
இந்தியாவில் அமேசான் , பிளிப்கார்ட் போன்ற இ-காமர்ஸ் தளங்கள் மற்றும் செப்டோ, பிளிங்கிட் போன்ற குயிக் காமர்ஸ் தளங்களை பயன்படுத்துவோர் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது.
சிறு கிராமங்களில் தொடங்கி பெரிய நகரங்கள் வரை அனைவருமே அமேசான் போன்ற செயலிகளில் ஆர்டர் செய்து பொருட்களை பெறுகிறார்கள். இவ்வாறு பொருட்களை ஆர்டர் செய்யும் போது பணத்தை செலுத்துவதற்கு நமக்கு இரண்டு வாய்ப்புகள் வழங்கப்படும். ஒன்று ஆன்லைனிலேயே யுபிஐ , நெட் பேங்கிங் உள்ளிட்ட வழிமுறைகளில் அந்த பொருளுக்கான கட்டணத்தை செலுத்துவது . மற்றொன்று கேஷ் ஆன் டெலிவரி அதாவது பொருளை நமக்கு டெலிவரி செய்யும் போது அதற்கான பணத்தை நாம் வழங்குவது.
கேஷ் ஆன் டெலிவரி வழங்கும்போது இகாமர்ஸ் தளங்கள் வாடிக்கையாளர்களிடம் கூடுதலாக கட்டணம் வசூல் செய்கின்றனர். நாமே கூட இந்த வித்தியாசத்தை சந்தித்திருப்போம், அதாவது யுபிஐ முறையில் செலுத்தினால் இவ்வளவு கேஷ் ஆன் டெலிவரியில் செலுத்தினால் இவ்வளவு என காண்பிக்கும். அதில் கேஷ் ஆன் டெலிவரியில் கட்டணம் சற்றே அதிகமாக இருப்பதை காணலாம்.
இது தொடர்பாக மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக விசாரணையை தொடங்கி இருக்கிறது. மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை இ காமர்ஸ் தளங்கள் கேஷ் ஆன் டெலிவரிக்கு கூடுதல் கட்டணத்தை வசூல் செய்கின்றன என தொடர்ச்சியாக மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறைக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தன .இதனை அடுத்து இது தொடர்பாக விசாரணையை தொடங்கி இருப்பதாக நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஸி தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
கேஷ் ஆன் டெலிவரிக்கு கூடுதல் கட்டணம் என்ற செயல்முறை என்பது ஒரு டார்க் பேட்டர்ன் செயல்முறை என குறிப்பிட்டு இருக்கும் அவர் இது நுகர்வோரை தவறாக வழி நடத்துவது மட்டுமல்லாமல் ஒரு நுகர்வோரிடமிருந்து சுரண்டும் நிகழ்வாகவும் பார்க்கப்படுகிறது என குறிப்பிட்டு இருக்கிறார். இந்த இகாமர்ஸ் தளங்களின் செயல்பாடுகளை உன்னிப்பாக கவனித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று அவர் தெரிவித்திருக்கிறார்.
இந்தியாவில் இ-காமர்ஸ் பிரிவு வேகமாக வளர்ந்து வரக்கூடிய நிலையில் இந்த பிரிவில் வெளிப்படைத் தன்மையையும் நியாயமான நடைமுறைகள் பின்பற்றப்படுவதையும் உறுதி செய்யவே அரசு விசாரணையை தொடங்கி இருக்கிறது என கூறும் அவர் நுகர்வோர் உரிமைகளை மீறுபவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருக்கிறார் .
இந்தியாவில் அண்மையில் தான் பிளிப்கார்ட், அமேசான் போன்ற இகாமர்ஸ் தளங்களை அதிக அளவில் மக்கள் பயன்படுத்துகின்றனர். ஸ்மார்ட் போன்கள், மின்னணு சாதனங்கள், வீட்டு உபயோக பொருட்கள், துணிமணிகள் என பல பொருட்களையும் இவற்றின் மூலம் மக்கள் வாங்குகின்றனர். குறிப்பாக தற்போது இந்த நிறுவனங்கள் பண்டிகை கால தள்ளுபடிகளையும் செயல்படுத்தி இருக்கின்றன. இத்தகைய சூழலில் தான் கேஷ் ஆன் டெலிவரிக்கு அதிக கட்டணம் வசூல் செய்யப்படுவது தொடர்பான விசாரணையை அரசு தொடங்கி இருக்கிறது .
கடந்த மே மாதம் கூட மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சகம் இ காமர்ஸ் நிறுவனங்களின் பிரதிநிதிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியது. அப்போது எந்த விதமான டார்க் பேட்டர்ன் பிராக்டீஸ் அதாவது தவறான முறையில் வாடிக்கையாளர்களை வழிநடத்தக்கூடிய எந்த ஒரு செயல்களிலும் ஈடுபடக் கூடாது, அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு தான் செயல்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
ஒருவேளை இந்த நிறுவனங்கள் மக்களை தவறாக வழிநடத்தி அவர்களிடமிருந்து கூடுதல் கட்டணங்களை வசூலிப்பது கண்டறியப்பட்டால் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் அடிப்படையில் இந்த நிறுவனங்களுக்கு அபராதங்கள் மற்றும் சில கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.