
அக்டோபர் 2025 முதல் வீட்டில் ஆதார் பதிவு செய்வதற்கான சேவைகள் வழங்குவதற்கு GST உட்பட 700 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) ஆதார் பதிவு செய்வது மற்றும் அப்டேட் செய்வதற்கான சேவைகள் சம்பந்தப்பட்ட கட்டணங்களில் மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளது. இந்த புதிய கட்டணங்கள் அக்டோபர் 1, 2025 முதல் செப்டம்பர் 30, 2028 வரை செயல்படும். மேலும் அக்டோபர் 1, 2028 முதல் செப்டம்பர் 30, 2031 வரை அமல்படுத்தப்படும் கட்டணங்களையும் ஆணையம் அறிவித்துள்ளது.
பயோமெட்ரிக் விவரங்களை அப்டேட் செய்வதற்கான கட்டணங்கள்
கைரேகை, கருவிழி மற்றும் புகைப்படம் போன்ற பயோமெட்ரிக் சம்பந்தப்பட்ட விவரங்களை அப்டேட் செய்வதற்கான கட்டணங்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 5 முதல் 7 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் முதல் முறை செய்யும் கட்டாய பயோமெட்ரிக் அப்டேட்டுக்கு கட்டணம் கிடையாது. அதேபோல 15 முதல் 17 வயது வரையிலான டீனேஜர்களுக்கும் ஒருமுறை பயோமெட்ரிக் அப்டேட் இலவசமாக செய்து தரப்படும். பிற சூழ்நிலைகளில் 2025 முதல் 2028 வரை 125 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும். எனினும் நிலுவையில் உள்ள அப்டேட்டுகளை உடனடியாக பெறும் பொருட்டு UIDAI செப்டம்பர் 30, 2026 வரை 7 முதல் 15 வயதுக்கு உட்பட்ட குழுவினருக்கான கட்டணங்களையும் தள்ளுபடி செய்துள்ளது. அக்டோபர் 2028 முதல் பயோமெட்ரிக் அப்டேட் செய்வதற்கான கட்டணம் 150 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.