
உலகின் உயரிய விருதுகளில் ஒன்றாக அமைதிக்கான நோபல் பரிசு பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் வரிசையாக அறிவிக்கப்பட்டு வந்த நிலையில் இன்றைய தினம் அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.
இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு அதிக அளவில் கவனம் பெற்று இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் டொனால்ட் டிரம்ப் இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பெறுவதற்கு தானே தகுதியானவர் என பல மாதங்களாக தொடர்ந்து அனைத்து பேட்டிகளிலும் கூறி வருகிறார் . அண்மையில் ஐநா சபையில் பேசிய போது கூட நோபல் பரிசு பெறுவதற்கு நான் பொருத்தமானவன் என திரும்ப திரும்ப கூறினார் .
இஸ்ரேல், பாகிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் பிரதமர்களும் டிரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என பரிந்துரை செய்திருந்தனர். இந்த சூழலில் தான் இந்த ஆண்டு யாருக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி இருந்தது . இந்திய நேரப்படி நண்பகல் 2.30 மணிக்கு நார்வேயிலிருந்து நோபல் கமிட்டி குழுவினர் இந்த ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு யாருக்கு வழங்கப்படுகிறது என்ற அறிவிப்பை வெளியிட்டனர்.
உலகமே உற்று நோக்கிய நிலையில் இந்த ஆண்டு நோபல் பரிசு வெனிசுலா நாட்டை சேர்ந்த மரியா கொரீனா மச்சோடவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. வெனிசுலாவின் ஜனநாயக உரிமைகளை நிலை நாட்டுவதற்காகவும் வெனிசுலா சர்வாதிகார பாதையில் இருந்து ஜனநாயக பாதையை நோக்கி பயணப்படுவதற்கும் அயராது உழைத்ததற்காக அவருக்கு இந்த ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது என நோபல் கமிட்டி குழு அறிவித்திருக்கிறது.
இதன் மூலம் இந்த ஆண்டுக்கு டிரம்ப் மிகவும் ஆசையாக எதிர்பார்த்திருந்த நோபல் பரிசு கனவு என்பது கலைந்து போயிருக்கிறது . அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை பொருத்தவரை தான் அதிபராக பதவியேற்றது முதல் 8 போர்களை முடிவுக்கு கொண்டு வந்திருக்கிறேன் எனவே எனக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் என தொடர்ச்சியாக கூறி வந்தார். இதற்கு முன்பு அமெரிக்க அதிபராக இருந்த பராக் ஒபாமாவிற்கு நோபல் பரிசு வழங்கப்பட்டிருந்தது. அதை கூட சுட்டிக்காட்டி பேசி இருந்த டிரம்ப் ஒன்றுமே செய்யாத ஒபாமாவுக்கே நோபல் பரிசு கொடுத்தார்கள் நான் இத்தனை போர்களை நிறுத்தியுள்ளேன், ஆனால் எனக்கு பரிசு கொடுக்காமல் இருப்பதற்காக காரணத்தை தான் அவர்கள் தேடுவார்கள் என தெரிவித்திருந்தார் .
இந்த சூழலில் தான் அவருக்கு இந்த ஆண்டு நோபல் பரிசு இல்லை என்பது உறுதியாகிவிட்டது. இரு தினங்களுக்கு முன்னர் தான் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் குழுவினர் இடையேயான காஸா போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்தி இருதரப்பின் சம்மதத்தையும் பெற்றிருக்கிறார் டிரம்ப். உலக அளவில் இது மிகப்பெரிய ஒரு விஷயமாக பார்க்கப்படுகிறது.
இருந்தாலும் இந்த ஒப்பந்த அறிவிப்பு வெளியாவதற்கு முன்னதாகவே நோபல் கமிட்டியினர் யாருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என்பதை முடிவு செய்துவிட்டார்களாம்.எனவே இந்த காஸா போர் நிறுத்த ஒப்பந்தம் எப்படி செயல்படுகிறது என்பதை பொறுத்து அடுத்த ஆண்டு ட்ரம்புக்கு நோபல் பரிசு கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக ஒரு தரப்பினர் கூறுகின்றனர்.