
தமிழ்நாடு அரசு அளித்த 26 பக்க ஆய்வறிக்கையில், ஸ்ரீசன் பார்மா நிறுவனத்தில் 350க்கும் மேற்பட்ட குறைபாடுகள் கண்டறியப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
17 பச்சிளம் குழந்தைகளின் மரணத்திற்கு காரணமான இருமல் மருந்தை தயாரித்த ஸ்ரீசன் பார்மாசூட்டிகல்ஸ் நிறுவன உரிமையாளரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். அடிப்படை வசதிகள் எதுவும் இன்றி 14 ஆண்டுகளாக ஸ்ரீசன் பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனம் எப்படி செயல்பட்டு வந்தது என்ற கேள்வி எழுந்துள்ளது.
மத்திய பிரதேசம் சிந்த்வாரா மாவட்டத்தில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் கோல்ட்ரிப் இருமல் மருந்தை உட்கொண்ட குழந்தை ஒன்று உயிரிழந்தது. அடுத்த 15 நாட்களுக்குள் 5 வயதுக்குட்பட்ட ஆறு குழந்தைகள் சிறுநீரக செயலிழப்பால் உயிரிழந்தன. சளி, இருமல், லேசான காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மருத்துவர்கள் கோல்ட்ரிப் இருமல் சிரப் உள்ளிட்ட வழக்கமான மருந்துகளை பரிந்துரைத்துள்ளனர். அந்த மருந்தை எடுத்துக்கொண்ட பின்பு சில நாட்களுக்குள் அந்த குழந்தைகளுக்கு சிறுநீர் வெளியேறுவது குறைந்தது. இதையடுத்து, அவர்களுக்கு சிறுநீரக தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. டயாலிசிஸ் சிகிச்சை தொடங்கிய சில நாட்களுக்குள் குழந்தைகள் அடுத்தடுத்து இறந்தனர். தற்போது இறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 17- ஆக உயர்ந்துள்ளது
இந்த கோல்ட்ரிப் இருமல் மருந்தை தயாரித்தது காஞ்சிபுரத்தில் உள்ள ஸ்ரீசன் பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனம். காஞ்சிபுரம் சுங்குவார் சத்திரத்தில் உள்ள இந்த நிறுவனத்திற்கு தற்போது சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் உரிமையாளர் ஜி. ரங்கநாதன் தலைமறைவாகிவிட்டார். 73 வயதான ஜி. ரங்கநாதன் சென்னை மருத்துவக் கல்லூரியில் மருந்தியல் பட்டம் பெற்றவர். 40 ஆண்டுகளுக்கும் மேலாக மருந்துத் துறையில் அனுபவம் கொண்டவர். தமிழ்நாட்டு மருந்துத் துறையில் இவர் நீண்டகாலமாக அறியப்பட்டவர். தொழில்முனைவோருக்கு வழிகாட்டியாக இருந்தவர் என்ற நற்பெயரையும் கொண்டிருந்தார். இவர் முன்பு ‘புரோனிட்’ (Pronit) என்ற ஊட்டச்சத்து சிரப்பை அறிமுகப்படுத்தினார், இது உள்ளூர் சந்தையில் ஒரு காலத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.
ஆனால், புரோனிட் சிரப்பின் உட்பொருட்கள், மருந்து கட்டுப்பாட்டுத் துறையின் விதிகளைப் பூர்த்தி செய்யவில்லை என சர்ச்சை எழுந்தது. பின்னர், ஸ்ரீசன் பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனத்தை தொடங்கிய ஜி. ரங்கநாதன் பல்வேறு மருந்துகளை தயாரிக்க தொடங்கினார். அதில் ஒன்று தான் ‘கோல்ட்ரிஃப்’. இந்த இருமல் மருந்து தயாரித்ததில் ஸ்ரீசன் பார்மாசூட்டிகல்ஸ் கடுமையான விதிமீறல்களை செய்துள்ளதாக தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டுத் துறையின் ஆய்வு அறிக்கையில் தெரியவந்துள்ளது. மருந்தின் முக்கிய மூலப்பொருட்களில் ஒன்றான புரோப்பிலீன் கிளைக்கால் (Propylene Glycol) என்ற வேதிப்பொருளுக்குப் பதிலாக, அதிக நச்சுத்தன்மை கொண்ட டை-எத்திலீன் கிளைக்கால் (Diethylene Glycol ) கலக்கப்பட்டுள்ளது. DEG வேதிப்பொருள் பெயிண்டுகள் மற்றும் பிளாஸ்டிக்குகள் போன்றவற்றில் பயன்படுத்தப்படும் நச்சுப் பொருள். இதனை மனிதர்கள் உட்கொள்ளும்போது சிறுநீரகச் செயலிழப்பு மற்றும் மரணத்தை ஏற்படுத்தும்.
2 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு இருமல் மருந்து கொடுக்க தடை.. அரசு அதிரடி உத்தரவு
தமிழ்நாடு அரசு அளித்த 26 பக்க ஆய்வறிக்கையில், ஸ்ரீசன் பார்மா நிறுவனத்தில் 350க்கும் மேற்பட்ட குறைபாடுகள் கண்டறியப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. புரோப்பிலீன் கிளைக்கால் என்ற மூலப்பொருள், ரசீதுகள் இல்லாமல் சட்டவிரோதமாக கொள்முதல் செய்யப்பட்டிருந்தது சோதனையின் போது கண்டுபிடிக்கப்பட்டது. மருந்து தயாரிப்புக்குத் தேவையான அடிப்படை வசதிகள், தகுதியான பணியாளர்கள், சரியான தரச் சோதனைகள் எதுவும் இல்லாமல் ஒரு மருந்து நிறுவனம் 14 ஆண்டுகளாக செயல்பட்டு வந்துள்ளது. இந்த சர்ச்சை காரணமாக, ஸ்ரீசன் பார்மாசூட்டிகல்ஸ் தயாரித்த மருந்துகளின் விற்பனைக்கு மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், கேரளா மற்றும் உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இந்த நிறுவனத்தின் மருந்து விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது.