
சிறுவர்கள் டேங்கர் லாரியிலிருந்து பாக்கெட் பாக்கெட்டாக பெட்ரோல், டீசல் திருடுவதை பார்த்தேன். சுவாரஸ்யமாக இருக்கிறதே இதை வைத்து படம் செய்யலாம் என இதை பற்றி விசாரித்தால், அதிர்ச்சி மேல் அதிர்ச்சி.
ஹரீஷ் கல்யாண் நடிப்பில் சண்முகம் முத்துசாமி இயக்கியுள்ள படம் `டீசல்’. இப்படம் தீபாவளி ரிலீஸ் ஆக அக்டோபர் 17 வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது.
இந்நிகழ்வில் பேசிய இயக்குநர் சண்முகம் முத்துசாமி “காதல் படம், ஃபேமிலி டிராமா நிறைய பார்க்கிறோம். புதிதாக ஏதாவது எழுத வேண்டும் என முயற்சி செய்தேன். ஒருநாள் மோட்டல் ஒன்றில் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது, சில சிறுவர்கள் டேங்கர் லாரியிலிருந்து பாக்கெட் பாக்கெட்டாக பெட்ரோல், டீசல் திருடுவதை பார்த்தேன். சுவாரஸ்யமாக இருக்கிறதே இதை வைத்து படம் செய்யலாம் என இதை பற்றி விசாரித்தால், அதிர்ச்சி மேல் அதிர்ச்சி. இதனைப் பற்றி தெரிந்து கொள்ள நினைத்த போது, நிறைய பேர் மிரட்டினார்கள், சிலர் விரட்டினார்கள், உயிர் பயம் கூட காட்டினார்கள்.
இதைப் பற்றி மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் என்ன என யோசித்தேன். 2 ரூபாய் பெட்ரோல் டீசல் விலை ஏறினால், நம் மாத பட்ஜெட்டில் 5000 ரூபாய் கூடுதலாக செலவாகிறது என்பதை உணர்ந்தேன். எனவே இந்த திருட்டுக்கு, மக்கள் வாழ்க்கைக்கும் நேரடி தொடர்பு இருக்கிறது. இதனை மக்களுக்கு சொல்ல வேண்டும் என யோசித்தேன். ரகசியத்தை தெரிந்து கொள்ள நமக்கு எப்போதும் ஒரு ஆர்வம் இருக்கும். அப்படியான ரகசியம் தான் இந்த `டீசல்’. நான் ஏன் கொடுக்க வேண்டும், ஏன் தேவையில்லாமல் செலவு செய்கிறேன், இந்தப் பணம் எல்லாம் யாருக்கு சென்று சேருகிறது, இதனால் நான் எப்படி பாதிக்கப்படுகிறேன் எனப் பல ரகசியங்கள் இதில் இருக்கிறது.” என்றார்.