
அஞ்சானின் இந்தி வெர்ஷன் `Khatarnak Khiladi 2’ல், நான் லீனியர் கதை, லீனியராக மாற்றப்பட்டு வெளியிடப்பட்டிருக்கும்.
சூர்யா, வித்யுத் ஜம்வால், சமந்தா, மனோஜ் பாஜ்பாய் நடிப்பில் லிங்குசாமி இயக்கி 2014ல் வெளியான படம் `அஞ்சான்’. தொடர்ந்து பல வெற்றி படங்களை சூர்யா கொடுத்து வந்ததால் இப்படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு எழுந்தது. மேலும் இயக்குநர் லிங்குசாமி படத்தின் மீது இருந்த பெரிய நம்பிக்கையின் காரணமாக ஒரு பேட்டியில் படம் பற்றி ஹைப் ஏற்றி, ரஜினிக்கு எப்படி `பாட்ஷா’வோ, அது போல சூர்யாவுக்கு `அஞ்சான்’ எனப் பேச எதிர்பார்ப்புகள் மிகவும் அதிகமானது. படம் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களையே பெற்றது. அதன் பின் நடந்த மீம்ஸ், ட்ரோல்ஸ் எல்லாம் நாம் அறிந்ததே. இப்போது அந்த அஞ்சானை புது வடிவில் ரீ- ரிலீஸ் செய்ய இருக்கிறார் லிங்குசாமி.
`அஞ்சான்’ படத்தை ரீ ரிலீஸ் செய்யும் முயற்சிகளை சில ஆண்டுகளாக எடுத்து வந்தார் லிங்குசாமி. அதற்கு முக்கியமான காரணமாக அவர் சில பேட்டிகளில் சொன்னது, `அஞ்சான்’ படத்தின் இந்தி டப்பிங் உரிமையை வாங்கிய கோல்ட்மைன், படத்தை புதிதாக எடிட் செய்து யூடியூப்பில் `Khatarnak Khiladi 2′ என்ற பெயரில் வெளியிட்டனர். தியேட்டரில் வெற்றியடையாத இப்படம் இணையத்தில் மிகப்பெரிய ஹிட். 2022ல் வெளியான இப்படத்தை இதுவரை 8 கோடிக்கும் அதிகமான பார்வையாளர்கள் பார்த்திருக்கிறார்கள். இந்த வரவேற்பு லிங்குசாமிக்கு ஒரு உற்சாகத்தை கொடுத்திருக்கிறது. கூடவே பையா படத்தின் ரீ ரிலீஸுக்கு கிடைத்த வரவேற்பும் ஒரு நம்பிக்கையை கொடுத்திருக்கும்.
மேலும் அஞ்சானை அப்படியே வெளியிடுவதை விட, புதிதாக எடிட் செய்து வெளியிடலாம் என்ற முயற்சியை தான லிங்குசாமி கையில் எடுத்தார். முன்பு சொன்ன அஞ்சானின் இந்தி வெர்ஷன் `Khatarnak Khiladi 2’ல், நான் லீனியர் கதை, லீனியராக மாற்றப்பட்டு வெளியிடப்பட்டிருக்கும். அதாவது ராஜூவின் தம்பியிடம் இருந்து துவங்கும் கதையை, ராஜூவிடம் இருந்தே துவங்கி இருப்பார்கள். அப்படி அஞ்சானில் லிங்குசாமி என்ன மாற்றம் செய்திருப்பார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த ரீ – எடிட் செய்யப்பட `அஞ்சான்’ நவம்பர் 28ம் தேதி வெளியாகவுள்ளது. பொதுவாக தெலுங்கு சினிமாவில் தான், வெளியான சமயத்தில் ஹிட் ஆகாத `அத்தடு’, `காலேஜா’ போன்ற சில படங்கள் ரீ-ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. தமிழில் அப்படி திரையரங்கில் வெற்றி பெறாமல் மீண்டும் ரிலீஸ் ஆக உள்ள படம் `அஞ்சான்’ தான். இந்த ரீ-ரிலீஸ் அஞ்சானுக்கு கைகொடுத்தால் பெரிய விஷயமாக பேசப்படும்.