இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவு குறைந்துள்ள நிலையில், பாஜக மற்றும் காங்கிரஸ் ஆட்சியில் ரூபாயின் மதிப்பு எந்த அளவு குறைந்துள்ளது என்பது குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
கடந்த 2014-ம் ஆண்டு மே மாதம் 26-ம் தேதி பிரதமர் மோடி முதல்முறையாக இந்தியாவின் பிரதமராகப் பொறுப்பேற்றார். அவர் ஆட்சியில் அமர்ந்த அன்று அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 58 ரூபாய் 71 பைசாவாக இருந்தது.
அதன்பின்னர் பிரதமர் மோடி 10 ஆண்டுகளை நிறைவு செய்ததோடு, தற்போது மூன்றாவது முறையாகவும் வென்று பிரதமராக தொடர்ந்து வருகிறார். அவர் பிரதமராக பதவியேற்று 12 ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில், தற்போது அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 96 ரூபாய் 86 பைசாவாக அதிகரித்துள்ளது.

அதாவது மோடி பிரதமரானதில் இருந்து தற்போது வரை ரூபாயின் மதிப்பு 65 சதவீதம் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. இதுவே 2004 முதல் 2014 வரையிலான 10 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியில், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கிட்டத்தட்ட 30 சதவீத வீழ்ச்சியைச் சந்தித்திருந்தது. அந்த வகையில் காங்கிரஸ் ஆட்சியை விட பாஜக ஆட்சியில் ரூபாயின் மதிப்பு இரண்டு மடங்கு அதிகமான வீழ்ச்சியை சந்தித்துள்ளது என்பது புள்ளிவிவரங்களின் அடிப்படையில் தெரியவந்துள்ளது.
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த 2004-ம் ஆண்டு மே மாதம் அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 45.32 ரூபாயாக இருந்த நிலையில், 2014-ம் ஆண்டு மே மாதம் 58 ரூபாய் 71 பைசாவாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
காங்கிரஸ் ஆட்சியில் 2011-ல் டாலருக்கு எதிராக 44 ரூபாய் ஆக இருந்த இந்திய ரூபாயின் மதிப்பு, 2013 ஆகஸ்டில் வரலாறு காணாத சரிவைச் சந்தித்து 68.80 ரூபாய் வரை சென்றது. வெறும் இரண்டே ஆண்டுகளில் ரூபாய் மதிப்பு சுமார் 55% சரிந்தது. ஆனால் அடுத்த ஒரு ஆண்டில் அரசு எடுத்த நடவடிக்கை காரணமாக ரூபாயின் மதிப்பு 58 ரூபாய் வரை உயர்ந்தது.

அதே போல பாஜக ஆட்சிக்காலத்திலும் 2022-ம் ஆண்டு தொடக்கத்தில் டாலருக்கு எதிராக 74 ரூபாயாக இருந்த இந்திய ரூபாயின் மதிப்பு 4 ஆண்டில் 96.86 ரூபாய் என்ற வரலாற்றுச் சரிவை எட்டியுள்ளது. இது சுமார் 31% சரிவாக அமைந்துள்ளது.
காங்கிரஸ் ஆட்சியில் கடந்த 2008-ம் ஆண்டு உலகளாவிய பொருளாதார மந்தநிலை ஏற்பட்டு உலகமே பெரும் பொருளாதார சரிவில் சிக்கிக்கொண்டது. இதனால் வளரும் நாடுகளில் முதலீடு செய்த முதலீட்டாளர்கள் தங்கள் முதலீட்டை திரும்ப பெற்றுக்கொண்டனர். இதனால் இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளின் ரூபாய் மதிப்பு கடுமையாக சரிந்தது.

அதனைத் தொடர்ந்து அதே காலகட்டத்தில் துனிசியா, எகிப்து, ஏமன், சிரியா, ஈராக் மற்றும் லிபியா போன்ற நாடுகளில் உள்நாட்டுப் போர் நடைபெற்றது. அதோடு ஈரான் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்தது. இதன் காரணமாக அந்த காலகட்டத்தில் கச்சா எண்ணெய் விலை, அதாவது 2008-ம் ஆண்டு கச்சா எண்ணெய் பேரல் 147.27 அமெரிக்க டாலர் என உச்சம் தொட்டது. அப்போதில் இருந்து 2014-ம் ஆண்டு வரை கச்சா எண்ணெய் பேரல் விலை 100 டாலருக்கு கீழே இறங்கவேயில்லை.
அந்த வகையில் தற்போது ஈரான் மீதான அமெரிக்காவின் போர் காரணமாக கச்சா எண்ணெய் பேரல் விலை 110 அமெரிக்க டாலர் வரை அதிகரித்துள்ளது. கடந்த சில மாதங்களில் ரூபாயின் மதிப்பு கடுமையாக குறைய இதுவே முக்கிய காரணமாக விளங்குகிறது. அந்த வகையில் காங்கிரஸ், பாஜக என இரண்டு கட்சிகளின் ஆட்சியிலும் இந்திய ரூபாயின் மதிப்பு சரிய வளைகுடா நாடுகளில் நடந்த போரே முக்கிய காரணமாக திகழ்ந்துள்ளது.
