
இந்தியாவின் செயலில் உள்ள மொபைல் சந்தாதாரர்கள் 1.08 பில்லியனைத் தாண்டியதாகவும், அதில் நகர்ப்புறங்கள் முன்னிலையிலும், கிராமப்புறங்கள் வேகமாக வளர்ந்து வருவதாகவும் ஆகஸ்ட் 2025இல் வெளியிடப்பட்ட டிராய் அறிக்கை தெரிவிக்கிறது.
இந்தியாவின் தொலைத்தொடர்பு துறை ஆகஸ்ட் 2025-ல் தனது வளர்ச்சிப் பாதையை உறுதியாக தொடர்ந்து வருகிறது. இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) வெளியிட்ட சமீபத்திய புள்ளி விவரங்களின் படி, நாட்டில் செயலில் உள்ள மொபைல் சந்தாதாரர்கள் எண்ணிக்கை 1,086.18 மில்லியனாக உயர்ந்துள்ளது. இது மொத்த 1,167.03 மில்லியன் வயர்லெஸ் சந்தாதாரர்களில் சுமார் 93.07 சதவீதம் ஆகும். இது இந்தியாவின் மொபைல் இணைப்பு வலையமைப்பின் வலிமையை வெளிப்படுத்துகிறது.
ஆதிக்கத்தில் நகர்ப்புறங்கள், வேகமெடுக்கும் கிராமப்புறங்கள்
ஆகஸ்ட் மாத புள்ளி விவரங்கள், நகர்ப்புறங்கள் இன்னும் முன்னிலையில் இருப்பதைக் காட்டுகின்றன. மொத்த வயர்லெஸ் சந்தாதாரர்களில் 54.78 சதவீதம் நகர்ப்புறங்களிலும், 45.22 சதவீதம் கிராமப்புறங்களிலும் உள்ளனர்.
நகர்ப்புற வயர்லெஸ் சந்தாதாரர்கள் ஜூலை மாதத்தில் 641.03 மில்லியனாக இருந்த நிலையில், ஆகஸ்ட் மாதத்தில் 645.27 மில்லியனாக உயர்ந்தனர். அதாவது, 0.66% வளர்ச்சி பதிவாகி இருக்கிறது. அதே நேரத்தில், கிராமப்புறங்களில் 530.88 மில்லியனில் இருந்து 532.76 மில்லியனாக உயர்வு பதிவாகியுள்ளது, இது 0.36% வளர்ச்சியைக் காட்டுகிறது. இது, இந்தியாவின் டிஜிட்டல் இணைப்பு நகர்ப்புறங்கள் மட்டுமன்றி, கிராமப்புறங்களிலும் மெதுவாக வேரூன்றி வருவதைக் காட்டுகிறது.
சேவை வழங்குநரை மாற்றும் கோரிக்கை (MNP)
ஆகஸ்ட் மாதம் மட்டும் 15.05 மில்லியன் மொபைல் பயனர்கள் தங்களது மொபைல் எண்ணை மாற்றாமல் சேவை வழங்குநரை மாற்றும் கோரிக்கையை (MNP) சமர்ப்பித்துள்ளனர். இது, நுகர்வோர் சேவை தரம் மற்றும் இணைப்பு நம்பகத் தன்மைக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதைக் குறிக்கிறது.
மொபைல் இணைப்பு விகிதம் (Tele-density) சிறிது உயர்வு
இந்தியாவின் மொத்த வயர்லெஸ் மொபைல் இணைப்பு விகிதத்தை காட்டும் முக்கிய அளவுகோல், ஜூலை மாதத்தில் 82.75%இலிருந்து ஆகஸ்ட் மாதத்தில் 83.12%ஆக உயர்ந்தது.
இதுவே நகர்ப்புறத்தில், 126.38%ஆகவும், கிராமப்புறத்தில் 58.76%ஆகவும் உயர்வை பதிவு செய்துள்ளன. இது, நகர்ப்புறங்களில் ஒரு நபருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட மொபைல் இணைப்புகள் இருப்பதைக் காட்டுகிறது.
பிராட்பேண்ட் சேவைகளில் தொடர்ச்சியான வளர்ச்சி
பிராட்பேண்ட் துறை மிதமான ஆனால், நிலையான வளர்ச்சியைப் பெற்றுள்ளது. ஜூலை மாதத்தில் 984.69 மில்லியன் என இருந்த பிராட்பேண்ட் சந்தாக்கள், 0.50% மாதாந்திர வளர்ச்சி விகிதத்துடன் ஆகஸ்ட் மாதத்தில் 989.58 மில்லியனாக உயர்ந்தன.
இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (TRAI) தரவுகளின்படி, தற்போது நாடு முழுவதும் 1,426 சேவை வழங்குநர்கள் பிராட்பேண்ட் சேவைகளை வழங்கி வருகின்றனர்.
இந்த வளர்ச்சி, இந்தியாவின் டிஜிட்டல் இந்தியா நோக்கத்தின் கீழ், இணைய அணுகல் மற்றும் இன்டர்நெட் விரிவாக்கம் வெற்றிகரமாக முன்னேறி வருவதை உறுதிப்படுத்துகிறது.