடுத்த நாட்களில் அதன் போக்கு எப்படி இருக்குமென்று அவர்களுக்கு தெரியவில்லை. இதன் காரணமாக, அவர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதி அதில் முதலீடு செய்வதால் தங்கத்தின் விலை தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது.
இரண்டாவது காரணம், இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகள் டாலரின் சார்பை குறைப்பதற்காக அதிகளவில் தங்கத்தை கொள்முதல் செய்து வருகின்றன. தொடர்ந்து, சீனா மற்றும் இந்திய மத்திய வங்கிகள் தங்க இருப்பை அதிகரித்து வருகின்றன. இவ்வாறு, தங்கத்தின் தேவை அதிகரிப்பதால், தங்கத்தில் விலை அதிகரித்திரிக்கிறது. மேலும், உள்ளூர் அளவில் பண்டிகைகாலம் என்பது ஒரு காரணமாக இருந்தாலும், சர்வதேச அளவில் அரசியல் மற்றும் பொருளாதார காரணங்களே தங்கத்தின் விலை உயர்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

gold
தங்கத்தின் விலை இன்னும் உயர வாய்ப்பிருக்கிறதா?
தங்கத்தின் விலை இந்தாண்டில் ஒரு லட்சத்தை தாண்டலாம் என்றே பெரும்பாலான கணிப்புகள் கூறிவருகின்றன. ஆனாலும், தங்கம் விலை அதிகரித்துக்கொண்டே இருக்கும் என்றும் கூறமுடியாது.
உதரணமாக, அமெரிக்க மத்திய வங்கி (பெடரல்) வட்டி விகிதத்தை கூட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி வட்டி விகிதம் உயர்ந்தால், முதலீட்டார்கள் அமெரிக்க அரசு பத்திரங்களில் முதலீடு செய்ய ஆரம்பிப்பார்கள். ஏனென்றால், வட்டி விகிதத்தை கூட்டும்போது முதலீட்டாளர்களுக்கு கடன்பத்திரங்களின் மூலம் அதிக லாபம் கிடைக்கும். அதன்படி, முதலீட்டாளர்கள் வேறு முதலீடுகளுக்கு செல்லும்போது தங்கம் விலை குறைவதற்கு வாய்ப்பிருக்கிறது. ஆனாலும், தற்போதைய நிலைகளை வைத்துப் பார்க்கும் போது தங்கத்தின் விலை அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
வெள்ளி நிலவரம் என்ன?
வெள்ளியின் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தாலும், கடந்த சில தினங்களாக வெள்ளியின் விலை குறைந்து வருகிறது. வெள்ளியின் விலை உயர்வதற்கான காரணம், தொழிற்செயல்பாடுகளில் வெள்ளியின் தேவை அதிகரித்திருக்கிறது. அதனால், நிறுவனங்களும் வெள்ளிகளை வாங்கி வருகின்றன. தொடர்ந்து தற்போது, பொதுமக்களிடையேயும் வெள்ளிக்கட்டிகளை வாங்கும் போக்கு அதிகரித்திருக்கிறது. சமீபத்தில் கடைகளில் கூட வெள்ளிக்கட்டிகள் தீர்ந்து போயிருந்தன. வெள்ளி என்பது பொருளாதாரத்தை தாண்டி தொழில் சார்ந்த ஒரு பொருள். அவ்வாறு, தொழில் நிறுவனங்கள் வெள்ளியை அதிகளவில் வாங்க ஆரம்பித்து இருப்பதால் வெள்ளியின் விலையும் அதிகரித்து வருகிறது.